திருவாரூர்: ”பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொள்ள வேண்டும்” - ஜி....
Doctor Vikatan: ரத்த அழுத்த அளவை வைத்து மாரடைப்பின் அறிகுறியைத் தெரிந்துகொள்ள முடியுமா?
Doctor Vikatan: ரத்த அழுத்தத்தின் அளவை வைத்து மாரடைப்பைத் தெரிந்துகொள்ள முடியுமா... இதயத்தின் எந்த இடத்தில் மாரடைப்பு வந்துள்ளது என்பதை அது காட்டிக் கொடுக்கும் என்கிறார்களே...
அதை எப்படிப் புரிந்துகொள்வது... லோடிங் டோஸ் ( Loading dose) எனப்படும் மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

மாரடைப்புக்கான அசாதாரண அறிகுறிகளை உணரும் பட்சத்தில், பிபி எனப்படும் ரத்த அழுத்த அளவைக் கணக்கிடும் கருவி வீட்டில் இருந்தால், அதை வைத்து பிபி அளவைச் சரிபார்க்கலாம்.
இப்படி வீட்டிலேயே பிபி மானிட்டர் வைத்துச் சரிபார்க்கும்போது, ரத்த அழுத்தமானது 100-க்கும் கீழே காட்டினால், அது குறைவான ரத்த அழுத்தம் எனக் கணக்கிடப்படும். அந்த நேரத்தில் நைட்ரேட் மாத்திரைகளை எடுக்கக்கூடாது.
வலது பக்கத்தில் பாதிப்பா, இடது பக்கத்தில் பாதிப்பா என்பன மருத்துவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள். வலது பக்க இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.
இதயத்தின் எந்தப் பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சாதாரண மனிதர்களால் வலியையோ அல்லது பிபி அளவையோ மட்டும் வைத்துத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது. அதை மருத்துவர்கள் ஈசிஜி (ECG) மற்றும் எக்கோ (ECHO) பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்வார்கள்.

மாரடைப்பு என்று சந்தேகம் வந்தவுடனேயே, ஒருவரது உயிரைக் காப்பாற்றக் கொடுக்கப்படும் மிக முக்கியமான அவசரகால மாத்திரைகளின் தொகுப்பே 'லோடிங் டோஸ்' எனப்படும். அதில் குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகள் இருக்கும்.
மாரடைப்பு அறிகுறி தெரிந்தால், பிபி குறைவாக இருந்தால் நைட்ரேட் மாத்திரையைத் தவிர்க்க வேண்டும். ஆனால், 'லோடிங் டோஸ்' மாத்திரைகளை உடனடியாகச் சாப்பிட்டுவிட்டு, தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இதுவே உயிரைக் காக்கும் சிறந்த வழிமுறையாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















