Jio Hotstar: 'த்ரிடம்', 'லிங்கம்' - இம்மாத ஜியோ ஹாட்ஸ்டார் லைன் அப்-கள் என்னென்ன...
Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?
Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏசி எப்படி வேலை செய்கிறவது என்பதைப் புரிந்துகொண்டால், உங்கள் பிரச்னைகளுக்கு நீங்களே தீர்வுகள் கண்டுபிடித்துவிடுவீர்கள்.
ஏசி கருவியானது நம் அறைக்குள் உள்ள ஈரப்பதம் நிறைந்த வெப்பக்காற்றை உறிஞ்சி, ரெஃப்ரிஜெரன்ட் லிக்யுட் (Refrigerant Liquid) மூலம் குளிரூட்டப்பட்ட சுருளின் வழியாக, ஒரு விசிறியின் மூலம் மீண்டும் நம் அறைக்குள் குளிர்ந்த காற்றைப் பரவச் செய்கிறது.
அந்தக் காற்றில் ஈரப்பதம் குறைந்துவிடும். குளிரூட்டப்பட்ட சுருளின் வழியாக காற்று ஊதப்படும்போது அந்தச் சுருளின் மேல் நீர்த்துளிகளாக மாறி, ஈரப்பதம் கீழே விழுந்து, குழாய் வழியே தண்ணீராக மாறி வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் சில விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகும்.
ஈரப்பதம் குறைந்த காற்று ஏசியிலிருந்து வரும்போது நம் சருமமும் கண்களும் வறண்டுவிடும். நம் சுவாசப்பாதையும் வறண்டுவிடும். இதன் விளைவாக கண்கள் சிவப்பது, கண்களில் எரிச்சல் ஏற்படுவது, சருமத்தில் அரிப்பு, உதடுகள் வறட்சி, தொண்டை வறட்சி, இருமல், அடிக்கடி சுவாசத்தொற்று ஏற்படுவது போன்ற பிரச்னைகள் வரலாம்.
குளிர்ந்த காற்று நேரடியாக நம் உடலின் மேல் படும்போது, தசைவலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம். அறைக்குள் குளிர்காற்றானது ஒரு வடிகட்டியின் வழியே அனுப்பப்படும். அந்த வடிகட்டியில் நாளடைவில் தூசி படிந்துவிடும். அதில் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பூஞ்சைத் தொற்றும் ஏற்படும். அதனால் அடிக்கடி மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
நாம் சுவாசிக்கும்போது ஆக்ஸிஜனை உள்ளே இழுத்துக் கொண்டு, கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோம். ஏசி இயங்கும்போது அறை மற்றும் ஜன்னல் கதவுகளை மூடி வைப்போம். அதனால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகமாகும்போது தலைவலி மற்றும் சோர்வு ஏற்படலாம். எல்லோருக்கும் இவை எல்லாம் வராவிட்டாலும் சின்னச்சின்ன பிரச்னைகள் வரலாம் என்கின்றன ஆய்வுகள்.

ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைத்து இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். இது வறட்சியைக் குறைக்கும். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும்போது கண்களை இமைக்கவே மறந்து விடுவோம்.
கண்களை இமைக்கும்போதுதான் கண்களின் உள்ளே உள்ள தூசு வெளியேறி, நீர்ப்படலம் உருவாகி, கண்கள் வறண்டுபோவது தவிர்க்கப்படும். எனவே, நினைவில் வைத்திருந்து அடிக்கடி கண்களை மூடித் திறக்க வேண்டும். கண்களின் வறட்சியை நீக்கும் சொட்டு மருந்துகளை உபயோகிக்கலாம்.
20-20-20 ரூல் என்றே சொல்வார்கள். ஒவ்வோர் 20 நிமிடங்களுக்கும் 20 அடி தொலைவில் உள்ள காட்சிகளை 20 நொடிகளாவது பார்க்க வேண்டும்.
ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக நம் தலையிலோ, முகத்திலோ படாதபடி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். அதனால் தலைவலி, உடல் வலி, தும்மல் குறையும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கொரு முறையாவது இருக்கையை விட்டு எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.
மாய்ஸ்ச்சரைசர் தடவிக்கொள்வதன் மூலம் உதடுகள் மற்றும் சரும வறட்சியைப் போக்கலாம். உங்கள் ஏசி சரியாகச் சுத்தம் செய்யப்படுகிறதா என்று பாருங்கள். சுத்தமான காற்று உள்ளே வரும்படி அவ்வப்போது கதவு, ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்கு தூங்குவதை உறுதிசெய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















