செய்திகள் :

சட்டை கிழிந்த பிகில் FDFC முதல் GOAT வரை - ஒரு ரசிகனின் எமோஷனல் டைரி!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு மனிதனின் குழந்தைப் பருவ நினைவுகள் அவனது வாழ்நாள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கும். எனது குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கும் போது, அதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருப்பவர் இளைய தளபதி விஜய் அவர்கள். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, என் மனதில் அவரைப் பற்றிய எண்ணங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் வெற்றி படம் தோல்வி படம் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல எனக்கு, அவர் படம் என்றாலே பலமுறை ரசித்துவிடுவேன்

அழகிய தமிழ் மகன்
அழகிய தமிழ் மகன்

விஜய் அவர்கள் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமல்ல; கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் வாழும் ஒரு உணர்வு. எனக்கு அவர் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, என் சொந்த அண்ணனைப் போன்றவர். நான் 2003-ஆம் ஆண்டு பிறந்ததால், விஜய் அவர்கள் ஒரு நடிகராக இருந்து "இளைய தளபதி"யாக உயர்ந்த பயணத்தை காணவில்லை. ஆனால் இளைய தளபதியாக இருந்த அவர் இன்று "தளபதி"யாக உயர்ந்ததை என் கண் முன்னே பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.

பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதற்கு முன்பே நான் விஜய் அண்ணாவின் ரசிகனாக மாறிவிட்டேன். திரையில் அவர் சிரித்தால் நானும் சிரிப்பேன்; அவர் அழுதால் நானும் அழுவேன். அவரது அசைவுகள், நடை, உடை என அனைத்தையும் பின்பற்ற முயற்சிப்பேன்.ஆதி படத்தில் அறிமுகமான அவர், பின்னர் வந்த "போக்கிரி" மற்றும் "அழகிய தமிழ் மகன்" போன்ற திரைப்படங்கள் என்னை அவரது தீவிர ரசிகனாக மாற்றின.

நான் முதன்முதலில் பெரிய திரையில் பார்த்த விஜய் திரைப்படம் "வேட்டைக்காரன்". படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. காவல்துறையினர் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அந்தப் படத்தில் அவர் அணிந்தது போல உள்ளே பனியன், அதன் மேல் சட்டை அணியும் பழக்கத்தை அப்போது தொடங்கினேன். இன்று வரை அந்தப் பழக்கம் தொடர்கிறது.

அதன்பிறகு "சுறா" வெளியானது. அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்று பின்னாளில் அறிந்தேன். ஆனால் அப்போது நான் ஒரு சிறுவன். என் நாயகனை ரசிப்பதே எனது மகிழ்ச்சி. அந்தப் படத்தில் பார்வையற்றவர்கள் விற்கும் பேனாவை வாங்கும் காட்சியும், சில உணர்ச்சிகரமான வசனங்களும் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

காவலன்

அடுத்ததாக வந்த "காவலன்" திரைப்படத்தில் நான் ரசித்து வளர்ந்த காதல் நாயகன் விஜயை மீண்டும் பார்த்தேன். "வேலாயுதம்" திரைப்படத்தில் அவர் அணிந்த சூப்பர் ஹீரோ தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுபோன்ற உடை இல்லாததால் ஸ்வெட்டர் அணிந்து அதன் மேல் பள்ளி சீருடையை அணிந்து பள்ளிக்குச் சென்ற நாட்களும் உண்டு. அதற்காக அப்பாவிடம் திட்டுகளும் வாங்கியிருக்கிறேன்.

"நண்பன்" மற்றும் "துப்பாக்கி" திரைப்படங்கள் விஜய் அண்ணாவின் இரு வேறுபட்ட பரிமாணங்களைக் காட்டின. பள்ளியில் நண்பர்களுடன் அந்தப் படங்களைப் பற்றி பேசுவது, அவரது ஸ்டிக்கர்களை வாங்கி பெருமையாக காட்டுவது என்று என் பள்ளி நாட்கள் நகர்ந்தன.

பின்னர் "தலைவா" திரைப்படத்தின் வெளியீட்டுப் பிரச்சினை என்னை மிகவும் பாதித்தது. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் விஜய் அண்ணாவை மனம் உடைந்த நிலையில் காண நேர்ந்தது. ஒரு ரசிகனாக அது எனக்கு வேதனையான அனுபவமாக இருந்தது.

"ஜில்லா" மற்றும் "கத்தி" திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். குறிப்பாக "கத்தி" திரைப்படத்தின் ஜீவானந்தம் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. காதல், நகைச்சுவை, சண்டை, சமூகக் கருத்து என அனைத்தும் நிறைந்த ஒரு சிறந்த திரைப்படமாக அது அமைந்தது. இன்று வரை எனக்குப் பிடித்த விஜய் திரைப்படங்களில் "கத்தி" முக்கிய இடம் பெறுகிறது.

"புலி" திரைப்படத்திற்கு வந்த விமர்சனங்கள் என்னை வருத்தின. ஆனால் அடுத்த ஆண்டு வந்த "தெறி" திரைப்படம் அந்த வருத்தங்களை மறக்கச் செய்தது. இடைவேளையின்போது என் அண்ணன், "நீ புலி படத்தையே நூறு தடவை பாத்த; இத எத்தனை தடவை பாப்பியோ?" என்று கூறியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதன்பிறகு வெளியான அனைத்து திரைப்படங்களையும் குடும்பத்துடன் தவறாமல் திரையரங்கில் பார்த்தோம். விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், விஜய் திரைப்படம் என்றாலே மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்களிடம் இருந்தது.

`மெர்சல்' வெற்றிமாறன்

எனக்கு மறக்க முடியாத திரையரங்கு அனுபவம் "மெர்சல்". "பைரவா" திரைப்படத்திற்குப் பிறகு வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மூன்று வேடங்கள், சமூகக் கருத்து மற்றும் சிறந்த நடிப்பு மூலம் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தளபதி விஜயின் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை உருவாக்கிய திரைப்படங்களில் அதுவும் ஒன்று.

"பிகில்" திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சட்டை கிழிந்த அனுபவமும் இன்று வரை நினைவில் இருக்கிறது.

2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு வந்தது. "மாஸ்டர்" திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஒரு வருடம் கழித்து 2021-ல் விஜய் அண்ணாவை திரையில் பார்த்தபோது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதன்பிறகு வந்த "பீஸ்ட்" திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்றாலும், விஜய் அண்ணாவின் திரை ஆளுமையும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தன. 

"வாரிசு" திரைப்படத்தில் நான் ரசித்து வளர்ந்த இளைய தளபதி விஜயை மீண்டும் பார்த்த மகிழ்ச்சி கிடைத்தது.

அதே ஆண்டில் வெளியான "லியோ" திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் அண்ணா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். "வாரிசு" மற்றும் "லியோ" திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக செமஸ்டர் தேர்வு மதியம் இருந்தபோதும் காலைக் காட்சிக்குச் சென்றது என் கல்லூரி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாகும்.

பின்னர் வந்த "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் நாயகன், வில்லன், Sci fi என புதிய முயற்சிகளை அவர் செய்திருந்தார். பல்வேறு தோற்றங்களில் அவரைப் பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அந்தப் படம் வெளியாகும் முன்பே, தனது அடுத்த திரைப்படம்தான் கடைசித் திரைப்படம் என்று விஜய் அண்ணா அறிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு ரசிகனாக எனக்கு பேரிடியாக இருந்தது. "GOAT" திரைப்படத்தின் இறுதியில் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை ஒப்படைக்கும் காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.

இன்று அவரது கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் "ஜனநாயகன்" திரைப்படத்திற்காக கோடிக்கணக்கான ரசிகர்களுடன் நானும் காத்திருக்கிறேன்.

மெர்சல்

இறுதியாக ஒரு விஷயம். ஒரு திரைப்படத்தில் விஜய் அண்ணா, "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்; சட்டம் Suddenஆ கொல்லும்" என்று ஒரு வசனம் பேசியிருப்பார். இன்று அது ஒரு வேடிக்கை வசனமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சிறுவயதில் அது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கத்தின் வெளிப்பாடாக இன்று நான் ஒரு சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவனாக, என் இறுதித் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.

விஜய் அண்ணா எனக்கு வெறும் நடிகர் அல்ல. என் குழந்தைப் பருவம், என் வளர்ச்சி, என் நினைவுகள், என் கனவுகள் அனைத்திலும் ஒரு பகுதியாக இருந்தவர். அவரது திரைப்படங்களுடன் நான் வளர்ந்தேன். அவர் எனக்கு ஒரு நடிகர் என்பதைக் கடந்து, ஒரு அண்ணன், ஒரு முன்மாதிரி, ஒரு உத்வேகம்.

என் நெஞ்சில் என்றும் குடியிருக்கும் என் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், உங்களுக்கான என் அன்பும் மரியாதையும் என்றும் மாறாது.

பிரியமுடன்,

ராஜ் முகிலன்

அரசியல் கடந்த அக்மார்க் எண்டர்டெய்னர்! 'நாளைய தீர்ப்பு' டூ 'தளபதி'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விசில் சத்தத்தில் அடைத்த காதுகள்! - தீபாவளி FDFS திருவிழாவும், அர்ஜுனரு வில்லு ஆட்டமும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`பூவே உனக்காக' தந்த திருப்புமுனை டூ 500 கோடி பாக்ஸ் ஆபீஸ்! - விஜய்யின் அசாத்திய சரித்திரப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்று புரியாத வயது... இன்று புரிகிறது அது படம் அல்ல, காவியம்| பாரதிராஜாவின் காலத்தால் அழியாத படைப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``தேவர்ங்கறது படிச்சு வாங்கின பட்டமா?” - சாதியக் கட்டமைப்பை முகத்தில் அறைந்த பாரதிராஜா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அழியாத காவியங்களின் அலைவரிசை - தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியவருக்கு ஒரு ரசிகனின் அஞ்சலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க