செய்திகள் :

``ஸ்டாலின் எவ்வளவு இடம் கொடுத்தாலும் அது நமக்குப் போதும்; ஏன்னா.!’’ - மணி சங்கர் அய்யர் அதிரடி

post image

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர், `கேரளாவில் காங்கிரஸ் வெற்றிபெறாது. இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும்' என்று கூறி அடுத்த சர்ச்சையைப் பற்ற வைத்துள்ளார். அதுகுறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

``கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று நீங்கள் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையாகியுள்ளதே?”

``நான் ஒரு காந்தியவாதி. நான் உண்மையைத்தான் பேசுவேன். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அருமையாக தன் வேலையை செய்திருக்கிறது. கேரளாவில் காங்கிரஸார் ஒருவருக்கொருவர் நாயும் பூனையும் போல சண்டை போட்டுக்கொள்கின்றனர். அப்படி இருந்தால் யார் நமக்கு ஓட்டு போடுவார்கள்?

கம்யூனிஸ்ட் பக்கம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அங்கே ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அங்கே யார் தலைவர் என்பது தெரிகிறது. ஆனால், காங்கிரஸில் ரமேஷ் சென்னிதலாவா, சசிதரூரா, வி.டி.சதீஷனா என்பதே தெரியவில்லை. சதீஷன் அருமையான நபர். அவரை தலைவராக்கினால் மட்டுமே பினராயி விஜயனை தோற்கடிக்க முடியும் என்கிறேன் நான்.

ஆனால், மற்றவர்களை வைத்து எப்படி வெற்றிபெற முடியாது. ஒரு காங்கிரஸ்காரனாக காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், ஒரு காந்தியவாதியாக உண்மையைச் சொல்ல வேண்டும். சத்தியத்தைப் பேச வேண்டும். அந்த சத்தியத்தின் அடிப்படையில்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட்தான் வெற்றிபெறும் என்றேன்”

மணி சங்கர் அய்யர்
மணி சங்கர் அய்யர்

``கேரளாவில் காங்கிரஸ் எதிர்க் கட்சியாக இருக்கும் சூழலில், அங்கே கம்யூனிஸ்ட்தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சொல்வது காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தாதா?”

``எனக்கும் அதற்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை. ஏனென்றால், நான் கேரள ஆள் இல்லை. டெல்லியில்கூட காங்கிரஸில் எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆகையால், என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தை நான் சொல்லியிருந்தேன். நான் காங்கிரஸ்காரர் என்பதே இவர்களுக்கு இன்னைக்குத்தானே தெரியுது. யார் மூத்த தலைவர்? யார் நேத்திக்கு வந்தவர்? என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை”

``அதுமட்டுமல்ல, இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளீர்களே?”

``ஆமாம் தளபதி முக. ஸ்டாலின்தான் அதற்கு தகுதியான நபர். அவர்தான் தொடர்ந்து தேச நலனை முன்னிறுத்தி அழுத்தமாகப் பேசி வருகிறார்.  இந்தியா கூட்டணியின் தலைவராக வருகிறவர்தான் பிரதமராவார் என்கிற கவலை ராகுலுக்கு வேண்டாம்.

ஸ்டாலினுக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் குறைவாகத்தான் தெரியும். 1964-ல் காமராஜருக்கு பிரதமர் வாய்ப்பு தேடி வந்தபோது, `நோ இங்லீஷ், நோ ஹிந்தி, ஹவ்? ( No English, No Hindi, How?) ’ என்றார். இதுதான் சூழ்நிலை. அதுமட்டுமில்லை, ஸ்டாலின் தமிழ்நாட்டை விட்டுவிட்டு டெல்லிக்குச் செல்லப் போவதில்லை. ஆகையால், தயவுசெய்து யாரால் ஜெயிக்க முடியும் என்பதை சிந்தித்து முதலமைச்சர் ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் தலைவராக்க வேண்டும்."

ராகுல் காந்தி, ஸ்டாலின்

`உங்களுக்குப் பதவி தரவில்லை என்ற காரணத்தால் ராகுலுக்கு எதிராகப் பேசுவதாக காங்கிரஸ் கட்சியிலேயே விமர்சனங்கள் எழுகிறதே?”

``பைத்தியங்கள்! நான் என்றைக்குப் பதவி கேட்டிருக்கிறேன். பதவி என்னைத் தேடி வந்திருக்கிறது. ராகுல் மீது எனக்கு எப்படி அதிருப்தி இருக்கும்? அவரைத் தனிப்பட்ட முறையில் எனக்குத்  தெரியாது. அவர் பொறுப்புக்கு வந்ததிலிருந்து இதுவரை நான்குமுறை உங்களுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கொடுக்கவில்லை. பழக்கமே இல்லாதவர் மீது எப்படி தனிப்பட்ட அதிருப்தி இருக்க முடியும்?“

``தமிழகத்தில் கூட்டணி விவகாரத்தில் நடக்கும் குழப்பங்களை எப்படி பார்க்கிறீர்கள்?”

``என்னுடைய அபிப்பிராயம் திமுக-வுடனான இந்தக் கூட்டணி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதைவிட்டுவிட்டு, நமக்கு கூடுதலாக சீட் கிடைக்கும். நமக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்கிற நப்பாசையில் ஒரு நடிகர் பின்னால் போக வேண்டும் என்று  சிலர் நினைக்கிறார்கள். அதற்கு முதலில் விஜய் வெற்றிபெற வேண்டும.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு வந்தார்கள் என்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அவர்களெல்லாம் அரசியலுக்காக சினிமாவை உபயோகப்படுத்தினார்கள்.

ஆனால், மாறாக யாரெல்லாம் நடிகரா இருக்கிற காரணத்தினாலே அரசியலுக்கு வந்தார்களோ அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. சிவாஜி கணேசன் தொடங்கி விஜயகாந்த், கமலஹாசன் வரைக்கும் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. நடிகர் விஜய்யும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வர விரும்புகிறார். அவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியமில்லை."

 மணி சங்கர் அய்யர்
மணி சங்கர் அய்யர்

``அதிக சீட், ஆட்சியில் பங்கு என்கிற கருத்தை முன்வைத்துதான் கூட்டணி மாற்றம் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்படுகிறது. தமிழகத்துக்கு அது ஒத்துவராது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?”

``ஸ்டாலின் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அதுதான் சூழல். ஏனென்றால், காங்கிரஸ் 2014-ல் தனியாக நின்றபோது கார்த்திக் சிதம்பரத்துக்கு ஒரு லட்சம் ஓட்டு கிடைத்தது மற்றவர்களுக்கு ஒரு  50,000 ஓட்டுகள் கிடைச்சது. அப்படியான  சூழ்நிலையில், ஸ்டாலின் எவ்வளவு சீட் கொடுத்தாலும் அது நமக்குப் போதும். ஏனென்றால் அந்த அளவுக்குதான் நம்மால் ஜெயிக்க முடியும்.

ஆனால், இவர்கள் என்ன கனவு காண்கிறார்கள்? நடிகருடன் சென்றால் நமக்கு 100 இடம் கிடைக்கும் 50 மந்திரி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால் டெல்லியில் ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டுடைய ஆதரவு மிகவும் அவசியம். உண்மையாக நீங்கள் தேசபக்தராக இருந்தால் நீங்க நாட்டினுடைய ஒருமைப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்றால்  பாஜக-வை தோற்கடிப்பது மிக மிக அவசியம். அதற்கு மு.க ஸ்டாலின்தான் சரியான நபர்.”

``இதை இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்றத் தலைவர்கள் ஏற்பார்களா?”

``அதை அவர்களைக் கேளுங்கள். என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு.

மணி சங்கர் அய்யர் பேட்டியை முழுமையாகக் காண கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்

`தனியாக கட்சி துவக்கலாமா?' ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!

“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என... மேலும் பார்க்க

ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான்" - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த ... மேலும் பார்க்க

1957: `திரைக்கவர்ச்சி' என திமுகவை விமர்சித்த காங்., - திராவிட இயக்கத்தின் அரசியல் உதயம்! | ஆடுபுலி 6

1957 அரசியல் களம்அரசியல் ஆடுபுலி 06`தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி' என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.`நடிகர்கள் பின்னால் திரளும் கூட்... மேலும் பார்க்க

பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை; கேரள அரசியலில் புதுப் புயல்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு ... மேலும் பார்க்க

ஹாட்பாக்ஸில் சுடசுட மட்டன் பிரியாணி; பிரமாண்ட செட்! - திமுக வாக்குசாவடி கூட்டத்தில் எனென்ன ஸ்பெஷல்?

மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமர... மேலும் பார்க்க