கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! - முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா...
`தனியாக கட்சி துவக்கலாமா?' ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். மூத்த நிர்வாகிகள் சிலர் தனி கட்சி யோசனையில் இருப்பதாக செய்திகள் கசிய காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னையில் கடந்த 17-ம் தேதி அன்று நடந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “தி.மு.க -வுடன் காங்கிரஸ் கட்சி நீண்ட கூட்டணி உறவை கொண்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி தலைமைக்கு மட்டுமே உள்ளது. இங்கிருக்கும் நபர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் கருத்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது” எச்சரித்தார் காங்.பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.

இந்த நிகழ்வுக்கு பிறகு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்காக எதிர்ப்பு மனநிலையில் உள்ளார்கள். வேறு சிலர் இந்த கூட்டணிக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால் பிப்ரவரி 22-ம் தேதி தி.மு.க குழு அமைத்தபிறகு அந்த கட்சியுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் த.வெ.க வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், வியூக வகுப்பாளர்கள் என பலரையும் சந்தித்து பேசி வருகிறார்கள். த.வெ.க வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி மும்பையை சேர்ந்த மூத்த தொழில் அதிபர் ஒருவர் மூலம் ராகுலிடமே பேசியிருக்கிறார்.
தி.மு.க கூடுதல் இடங்களை தராவிட்டால் த.வெ.க பக்கம் வரும் எண்ணத்தில் டெல்லி மேலிடம் உள்ளது. காங்கிரஸ் டெல்லி மேலிடத்திடம் தனித்த செல்வாக்கு படைத்த ப.சிதம்பரமே இந்த முறை டெல்லியின் நடவடிக்கை வேறு விதமாக இருப்பதாக புலம்பியுள்ளார்.
சமீபத்தில் காரைக்குடியில் மூத்த நிர்வாகிகளிடம் ப.சி பேசிக்கொண்டிருந்த போது, “அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நான் ராகுலிடம் தி.மு.க கூட்டணி ஏன் வேண்டும் என்று விளக்கிவிட்டேன். நான் என்ன சொன்னாலும் உடனே ரியாக்சன் செய்யும் ராகுல், தி.மு.க கூட்டணி விசயத்தில் நான் கூறிய கருத்துக்களுக்கு ரியாக்ஷன் செய்யாமல் அமைதியாக இருந்ததே எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று சொல்லியுள்ளார்.
மற்றொருபுறம் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் தான் கூட்டணி வைக்கும்” என்று தனது நண்பர்களிடம் சொல்லியுள்ளார். அப்படி த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி சென்றால், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பத்து பேர் தி.மு.க பக்கம் நிற்கும் மூடில் உள்ளார்கள். ஏன்? மாநில தலைவர் செல்வபெருந்தகையே தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார்.
சிதம்பரம் தலைமையில் ஒரு டீம் தி.மு.க ஆதரவு காங்கிரஸ் கட்சியாக களம் இறங்கும் என்கிறார்கள் இவர்களின் ஆதரவாளர்கள். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் அழைத்து, “நாம் மீண்டும் தனியாக கட்சி துவங்கினால் ஜெயிக்க முடியுமா?” என்று கருத்து கேட்டுள்ளார் கார்த்திக் சிதம்பரம்.
அப்பா, மகன் என இருவரும் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை பார்த்தால், “சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உடையாமல் தப்பிக்குமா ?” என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். 25 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாது என தி.மு.க தரப்பில் முடிவாகியுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. 40 தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த எண்ணிக்கை குறைவு என்பதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியுமா? என்கிற கேள்விக்கு பதில் வரும் வாரத்தில் தெரியும்.!















