ஜனநாயகன்: விஜய் பட சென்சார் வழக்கு; சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உயர் நீ...
அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள்: பித்ரு சாபம் தீரும்; சுபங்கள் கூடிவரும்! | திருநெல்வேலி
பகவான் விஷ்ணு தன் பக்தர்களைக் காக்க நான்கு யுகங்களிலும் ஏராளமான அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தசாவதாரங்கள் புகழ்பெற்றன. அப்படிப்பட்ட அவதாரத் தலங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. பத்து அவதாரங்களையும் ஒரே தலத்தில் தரிசிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட தலங்களில் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். புண்ணிய பலன்கள் பெருகுவதோடு கேட்ட வரங்களும் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். வாருங்கள் அப்படிப்பட்ட ஒரு தலத்தை தரிசனம் செய்வோம்.
திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கத்தில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லநாடு. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள `அகரம்' கிராமம். இங்குதான் ஸ்ரீஅஞ்சேல் தசாவதாரப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் ஒரே சந்நிதியில் பெருமாளின் தசாவதாரங்களும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தின் தலபுராணம் காஷ்மீரம் வரை புகழ்பெற்றது.

தலபுராணம் - காஷ்மீரம் வரை புகழ் பெற்ற தலம்
முன்னொருகாலத்தில் `மித்ரசகா’ என்கிற பக்தர் வாழ்ந்துவந்தார். வேதங்களோடு புராண, இதிகாச காவியங்களையும் கற்றுத்தேர்ந்த அவர் கலைகளிலும் தீராத ஆவல் கொண்டிருந்தார். ஒருமுறை அகரம் கிராமத்துக்கு நாடகக் குழு ஒன்று வந்து ராமாயண நாடகத்தை நிகழ்த்தியது. அதில் தன் மனதைப் பறிகொடுத்த மித்ரசகா தானும் அந்த நாடகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பி நாடகக் குழுவில் சேர்ந்தார். நாடகக் கலையை விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தசாவதாரத்தையும் நிகழ்த்திக்காட்டும் அற்புத நாடகம் ஒன்றை எழுதினார். அந்த நாடகம் காண்போரைக் கவர்ந்தது. அதன் புகழ் காஷ்மீரம் வரை பரவியது. காஷ்மீர மன்னன் மித்ரசகாவைத் தன் அரணமனைக்கு அழைத்து நாடகத்தை நிகழ்த்த வேண்டினான். மித்ரசகாவும் அவ்வண்ணமே காஷ்மீரம் சென்று தன் நாடகத்தை நிகழ்த்தினார். பெருமாளின் அருளால் நாடகம் சிறப்பாக இருந்தது. காண்போர் சிலிர்த்தனர். காஷ்மீர மன்னனின் மகள் சந்திரமாலினி மித்ரசகாவின் கலையில் தன் மனதைப் பறிகொடுத்தாள். அவரையே திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தன் தந்தையிடம் தெரிவித்தாள். ஒரு ஹரி பக்தனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுப்பதில் தனக்கு மகிழ்ச்சியே என்று மன்னனும் அதற்கு உடன் பட்டான். மித்ரசகாவும் சந்திரமாலினியும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்தனர்.
சிறிது காலம் கழித்து மித்ரசகா தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்நிலையில் ஒருநாள் மித்ரசகா பரமபதம் அடைந்தான். சந்திரமாலினி மிகவும் வருந்தினாள். கணவனின்றி வாழவே பிடிக்காமல் நதியில் குதித்தாள். அப்போது அவளை ஒரு முதியவர் ரூபத்தில் வந்த பெருமாள் காப்பாற்றினார். சந்திர மாலினி தன்னைக் காப்பாற்றியவர் யார் என்று பார்த்தபோது அங்கே பெருமாள் காட்சி கொடுத்தார். சந்திரமாலினிக்கு இன்னும் விதி முடியவில்லை என்பதை உணர்த்தி அவளுக்கு மந்திர உபதேசம் செய்து உரிய காலத்தில் தன்னை வந்து சேர அறிவுருத்தி மறைந்தார்.
அந்த இடத்திலேயே தியான ஆசிரமம் அமைத்து (இந்த இடத்தில்தான் திருக்கோயில் அமைந்துள்ளது), பூஜை செய்து வாழ்ந்தாள் சந்திரமாலினி.
ஒரு மாசி மாதத்தின் வளர்பிறை துவாதசி திருநாளில், பிரம்மமுகூர்த்த வேளையில் நதியில் நீராடிவிட்டு வந்த சந்திர மாலினி ஏகாதசி விரதத்தைப் பூர்த்தி செய்து, மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாள். அப்போது வானில் சூரியகோடிப் பிரகாசத்துடன் ஓர் ஒளி தோன்ற, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என பத்து அவதாரங்களும் ஒன்றிணைந்த கோலத்தில் அவளுக்குக் காட்சி தந்தார் பகவான். மேலும் அவளிடம், ‘‘வேண்டும் வரம் என்ன?’’ என்றும் வினவினார்.

"தசாவதாரங்களையும் தரிசித்துவிட்டபின் தனக்கு வேண்டுவது ஏதுமில்லை. தங்கள் திருவடியே போதும். ஆனாலும் இந்த தாமிரபரணியில், இந்த தீர்த்தக் கட்டத்தில் நீராடி, யாரெல்லாம் தங்களின் பத்து அவதாரங்களையும் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு சாபவிமோசனமும் பாவவிமோசனமும் அருள வேண்டும்" என்று வேண்டினாள்.
பெருமாளும் அவ்வண்ணமே அருளே அங்கே பத்து அவதாரங்களும் கொண்ட சந்நிதி உருவானது என்கிறது தலபுராணம்.
சந்நிதிச் சிறப்புகள்
தாமிரபரணியின் கரையில் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். மூலவர், அஞ்சேல் தசாவதாரப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். சந்திர மாலினிக்கு ‘அஞ்சேல்’ என அபயம் அளித்ததால் இப்படியொரு திருநாமம் ஸ்வாமிக்கு. பெருமாள், முதலில் தேவியர் இல்லாமல் காட்சியளித்து, அதன் பிறகே தசாவதாரக் கோலங்களைக் காட்டி அருளினார் என்பதால், இத்தலத்தில் தேவியருடன் இல்லாமல் தனியாகவே காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் அரசமரம். உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் கல்யாண ஸ்ரீநிவாஸராக அருள்கிறார்.
கோயிலின் வலது மூலையில் சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் பட்டாபிஷேகக் கோலத்தில் அருளும் ஸ்ரீராமனும், இடது மூலையில் ருக்மிணி, சத்யபாமாவுடன் ஸ்ரீவேணுகோபாலனும் அருள் கிறார்கள்; விஸ்வக்சேனரும் அருகில் உள்ளார்.
தனிச்சந்நிதியில் திகழும் - ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தசாவதார மூர்த்தியர் தரிசனம், இந்தக் கோயிலின் சிறப்பம்சம். மாசி மாதம், வளர்பிறை துவாதசி திருநாளன்று தசாவதார ஜயந்தி இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைச் சிறப்புகள்
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரமும், துளசி மாலையும் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். உற்சவர் கல்யாண சீனி வாசனுக்கும் தேவிகளுக்கும் கல்யாண மாலை போல ரோஜாப் பூ மாலை சாற்றி கல்கண்டு நெய்வேத்யம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்குமாம். பித்ருதோஷம் போக்க, சித்திரை, தை, ஆடி, ஐப்பசி, தை மாத பிறப்பன்றும் அல்லது எல்லா அமாவாசை நாளன்றும் இறந்தவர்களின் திதி நாள்களிலும் இங்கு வந்து தட்சிண கங்கையான தசாவதாரத் தீர்த்தக்கட்டத்தில் நீராடி, நதிக்கரையில் பித்ருதோச பூஜைகளைச் செய்துவிட்டு தசாவதாரப் பெருமாளை தரிசித்துச் சென்றால் பித்ரு தோஷம் நீங்கி பித்ருகளின் ஆசி பெற்று சுபம் உண்டாகும் என்கின்றனர், பலன் பெற்றவர்கள்.





















