'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம...
சிவகங்கை: குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்; பேசாதவனைப் பேசவைத்த அற்புதம்!
5குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுவே சான்றோர் கூற்று. அப்படி முருகன் கோயில்கொண்ட மலைத்தலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பும் புராணப் பெருமையும் உண்டு. அப்படிக் குமரன் அருளும் அற்புதத்தலம் தான் குன்றக்குடி. முருகப்பெருமான் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள். காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியில் இருந்து மேற்கே எட்டு கி.மீ தொலைவில் உள்ளது குன்றக்குடி.
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை என்பதுதானே அடியார்கள் நம்பிக்கை. அப்படியிருக்கையில் மயிலுக்கே ஒரு வருத்தம் என்றால் அதை என்னவென்பது? வாருங்கள், மிகவும் சுவாரஸ்யமான அந்த சம்பவத்தை அறிந்துகொள்வோம்.

புராணகாலத்தில் சூரன் தன் தம்பியருடன் காஞ்சிபுரத்தில் தவ நிலை மேற்கொண்டிருந்தான். முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினை அடைய வேண்டும் என்பதே அவர்களது தவத்தின் நோக்கம். இதை அறிந்த முருகப்பெருமானின் வாகனமாக விளங்கிய மயில் வருந்தியது. தன் வருத்தம் நீங்க முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும் விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.
சூரனும் அவனுடைய சகோதரர்களும், முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினைத் தாங்கள் அடையவிடாமல் மயில் மூலம் தடுத்து விட்ட தேவர்கள் மீது சினம் மிகக் கொண்டனர். ஒருமுறை முருகப்பெருமானைத் தரிசிக்க வந்த திருமாலும், பிரம்மாவும் தங்கள் வாகனங்களான கருடனையும், அன்னத்தையும் வெளியில் விட்டுச் சென்றனர். அவ்வேளையில் சூர சகோதரர்கள் மயிலிடம் சென்று, “மயிலே! உன்னால் தங்களை விட விரைவாகச் செல்லமுடியாது என்று கருடனும், அன்னமும் இழிவாகப் பேசிக் கொண்டன” என்று பழிச்சொல் கூறினர்.
அதைக் கேட்ட மயில் சிறிதும் ஆலோசிக்காமல் கோபம்கொண்டு கருடனையும், அன்னத்தையும் விழுங்கி விட்டது. முருகப் பெருமானை வழிபட்டுத் திரும்பிய திருமாலும், நான்முகனும் தங்கள் வாகனங்களைக் காணாது முருகப்பெருமானிடம் முறையிட்டனர். நடந்ததை உணர்ந்த முருகப் பெருமான் மயில் விழுங்கிய கருடனையும், அன்னத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முருகனின் உத்தரவு கேட்டு கருடனையும், அன்னத்தையும் விடுவித்தது மயில். திருமாலும், நான்முகனும் திரும்பிச் சென்றனர்.
அவர்களுக்கு இன்னல் விளைவித்ததன் காரணமாக மயிலின் மீது சினம் கொண்ட முருகப் பெருமான் மயிலை மலையாகும்படி சபித்தார். 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டோமே' என்று வருந்திய மயில், பெருமானிடம் சாப விமோசனம் கேட்டது. தவறை உணர்ந்து வருந்திய மயிலிடம் பரிவுகொண்ட முருகப்பெருமான், “நீ பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்குக் கிழக்கே உள்ள அரசவனத்துக்கு (குன்றக்குடி) போய் மலையாக இரு. அங்கு நான் வந்து உனக்குச் சாப விமோசனம் தருகிறேன்” என்று அருளினார்.

அதன்படியே, குன்றக்குடிக்கு வந்துசேர்ந்த மயில் மலையின் வடிவம் கொண்டு தவம் செய்யத் தொடங்கியது. மயிலுக்கு இந்நிலை உருவாகக் காரணம் சூரனும் அவன் சகோதரர்களுமே என்பதை அறிந்த முருகன் அவர்களை அசுரர்களாகும்படி சபித்தார். அசுரர்களானவர்கள் அடியார்களைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். அனைவரும் ஈசனை வணங்க ஈசனின் ஆணைபப்டி முருகப்பெருமான் ஆறு திருமுகங்களோடு எழுந்தருளி அசுரர்களை அழித்தார் முருகன். சூரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார்.
அதே நேரத்தில் மலைவடிவம் கொண்டு தவநிலையில் இருக்கும் மயிலுக்கும் அருள்புரியச் சித்தம் கொண்டார் முருகன். மலை வடிவில் இருந்த மயிலை இரு பகுதிகளாக மாற்றி, ஒன்றுக்கு சாரூப்ய பதவி அளித்தவர், மற்றொரு பாகத்தைத் தொடர்ந்து மலையாகவே இருக்குமாறு கூறினார். சாபம் நீங்கப் பெற்ற மயில், `முருகப் பெருமான் தொடர்ந்து அந்த மலையின் மீது எழுந்தருளி, வணங்குபவர்க்கு வேண்டிய வரம் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது. அதன்படி, முருகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராக குன்றக்குடி மலையின் மீது கோயில்கொண்டார்.
தெற்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். கீழ்க்கோயிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி அருள் புரிகின்றனர். மலைக்கோயிலில் முருகன் அருள்கிறான்.
மலையடிவாரத்தில் சண்முகநாதப் பெருமான் சந்நிதிக்கு நேர்கிழக்கில் `சந்நிதி விநாயகர்’ கோயில் அமைந்திருக்கிறது. இந்த விநாயகர் ஆலயத்துக்குக் கிழக்கே அடுத்தடுத்து ஒற்றைக்கால் மண்டபமும், சண்முக தீர்த்தம் என்ற அழகிய திருக்குளமும் அமைந்திருக்கிறது.
சந்நிதி விநாயகரைத் தரிசித்துவிட்டு, திருக்கோயில் முகப்பு அலங்கார வாயிலின் வழியாக மலைக்கோயிலை அடையலாம். மலையின் நுழைவாயிலில் கார்த்திகைப் பிள்ளையார் மண்டபம் இருக்கிறது. இங்கு கார்த்திகைப் பிள்ளையார் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்து மலையேறி 149 படிகளைக் கடந்தால் சமதளத்துக்கு வந்துவிடலாம். மலைக்கோயில் பிராகாரத்தில் அருளும் கணபதிக்கு ,'சொர்ணகணபதி' என்பது திருநாமம்.
கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் அழகு மயில்மீது ஒய்யாரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார் முருகப்பெருமான். ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும், தெய்வானையும் அருள்கின்றனர்.

பெரிய மருதுபாண்டியருக்கு ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு வாடியபோது குன்றக்குடி முருகன் திருநீற்றுப் பிரசாதமே அவரை குணப்படுத்தியது என்பார்கள்.
அதேபோன்று சிதம்பரம் அருகேயுள்ள கீழ்ப்பரப்பை என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு என்பவரின் மகன் செந்தில்வேலு பிறவி ஊமை. சிறுவன் செந்தில்வேலின் தாத்தா சொக்கலிங்கம் சிறுவனை அழைத்துக்கொண்டு 11 முறை தொடர்ந்து குன்றக்குடி வந்து சண்முகநாதப் பெருமானை வழிபட்டுத் திரும்பினார். 12-வது முறை ரோகிணி நட்சத்திரத்தன்று குன்றக்குடி வந்து அருள்தரு சண்முகநாதப் பெருமானை நெஞ்சுருக வழிபட்டார்.
பேரனைப் பார்த்து “ஓம் முருகா!” என்று சொல்லுமாறு கூறினார். சிறுவன் தன் தாத்தாவின் உதட்டசைவையே கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தான். அதே வேளையில் சந்நிதியில் திரை விலகி, தீப ஆராதனைக் காட்சி தெரிய சிறுவன் வாயிலிருந்து “ஓம் முருகா” என்னும் மந்திர ஒலித்தது. அதுமுதல் அவன் மடைதிறந்த வெள்ளம்போல் பேசத்தொடங்கினார். இப்படி குன்றக்குடி குமரன் நிகழ்த்தும் அற்புதங்கள் இன்றும் நடைபெறுகின்றன.
குமார தந்திர முறைப்படி இங்கே நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. தை உத்திரட்டாதி தொடங்கி பத்து நாள் பிரம்மோற்சவம்; ஐப்பசி மாதம் கந்த சஷ்டி; வைகாசி விசாகம்; ஆவணி மூலம்; ஆடிக்கிருத்திகை திருப்படி பூஜை மற்றும் பல திருவிழாக்களும், பூஜைகளும் நடைபெறு கின்றன. இப்படிப்பட்ட அற்புதமான மலைக் கோயிலுக்கு ஒருமுறை வந்து முருகனை தரிசனம் செய்துபாருங்கள். வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் நிகழும்.


















