”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே...
தூத்துக்குடி: திருமணமான இரண்டே நாளில் நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்; பதறிய இளைஞர் - நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். பாஸ்கருக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த திருமண புரோக்கரான மூக்காண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர், நாகர்கோவிலைச் சேர்ந்த திருமண பெண் புரோக்கர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் உள்ளதாகக் கூறி அவரது புகைப்படத்தை பாஸ்கரிடம் காட்டி திருமணம் செய்து கொள்கிறீர்களா? எனக் கேட்டுள்ளார்.

பாஸ்கரும் தனக்கு பெண் கிடைத்த சந்தோஷத்தில் ஆதரவற்ற பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கூறி சம்மதித்துள்ளார். இதனையடுத்து இரண்டு புரோக்கர்களும் ரூ.40 ஆயிரத்தை கமிஷனாகப் பெற்றுக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு தயாரான பாஸ்கர், அந்த பெண்ணிற்கு தேவையான சேலை, சுடிதார் என ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர், கடந்த 20-ம் தேதி, திருச்செந்தூர் சிவன்கோயில் பின்புறமுள்ள துர்க்கை அம்மன் கோயிலில் அந்த பெண்ணிற்கு 4 கிராமில் தங்கத்தில் தாலி கட்டி எளிமையாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், அந்த இளம்பெண்ணை பாஸ்கர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 2 நாட்கள் அந்த இளம்பெண்ணுடன் பாஸ்கர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 22-ம் தேதி, பாஸ்கர் வீட்டிற்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களை வாங்கி வந்துள்ளார்.

மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்துள்ளார். வீட்டில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் புதிய நகைகள் எதுவும் இல்லை. பாஸ்கரின் செல்போனில் இருந்த திருமணக்கோலத்தில் எடுத்துக் கொண்ட படங்கள், வீடியோக்களை அழித்துள்ளார். இதனால், தனக்கு பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கர் மூக்காண்டியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பெண்ணைப் பற்றிய தகவல் கிடைக்காததால் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் பணம், நகையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


















