செய்திகள் :

தமிழே உயிரே! |அரியணை ஏறியதா தமிழ்?|மொழிப்போரின் வீர வரலாறு – 5

post image

தமிழுக்குத் தொண்டு செய்வோர்

சாவ தில்லை

தமிழ்த்தொண்டன் பாரதிதான்

செத்த துண்டோ?

என்று பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது உணர்ச்சிமிகு வார்த்தைகளை நாமும் வழிமொழிகிறோம்.  தமிழுக்காக உயிரை நீத்தவர்களுக்கு என்றுமே மரணமில்லை. தமிழாகவே  அவர்கள் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்

தமிழகத்தில் நடைபெற்ற ‘மொழிப்போர்’, ஆட்சியையே புரட்டிப்போட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி என்ற அடையாளத்துடன் இந்தியா முழுவதும் வியாபித்திருந்த காங்கிரஸ் கட்சி மமதையோடு இருந்தது. அதனால்தான், இங்கு வந்து இந்தியைத் திணித்தது. இந்திக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போரை தமிழர்கள் நடத்தினார்கள். அந்தச் சூழலில்தான், தமிழகம் 1967-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது.

காங்கிரஸ் என்ற ஆலமத்தைச் சாய்ப்பதற்கு, மொழிப்போரில் ஈடுபட்ட வீரர்படை களமிறங்கியது. காமராஜர் மிகப்பெரிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவான அவர், ‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்று கூறினார். ஆனால், என்ன நடந்தது? மொழிப்போரை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவரான மாணவர் பெ.சீனிவாசனிடம் விருதுநகரில் தோற்றுப்போனார் காமராஜர்.

காமாஜரே தோற்றுவிட்டார் என்றால், மற்ற காங்கிரஸாரின் கதி? ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் பக்தவத்சலம் தோற்றார். மேலூரில் எளிமையின் சிகரமாக விளங்கிய அமைச்சர் கக்கன் தோல்வியடைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கிருஷ்ணசாமி தோற்றுப்போனார். சி.சுப்பிரமணியம் தோற்றார். ஆர்.வெங்கட்ராமன் தோற்றார். விருத்தாசலத்தில் போட்டியிட்ட பூவராகவனைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தோற்றுப்போனார்கள்.

கருணாநிதி - அண்ணா

பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது என்றால், அதற்கு இந்தித் திணிப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அண்ணா, தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு, இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை.

இந்த நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகள். தங்களின் உயிருக்கு இணையாக நேசித்த தாய்மொழிக்காக உயிரையே தியாகம் செய்த அந்த தியாகிகளின் குடும்பங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக நேரில் சென்றேன்.

அப்போது நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகிய 12 தியாகிகளின் குடும்பங்களைப் பற்றிய நிலையை அறிந்துகொள்ளும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.  

தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த இரா.சண்முகத்தின் ஊரான விராலிமலைக்குச் சென்றேன். சண்முகத்தின் அண்ணன் இரா.மாணிக்கத்தைச் சந்தித்தேன். மொழிப்போரில் உயிரிந்தோரின் குடும்பங்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி, அதை நடத்திவருகிறார் இரா.மாணிக்கம்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் மன்றத்தினர்!

தன்னுடைய தம்பியைப் பற்றியும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றியும் விரிவாக என்னிடம் இரா.மாணிக்கம் பேசினார். ‘நாங்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என் தம்பி சண்முகம் 11.08.1943-ல் பிறந்தார். 5-ம் வகுப்புவரை படித்தார். குடும்பச் சூழல் காரணமாக, நானும் தம்பியும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தோம்.

திராவிட நாடு, குடியரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகள் இங்கு வரும். அவற்றை நாங்கள் தொடர்ந்து வாசிப்போம். நானும், தம்பியும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைத் தொடங்கி, அதை நடத்திவந்தோம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து நானும் தம்பியும் அதில் கலந்துகொள்வோம். தம்பி சண்முகம் தலையை மொட்டையடித்து, இந்திக்கு கொள்ளி வைக்கும் போராட்டத்தை நடத்தினார். அதுவரை இந்திக்கு எதிராக ஐந்து பேர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தனர்.

எங்கள் ஊரில் கடையடைப்பு நடத்த என் தம்பி முடிவுசெய்தார். ஆனால், கடையடைப்பு நடத்த வியாபாரிகள் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், போராட்டத்தைக் கைவிடுமாறு அண்ணா கேட்டுக்கொண்டார். அதனால், என் தம்பிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

எனக்கு ஒரு கடிதம், அண்ணாவுக்கு ஒரு கடிதம், ஆசிரியர் மூர்த்திக்கு ஒரு கடிதம் என மூன்று கடிதங்களை எழுதிவைத்து, அவற்றை ஆசிரியர் மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் மூர்த்தி தன் வீட்டில் போய் தனக்கான கடிதத்தைப் பிரித்து வாசித்திருக்கிறார். உடனே, பதறியடித்துக்கொண்டு போய் பார்த்தபோது, என் தம்பி விஷம் அருந்தி ஒரு மரத்தடியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

அவரை ஆசிரியர் மூர்த்தி மருத்துவமனையில் சேர்த்தார். அந்த நிலையில், ‘தமிழுக்காக மீண்டும் ஒருவன் உயிர் துறந்தான் என்று தெரிந்தால், தமிழகம் மீண்டும் போராடத் தொடங்கும்’ என்று தம்பி சண்முகம் கூறினார். அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தமிழுக்காக என் தம்பி உயிரையே கொடுத்தார்” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் இரா.மாணிக்கம்.

மொழிப்போர் தியாகிகள் அமைப்பின் தலைவராக இரா.மாணிக்கம் இருப்பதால், மற்ற தியாகிகளின் உறவினர்களை விராலிமலைக்கு வரவழைத்திருந்தார். அவர்களுடனும் பேசினேன். அவர்களின் குடும்ப நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவிடத்துக்குச் சென்றேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம்தர குடிமக்களா?

சென்னை விருகம்பாக்கத்தில் தியாகி அரங்கநாதன் வீட்டுக்குச் சென்று, அவருடைய மகன் அமுதவாணனைச் சந்தித்தேன். தன் தந்தை எப்படி மொழிக்காக உயிரைத் தியாகம் செய்தார் என்பதை விரிவாக என்னிடம் கூறினார்.

இந்தித் திணிப்பை எரித்துப்பொசுக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன்!

“என்னுடைய அப்பா, அண்ணாவின் சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்றுவிடுவார். கட்டாய இந்தி காரணமாக தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று அவர் மிகவும் ஆதங்கப்பட்டார். இது குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, 1965-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்.

அப்போது எனக்கு ஏழு வயது. என்னுடைய தம்பி ஆறு மாத கைக்குழந்தை. ’குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று என் தாயிடம் சொல்லிவிட்டு உறங்கச் சென்ற தந்தை, அதிகாலையில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டிருக்கிறார். என் தந்தை தீக்குளித்ததால் அதிர்ச்சியடைந்த என் தாயாருக்கு மனநலம் பாதித்துவிட்டது” என்றார். அந்தக் குடும்பத்தின் சூழலைப் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது.

எந்த பலனும் இல்லை!

மொழிக்காக உயிரையே தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் பெரிய உதவிகள் எதுவுமில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. விராலிமலை சண்முகத்தின் அண்ணன் மாணிக்கம் நம்மிடம் வேதனையுடன் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு

“மொழிப்போர் தியாகிகளுக்கு மாதம் நூறு ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக 1987-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அது எங்களுக்கு கிடைக்கவில்லை. மொழிப்போரில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு மட்டும்தான் உதவித்தொகையைத் தருவோம் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள்.

மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வந்ததைக் கேள்விப்பட்டு, அதிகாரிகளிடம் போய்க் கேட்டோம். அதற்கு, மொழிக்காக உயிர்த்தியாம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்லிவிட்டார்கள். என்ன கொடுமை என்றால், மொழிக்காக உயிர்நீத்த 12 பேரில், மூன்று பேர் மட்டுமே திருமணம் ஆனவர்கள்.

அந்த மூன்று பேரின் வாரிசுகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை. மற்ற ஒன்பது பேர் திருமணம் ஆகாதவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடையாதாம். எனவே, இவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார்.

மொழியுணர்வைப் புரிந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியையே விலையாகக் கொடுத்தது. தன் தவறான செயலுக்கான தண்டனையை இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துவிருகிறது.  மொழி உணர்வையும், இன உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் ஒருபோதும் அடக்கிவைக்க முடியாது. அப்படி அடக்கினால், அது பெருநெருப்பாக வெடித்துக்கிளம்பும் என்பதற்கு முத்துக்குமார், செங்கொடி உயிரிழப்புகள் சமீபத்திய சான்று.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு. அதை அடக்க முயன்றபோது,  மெரினா கடற்கரையில் தொடங்கி தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக வெடித்த போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மாற்றியெழுத வைத்தது. இதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் பெயர்களை அரசுக் கட்டடத்துக்கும், பாலத்துக்கும் பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த தியாகிகளின் குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் அக்கறையோடு பார்க்க வேண்டும்.

நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் குடும்பம் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறது? இதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மூலக்கொத்தளத்தில் நடராசன், தாளமுத்து நினைவிடங்களை ரூ.34 லட்சம் செலவில் புதுப்பித்திருக்கிறது. அதை முதல்வர் ஸ்டாலின் சென்று திறந்துவைத்து தியாகிகளுக்கு மரியாதை செய்திருக்கிறார். வரவேற்கத்தக்க நடவடிக்கை. அதைப்போல, அந்த தியாகிகளின் குடும்பங்களின் நிலையையும் அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே தமிழ்ச்சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு
தமிழ்நாடு

மேலும், தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர், திராவிடம் பேசுபவர்களை அரியணையில் ஏற்றியது. ஆனால், உரிய முறையில் ஆட்சி மொழியாக அரியணையில் தமிழ் ஏறியிருக்கிறதா? என்து மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக, தமிழுக்காகப் போராடியவர்களின் நெஞ்சில் நீங்காத கேள்வியாக இன்னமும் இது இருக்கிறது.

(நிறைவுற்றது)

ஜனவரி 25- இன்று மொழிப்பேர் தியாகிகள் தினம்

"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்... மேலும் பார்க்க

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை.விஜய்அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்த... மேலும் பார்க்க

'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! - தவெகவின் 'பலே' கணக்கு!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை. நிர்மல் குமார்அவர்... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக ம... மேலும் பார்க்க

TVK : 'விசில் சின்னத்தை கொடுத்த அதிகாரியே விஜய் ரசிகர்தான்!' - 'அடேங்கப்பா' ஆதவ்!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை.விஜய்ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'நம்மை ... மேலும் பார்க்க