'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்...
காவலர் வாகனம் மீது தாக்குதல்: ``இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார்?" - எடப்பாடி பழனிசாமி
மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி என்பவரை நேற்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னைக்கு புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக வாகனத்தில் போலீஸார் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, இரண்டு கார்களில் வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, கைதி வெள்ளகாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது.
அதைத் தடுக்க முயன்ற போலீஸ் வாகன ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா?
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்." எனப் பதிவிட்டிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், ``காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு!பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே பிரபல ரவுடியை அழைத்து வந்த காவலர்கள் இருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி!
துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள கேடுகெட்ட ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே?
சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய அறிவாலய ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை!" எனக் குறிப்பிட்டிருக்கிரார்.













.jpg)