OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்...
செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்துக்குடியில் இருந்து பேசுவதாகவும் கஸ்டமர் கேர் நம்பர் போன்று 5, 6 இலக்கங்கள் கொண்ட எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும் அதனை அட்டன்ட் செய்தவுடன் மொபைல் போன் வெடித்து விடுவதாகவும், தூத்துக்குடியில் இவ்வாறு 27 பேர் இறந்துவிட்டதாகவும் பேசியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்ததாக 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 57 விநாடிகள் இதே போன்று பரபரப்பாக பேசும் ஆடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதுபோன்று மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப வேண்டும், பரபரப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இதுபோன்ற கும்பல்களை கண்டறிந்து போலீஸார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆடியோ குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். ”தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இது பழைய வாட்ஸ்அப் ஆடியோ. தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது எனத் தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.

இந்த ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம். இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புவது தவறு. இவ்வாறு தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


















