மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிட...
சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!
இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்போது சத்தீஷ்கரில் ஒரு இரும்பு பாலம் திடீரென காணாமல் போய் இருக்கிறது.
சத்தீஷ்கரில் உள்ள கோர்பா என்ற இடத்தில் கால்வாய் மீது சிறிய இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. 5 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்ட அந்த இரும்பு பாலத்தை பொதுமக்கள் நடப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
பாலம் திருட்டு போவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணி வரை மக்கள் அதனை பயன்படுத்தி இருக்கின்றனர். காலையில் அந்த பாலத்தின் வழியாக கரையின் அடுத்த பகுதிக்கு செல்ல பொதுமக்கள் வந்தபோது இரும்பு பாலம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் கவுன்சிலர் லட்சுமண் என்பவரிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். லட்சுமண் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஒருவர் தனது ஆட்களுடன் வந்து கேஸ் கட்டரை பயன்படுத்தி இரும்பு பாலத்தை அடியோடு வெட்டி எடுத்து சென்று இருப்பது தெரிய வந்தது. பழைய இரும்பு வியாபாரி இரும்பு பாலத்தை வெட்டி எடுத்துச்செல்வதற்கு உதவி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் முக்கிய குற்றவாளியான இரும்பு வியாபாரி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பாலம் இருந்த இடத்தில் சில பகுதிகளை விட்டு சென்று இருந்தனர். அவசரத்தில் வெட்டி எடுத்து சென்றதால் அவற்றை விட்டு சென்று இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கு முன்பு பீகாரில் 2022ம் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் 40 ஆண்டு பழமையான 500 கிலோ இரும்பு பாலத்தை திருடர்கள் ஒரே நாள் இரவில் வெட்டி எடுத்து சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.



















