செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸா...
நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02
நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது.
திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது.
இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர்.

அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது.
இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார்.
ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது.
1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது.
இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை.
மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது.
அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார்.
”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார்.
அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார்.
காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார்.

தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது.
எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர்.
அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது.
தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின.
1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.
2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.
3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.
4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.
5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.
6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது.
அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன.
திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார்.
1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள்.

திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள்.
ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை.
கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.
சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது.
அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது.
எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார்.
டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர்.
`நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி.
1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். !
(ஆடுபுலி ஆட்டம் தொடரும்)
















