OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்...
சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி
புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதியான (Assistant Commandant) இவர், வரும் ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் (Kartavya Path) நடைபெறும் அணிவகுப்பில் 140-க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களைக் கொண்ட படைப்பிரிவைத் தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார்.
சிஆர்பிஎஃப் வரலாற்றில் ஒரு பெண் அதிகாரி, முழுமையாக ஆண்கள் மட்டுமே கொண்ட ஒரு பெரிய படைப்பிரிவை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சிம்ரன் பாலா ஜம்மு காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப்-இல் அதிகாரி நிலைக்குத் தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு.

ஜம்முவின் காந்திநகரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற இவர், விடாமுயற்சியுடன் மத்திய பொதுப்பணி ஆணையத்தின் (UPSC) தேர்வில் வெற்றி பெற்று இத்துறையில் கால் பதித்தார். இவருடைய இந்த வளர்ச்சி ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
பயிற்சிக் காலத்திலேயே தனது திறமையை நிரூபித்த சிம்ரன் பாலா, குருகிராமில் உள்ள சிஆர்பிஎஃப் அகாடமியில் சிறந்த அதிகாரி மற்றும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளை வென்றவர்.
2025-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு, சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சல் எதிர்ப்புப் பிரிவான 'பஸ்தாரியா' (Bastariya) பட்டாலியனில் முதல் பணி வழங்கப்பட்டது.
அடர்ந்த காடுகளிலும் சவாலான சூழலிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தலைநகரில் நடைபெறும் மிக முக்கியமான தேசிய விழாவில் தனது படையை வழிநடத்தும் கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் ராணுவ வலிமையையும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தையும் (Nari Shakti) பறைசாற்றுவதாக அமையும்.
சிம்ரன் பாலாவின் தலைமையிலான அணிவகுப்புடன், சிஆர்பிஎஃப் மற்றும் எஸ்எஸ்பி (SSB) படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளின் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுக்களும் இதில் பங்கேற்கின்றன. எல்லைப் பகுதியில் பிறந்த ஒரு சாதாரணப் பெண், இன்று நாட்டின் தலைநகரில் நூற்றுக்கணக்கான வீரர்களுக்குத் தலைமை தாங்குவது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.



















