தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" - கூட்டணி குறித்து பிரேமல...
'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மற்றும் கவனிக்கத்தக்க சம்பவங்கள் இங்கே.

டிடிவியின் இறுக்கத்தைப் போக்கிய எஸ்.பி.வேலுமணி!
சில வாரங்களுக்கு முன்பு வரை டிடிவி தினகரன் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். எடப்பாடியை துரோகி என்றார். அவரோடு கூட்டணி செல்வதற்கு `தூக்கு மாட்டி தொங்கலாம்' எனுமளவுக்கு ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை என்.டி.ஏ பக்கமாக தள்ளிவிட்டன.
அப்போதும் கூட அதிமுகவை தவிர்த்து பாஜகவின் பியூஸ் கோயல் வழியாகத்தான் கூட்டணிக்குள் வந்தார். டிடிவியை வரவேற்று எடப்பாடி ட்வீட் போட்டார். டிடிவி அதற்கு நன்றி சொன்னார். பழையதையெல்லாம் மறந்து விட்டுக் கொடுக்கிறோம் என்றார். ஆனாலும், டிடிவி எடப்பாடியையும் அதிமுகவினரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அது நேற்று நடந்திருந்தது. பொதுக்கூட்டம் மதியம் 2:45 மணிக்கு தொடங்கியிருந்தது.

டிடிவியை முன்னதாகவே மதியம் 2:26 மணியளவிலேயே நயினார் நாகேந்திரன் மேடைக்கு அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே தங்கமணியும் சி.வி.சண்முகமும் மேடைக்கு வந்தனர்.
அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் டிடிவிக்கு நேராக பின்னால் இருக்கை. டிடிவி அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் கைகுலுக்குவதை இருவரும் தவிர்த்தனர். டிடிவியும் எதோ பேப்பரை படிப்பதை போல அவர்களை பார்ப்பதை தவிர்த்தார். அவர் கொஞ்சம் தர்மசங்கடமாக உணரவே பாஜகவின் சுதாகர் ரெட்டியும் அர்ஜூன் ராமும் அடுத்தடுத்து டிடிவியிடம் வந்து உட்கார்ந்து பேச்சு கொடுத்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி.வேலுமணி மேடையேறினார். அவருக்கு டிடிவி அமர்ந்திருந்த முதல் வரிசையில் கடைசி இருக்கை. டிடிவியை கடந்து செல்கையில் அவரிடம் கைகுலுக்கி புன்முருவல் செய்து சென்றார் எஸ்.பி.வேலுமணி. அதன்பிறகுதான் டிடிவி கொஞ்சம் இலகுவானார்.
சில நிமிடங்களில் மேடையேறிய எடப்பாடி பழனிசாமியும் டிடிவிக்கு கைகுலுக்கி வரவேற்றார். நயினார் நாகேந்திரன் உடனடியாக எடப்பாடியையும் டிடிவியையும் மேடைக்கு முன்பாக அழைத்து கூட்டத்தினர் முன்பு கைகளை உயர்த்தினார். பின்னர் இருவரும் அம்மாவின் தொண்டர்களாக இணைந்திருக்கிறோம் என பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேசிவிட்டனர்.
மட்டையாய் மடங்கி கே.பி.முனுசாமி:
அதிமுகவின் சீனிரான கே.பி.முனுசாமி ஒரு டோஸ் கூடுதலாகவே மோடி புகழ் பாடினார். அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே 'ஏரி காத்த ராமர் புகழ் கொண்ட மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்' என பாஜகவுக்கு ஏற்ற டோனில்தான் தொடங்கினார். இந்தியாவின் விஸ்வகுரு, உலகமே போற்றும் அரசியல் தலைவர் என அடுக்கடுக்காக மோடி புகழ் பாடினார்.
முனுசாமி பேசிக்கொண்டிருந்த போதுதான் மோடியும் மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வினோஜ்.பி.செல்வம் முனுசாமியிடம் துண்டு சீட்டை காண்பித்த பிறகும் சில நிமிடங்களுக்கு மோடி புகழ் பாடிவிட்டுதான் அவரின் இருக்கைக்கு சென்றார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் முதல் வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த முனுசாமி மோடியை நோக்கி வந்து போயஸ் கார்டனில் ஜெயலலிலதாவிடம் வணக்கம் வைக்கும் பொசிஷனில் சாஷ்டாங்கமாக வணக்கம் வைத்து சென்றார். 'அண்ணன் பெர்பார்மென்ஸ் ஓவரா இருக்கே..' என கூட்டத்திலிருந்து சில ரரக்களே முணுமுணுத்துக் கொண்டனர்.
தங்கமணிக்கு தனி கவனிப்பு:
முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ஒரு அதிமுகக்காரர், ஒரு பாஜகக்காரர் என அனைத்துக்கட்சியினரும் கலந்து அமர்ந்திருக்கும்படியே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கமணிக்கு பக்கத்தில் எச்.ராஜா, அவர் பக்கத்தில் சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் என அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மோடி கிளம்புகையில் மேடையிலிருந்த முக்கிய தலைவர்களுக்கு கைகொடுத்து விடைபெற்றார்.

மற்ற எல்லாருக்கும் சம்பிரதாயமாக கைகொடுத்து நகர்ந்தவர், தங்கமணியை பார்த்தவுடன் புன்னகைத்து தோளில் தட்டிக் கொடுத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் நகர்ந்தார். பிரதமரின் தனி கவனிப்பில் தங்கமணி குஷியாகிவிட்டார்.
காவல்துறையின் கட்டுப்பாடும் பாஜகவின் கோபமும்!
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தமிழக காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்புப் படையும் ஸ்பாட்டை முழுமையாக கட்டுப்பாட்டி எடுத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சோதனைகளால் தொண்டர்கள் கூட்டம் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் எல்.முருகன் அப்செட் ஆகிவிட்டார். கூட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த போதும் மேடைக்கு முன்பிருந்து விஐபி பிரிவு இருக்கைகள் நிரம்பவில்லை.

விஜபி பாஸ் இல்லையென்றாலும் வருகிற தொண்டர்களை விஐபி இருக்கைகளில் அமர வையுங்கள்' என மைக்கில் போலீசாரிடம் கூறினர். விஐபிக்களுக்கு மட்டும்தான் பாஸ் எனக்கூறி லிஸ்ட்டெல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் விருப்பத்துக்கு எல்லாரையும் அனுமதிக்க சொல்கிறார்கள். மேடையின் முன் பகுதி சென்சிட்டிவான பகுதி அங்கே எப்படி எல்லாரையும் அனுமதிக்க முடியும்?' என காவல்துறையினர் குறைபட்டுக் கொண்டனர்.
திடீரென எஸ்.பி.வேலுமணியும் மைக்கை வாங்கி, 'அங்க யாருங்க இன்ஸ்பெக்டரு. சொன்னா செய்ய மாட்டீங்களா. ஏன் அவ்வளவு கூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க. உடனே உள்ள அனுப்புங்க' என அதட்டும் தொனியில் பேசினார். இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் கார் நெருக்கடியில் சிக்கி பொதுக்கூட்டத்துக்கு வர முடியாமலேயே திரும்பினார். அவரும் தன் பங்குக்கு காவல்துறையின் மேல் குற்றஞ்சாட்டினார்.
அசௌகரியமான அதிமுகவினர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் என அழைத்துவிட்டு, பாஜக தங்களின் கொள்கை சார்ந்த கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கொஞ்சம் அசௌகரியமாகினர். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'எல்லாரும் சேர்ந்து கோஷம் போடலாமா..' எனக் கேட்டு, 'பாரத் மாதா கி ஜே..' 'வந்தே மாதரம்' 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை மேடையிலிருந்து எழுப்ப பாஜக தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாகமாக பதில் கோஷம் எழுப்பினர்.

இடையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள்தான் சங்கடத்தில் நெளிந்தனர். இடையில் வளர்மதி திடீரென மேடைக்கு வந்து, 'புரட்சித் தலைவர்...புரட்சித் தலைவி...' என பதில் கோஷம் போட்டார். அதில்தான் அதிமுகவினர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர்
நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையிலும் 'ஹமாரா மோடி சர்க்கார்...' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் முழங்கினார். இதையும் மேடையிலிருந்த அதிமுக தலைகள் ரசிக்கவில்லை. கூட்டம் முடிகையில் மீண்டும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அண்ணாமலை, நயினார், வானதி என பாஜக தலைகள் எல்லாம் உற்சாகமாக கோஷம் போட எடப்பாடியும் டிடிவியும் முதல் வரிசையில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.!
















