சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்...
தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்
சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், "தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள்.

தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை.
இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம்.
ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்
















