தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!
தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள்.

தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள்.

ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.












