செய்திகள் :

அணை ஓசை : இது வளம் பெருக்கும் மேட்டூர் அணையின் கதை! - பகுதி 01

post image

“காவிரி ஆறு - தமிழரின் உயிர்நாடி

நீர் – இயற்கையின் உயிர்த்துளி!

அது மனிதனுக்கு மட்டுமே அல்ல, பூமியில் உள்ள 8.75 மில்லியன் உயிரினங்களுக்கும் உயிர் ஆதாரம்.

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவத்தின் சொல், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் வாழ்வின் அச்சாணி. புல்லின் நுனியில் துளிர்க்கும் பசுமை முதல் மனிதனின் உணவு, பண்பாடு, செழிப்பு அனைத்திற்கும் நீரே அடித்தளம்.

தமிழர் பண்பாட்டில் நீர் புனிதமானதாகக் கருதப்பட்டது. சங்க கால மக்கள் நீர் மேலாண்மையில் வல்லவர்கள். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் தோண்டி நீரைத் தேக்கி, அதை பாதுகாக்கும் அறிவு அவர்களிடம் இருந்தது. இலக்கியங்களில் நீரின் அழகு, புனிதம், தண்ணீரின்றி வாழ்வின் துயரம் அனைத்தும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடபுலவியனார், பாண்டிய அரசனிடம் “நீர் வளம் பெருக்குவதே அரசனின் கடமை” என்று அறிவுறுத்திய பாடல், அதற்குச் சான்று.

இந்தச் சூழலில் தென்னிந்தியாவின் பெருமையான “காவிரி ஆறு”, தமிழரின் உயிர்நாடியாக விளங்கியது. பட்டினப்பாலை முதல் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் வரை `காவிரி' இலக்கியங்களில் புனித நதியாகப் போற்றப்பட்டாள்.

அவளது ஓசை, பசுமை, செழிப்பு – அனைத்தும் தமிழரின் வாழ்வுடன் இணைந்திருந்தது.

காவிரி ஆறு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காவிரியின் பெருக்கை அடக்கி, அதன் அருளை வருடம் முழுவதும் நிலத்துக்கு சீராக வழங்க வேண்டும் என்ற எண்ணமே “மேட்டூர் அணைத் திட்டத்தை” உருவாக்கியது.

1925 ஜூலை 20 அன்று பணிகள் தொடங்கின; ஒன்பது ஆண்டு உழைப்பின் பின், 1934 ஆகஸ்ட் 21 அன்று அணை திறக்கப்பட்டது. இந்த அணை கல், கான்கிரீட் மட்டுமல்ல — தமிழனின் கனவுகளின் வடிவம், மக்கள் தியாகத்தின் சின்னம், மனித உழைப்பின் வெற்றி!

மேட்டூர் அணை கட்டப்படுவதால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்ற காரணத்தால் அப்போது பல கிராமங்களில் இருந்து மக்கள் ஒட்டுமொத்தமாக சொந்த வீடு, நிலங்கள் இவற்றை காலி செய்யவைத்து வெளியேற்றப்பட்டார்கள்.

தொலைதூர ஊர்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் அப்போதைய பரிதாப நிலை என்ன? அவர்களது சந்ததிகளின் இன்றைய நிலை என்ன? போன்றவற்றையும் இந்தத் தொடர் ஆராய்கிறது.

அப்படி இடம் பெயர்ந்த அந்த மக்களில் தற்போது 102 வயது, 98 வயது, 93 வயதுடைய மூத்தோர்களிடம் நேர்முக உரையாடலை இக்கட்டுரை ஆசிரியராகிய நான் நடத்தினேன்.

அந்தத் தகவல்கள் மிகுந்த ஆச்சரியம் அளிக்க வல்லவை!  குறிப்பாக கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டம், மாரட்டள்ளி, கவுதள்ளி போன்ற ஊர்களில் தற்போது வசித்து வரும், இடம் பெயர்ந்த மக்களின் கதை,

அது பெருங்கதை! 

இந்தத் தொடருக்கான தரவுகளாக, 150 வருட பிரிட்டிஷ் கால ஆவணங்கள் சென்னை ஆவணக் காப்பகம், தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக நூலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், சர்.சி.பி.ராமசாமி அய்யர் நூலகம், தி ஹிந்து ஆவணக் காப்பகம், உ.வே.சா. நூலகம் மற்றும் பல ஊர்களின் அரசு நூலகங்கள் இவற்றிலிருந்து கண்டெடுத்த ஆவணங்களாகும்.

இந்தத் தொடரின் இலக்கு:

அணை கட்டிய வரலாற்றை முழுமையாக பதிவு செய்வது. பொறியாளர்களின் உழைப்பு, தொழிலாளர்களின் வியர்வை, இடம்பெயர்ந்த மக்களின் கண்ணீர், சட்டமன்ற விவாதங்கள், பொது நலத் திட்டங்கள் – அனைத்தையும் ஒன்றாகக் கூறும் வரலாற்றுப் பதிவுக்கு வாசகனை அழைக்கும் ஓர் அழைப்பு:

“வருக, காவிரியோடு பயணிப்போம்!”

இனி வாராவாரம், வியாழக்கிழமை, அணை ஓசை தொடர் மூலம் `நாம் சந்திப்போம்... காவிரியோடு பயணிப்போம்!”

எழுத்து : நாகா

(தொடரும்)

நெல்லை 'பொருநை' அருங்காட்சியகம் திறப்பு விழா; வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் | ஏற்பாடு பணிகள் தீவிரம்

நெல்லை 'பொருநை' அருங்காட்சியம் திறப்பு விழா|முதல்வர் ஸ்டாலின் வருகை| ஏற்பாடு பணிகள் துரிதம்.! மேலும் பார்க்க

முதுகுளத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழைமையான நாணயம்... மாணவனுக்குப் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது செல்வநாயகபுரம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பிரசித் பாலன். இவர் தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது ப... மேலும் பார்க்க