செய்திகள் :

BB TAMIL 9 DAY 101: இம்சை செய்யும் திவாகர்; அடம் பிடிக்கும் ரம்யா! - 101வது நாளில் நடந்தது என்ன?

post image

பாரு இல்லாத இடத்தை திவாகர் நிரப்ப முயற்சிக்கிறார் போல. ஒருவழியாக கடைசியில் வீடு விக்ரமன் படமாக மாறி ‘லாலாலா’ பாட ஆரம்பிக்கும் நேரத்தில் திவாகரால் மீண்டும் சண்டை. இவர் ஏன் மறுபடியும் உள்ளே வந்தார் என்று தோன்றுமளவிற்கு இம்சையைக் கூட்டுகிறார். 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 101

திவாகர் செய்யும் ராவடிகள் பற்றி ஆதிரையிடம் அனத்திக் கொண்டிருந்தார் திவ்யா. “நான் எப்பவும் இவ்ள கோபமா பேசினதில்லை. எல்லையைத் தாண்டும் போது பிரச்சினை” என்று அவர் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு சண்டைக்கு வந்தார் திவாகர். 

அண்ணன்காரர்கள் தம்பிகளை மட்டம் தட்ட வழக்கமாக ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவார்கள். ‘டேய்.. நான் உனக்கு முன்னால உலகத்தைப் பார்த்தவன்டா’. திவாகரும் அதே புராணத்தைப் பாடுகிறார். “நான்தான் இந்த வீட்டுக்கு முதல்ல வந்தேன்”.

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

“மடில படுத்துக்கட்டுமான்னுல்லாம் ஏன்யா கேட்டே.. வெட்கம் கெட்டவனே?” என்கிற ரேஞ்சுக்கு இறங்கி அடித்தார் திவ்யா. திவாகரை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம். ஆனால் காமெடி ஆசாமியாக இருக்கிறாரே என்று இடம் கொடுத்தால் மடத்தைப் பறிக்க நினைக்கிறார் திவாகர். பொதுவெளியிலேயே எவ்வித கூச்சமும் அச்சமும் இன்றி இப்படி flirt செய்யும் ஆசாமி, தனியான சந்தர்ப்பம் கிடைத்தால் என்னென்ன பேசுவாரோ என்று தோன்றுகிறது. 

இருவருக்கும் மோதல் எட்டவே ‘சைலன்ஸ்’ என்று கத்தி அமைதியை ஏற்படுத்திய சபரி “இனிமே ரெண்டு பேரும் பேசவே கூடாது” என்று பஞ்சாயத்து செய்தார். திவாகரின் ரீஎன்ட்ரி போது ‘ஏழரையை இழுக்காதீங்க” என்று பிக் பாஸ் எச்சரித்தும் திவாகரின் அலப்பறை அடங்கவில்லை.

அடங்க மறு, அத்து மீறு - ரொமான்ஸ் இம்சை செய்யும் திவாகர்

நாள் 101. மறுநாள் காலையிலேயே இந்த விஷயத்தைப் பற்றி கலையிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் திவாகர். “இந்தப் பொண்ணு ஓவரா பண்ணுது இவனே.. மாத்தி மாத்தி கலாய்ச்சுப்போம். ஆனா நாய் மாதிரி வள்ளு வள்ளுன்னு குலைக்குது.. நான்தான் இந்த வீட்ல முதல்ல வந்தேன். (யப்பா முடியலைடா சாமி!) PR டீம் வெச்சு ஆட்டம் போடுது” என்றெல்லாம் திவாகர் மிகையாக பேச, கலையரசன் அதை ஆட்சேபிக்காமல் இருந்தது சரியல்ல. 

மாறாக “பாரு பேசறதுலயாவது ஒரு கருத்து இருக்கும்” என்று காமெடி செய்தார் கலை. “சபரி தெளிவானவன்தான். ஆனா க்ரூப்ல மாட்டிக்கிட்டான்” என்றார் திவாகர். 

மார்னிங் ஆக்டிவிட்டி. ‘போகி பண்டிகை என்பதால் எந்த வழக்கத்தை எரிக்கப் போறீங்க?” என்கிற வழக்கமான டெம்ப்ளேட்டை எடுத்தார் பிக் பாஸ். “கோபத்தை எரிக்கணும்.. பதட்டத்தை விடணும்.. அன்புக்கு அடிமையாகக் கூடாது’ என்றலெ்லாம் ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்ல “தூக்கம்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

இந்த வீட்டுக்கு வந்து, கார் டாஸ்க்லதான் சூரியன் காலைல உதிக்கும்ன்ற விஷயமே எனக்குத் தெரியும். இனிமே அந்தப் பழக்கத்தை மாத்திக்கணும்” என்று வித்தியாசமாகச் சொன்னார் அரோரா. (நீ என் இனமடா மோமெண்ட்!)

‘சென்னை செந்தமிழ்’ பாடல் ஒலிக்க, வரப் போவது கானா வினோத் என்று பலரும் தவறாக யூகிக்க ‘சான்ட்ரா’ என்று சரியாக சொன்னார் திவ்யா. சென்னை என்ற வார்த்தை வந்ததால் வினோத்துடன் கனெக்ட் செய்து விட்டார்கள் போல. ஆனால் அதில் கதகளி நடனமும் வருகிறது. 

உள்ளே வந்த சான்ட்ரா, தன் கணவர் பிரஜினை தவிர்ப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு ரோஜாவை நீட்டி “20 நாள் பார்க்காம இருந்தது, 20 யுகம் மாதிரி இருந்தது” என்று முழங்காலில் நின்று ரொமான்ஸ் செய்தார். இடைப்பட்ட நாட்களில் எப்படியும் இவர்கள் வீட்டில் சந்தித்திருப்பார்கள். என்றாலும் பொதுவெளியில் இப்படியொரு டிராமாவா என்று எண்ணத் தோன்றியது. 

உன்னை பாம்புன்னு சொல்லல’ - மறுத்த சான்ட்ரா “சொன்னே.. ஆதாரம் இருக்கு’ - அடம்பிடித்த ரம்யா

“என்னை தூக்கிக்கோ” என்று சான்ட்ரா சொல்ல, ‘கையில் முளைத்த கனவா நீ” என்று பாடல் பாடி, காமிரா கோணம் வைத்து இம்சை செய்தார் பிரவீன் காந்தி. (இவருக்கு ஏன் படம் வரலைன்னு இப்பத்தான் புரியுது!). சான்ட்ராவின் கையில் இருந்த ரோஜாவை கடன் வாங்கி சென்றார் திவாகர். (யாரிடம் தந்து ஏழரையைக் கூட்டினாரோ?!)

நேராக ரம்யாவிடம் சென்ற சான்ட்ரா “நான் உன்னை பாம்புன்னு சொல்லவேயில்ல. என் கிட்ட முழு வீடியோவும் இருக்கு. நான் உன்னை தப்பா பேசல” என்று பஞ்சாயத்தை ஆரம்பிக்க “என் கிட்ட வீடியோ இருக்கு. நீ சொன்னே” என்று ரம்யா மல்லுக்கட்டினார்.

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

(பேசிட்டே இருந்தா எப்படி, ரெண்டு வீடியோவையும் போட்டுக் காட்டுங்க!). “என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன்” என்று வழக்கம் போல் மிகையாக ரியாக்ட் செய்தார் சான்ட்ரா. தன் குழந்தைகளைப் பற்றி யாராவது பேசினால் கோபம் கொள்கிற சான்ட்ராவிற்கு, அற்ப விஷயத்திற்கு கூட அவர்கள் மேல் சத்தியம் செய்வது எரிச்சலான முரண். 

சான்ட்ராவின் அடுத்த பஞ்சாயத்து அமித்துடன். “நான் அவங்க கூட பேசவே மாட்டேன். ஒரு வாரம் ஃபுல்லா அழுதுட்டு உக்காந்தவங்களுக்கு ஆறுதல் சொல்லப் போனா, பழியை என்மேலயே போடறாங்க. நான்தான் போய் வம்படியா அவங்க விட்ட பேசினேனாம்” என்று வருத்தத்தில் இருக்கிறார் அமித். 

“ஏன் கிட்ட பேசவே மாட்டேன்றீங்க?’ என்று கையைப் பிடித்து உரிமையாக இழுத்தார் சான்ட்ரா. “இல்ல சான்ட்ரா விடுங்க.. எனக்கு பேச விருப்பமில்லை” என்று அமித் நாசூக்காக மறுக்க “இல்ல நீங்க சொல்லித்தான் ஆகணும். உங்க ஃபிரெண்ட்ஷிப் எனக்கு வாழ்நாள் முழுக்க வேணும்” என்று செனட்டியைக் கூட்டினார் சான்ட்ரா. ‘சிநேகா.. அந்தப் பேர்லதான்டா ஏமாந்தேன்’ காமெடியாக, சான்ட்ராவின் கெஞ்சலில் மனமிரங்கிய அமித் “ஏன் அப்படிப் பேசினீங்க?” என்று காரணத்தைச் சொல்ல “நான் அந்த பாயிண்ட்ல  சொல்லவேயில்லை. இருந்தாலும் ஸாரி” என்று சான்ட்ரா கெஞ்ச (மறுபடியும் சிநேகா!) வேறு வழியில்லாமல் கட்டியணைத்துக் கொண்டார் அமித். 

“இதே விஷயம் உங்களுக்கு நடந்திருந்தா, நீங்க இப்படியா ரியாக்ட் பண்ணுவீங்க?” என்று அமித் கேட்டது சரியானது. 

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

பரவாயில்லை, யாரிடமாவது சண்டை என்றால் அதைப் பற்றி விவாதிக்காமல் கோபமாக கத்தி நிழல் யுத்தம் செய்வதுதான் சான்ட்ராவின் வழக்கம். அமித்திடம் அவர் செய்த இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்கது. 

‘உங்களின் சிறந்த நண்பன் யார்?’ - நெகிழ வைத்த டாஸ்க்

‘வெறித்தனம்’ பாடல் ஒலிக்க ‘கானா’ வினோத் என்ட்ரி. ‘எப்படியிருந்தது நான் கொடுத்த அல்வா?’ என்கிற காமெடியுடன் உள்ளே வந்த வினோத்தை, உடனே ஆசையாக தூக்கிக் கொண்டார் அமித். 

அரோ அழ ஆரம்பிக்க மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். வினோத் பணம் எடுக்க அரோரா தூண்டினார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக அரோவின் அழுகை நிகழ்ந்தது. “யாரும் காரணமில்லைன்னு வினோத்தே சொல்லிட்டாரே.. அப்புறம் என்ன?” என்று மற்றவர்கள் ஆறுதல் சொல்ல “ஒழுங்கா உண்மையைச் சொல்லு. இதுக்குத்தான் அழறியா.. இல்ல. பதினெட்டு லட்சம் போச்சேன்னு அழறியா?” என்று கேட்டு அரோவை சிரிக்க வைத்தார் வினோத். “ஆக்சுவலி.. அதுதான் உண்மை. ரெண்டு நாளா அரோ புலம்பிட்டே இருக்கா” என்று மற்றவர்கள் ஜாலியாக போட்டுக் கொடுத்தார்கள். 

பாரு, கம்ருதீன் தவிர மற்றவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள். ஆரம்ப நாளைப் போலவே வீடு நிறைந்திருந்தது. அதைப் பார்த்து கண்கசிந்த பிக் பாஸ், “இந்த வீட்டில் நிறைய முரண்கள், ஆதங்கங்கள், சந்தேகங்கள் இருந்திருக்கு. என்றாலும் நீங்க நட்பு பாராட்ட தவறியதில்லை. வாங்க அந்த வீடியோவைப் பார்ப்போம்” என்று அறிவிக்க, மக்கள் உற்சாக மோடிற்கு மாறினார்கள். 

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

‘நட்பு’ என்று தலைப்பிடப்பட்ட வீடியோ, பழைய டிரங்க் பெட்டியுடன் ஆரம்பித்தாலும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. ‘We miss you பாரு.. கம்ருதீன்’ என்று சிலர் சொன்ன போது நமக்கும் ஆமோதிக்கத் தோன்றியது. (பாவம், இருந்திருக்கலாம்!)

“ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த நண்பனை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும். ஒருவரைத்தான் சொல்ல வேண்டும்’ என்று பிக் பாஸ் தந்த டாஸ்க் நன்று. சண்டையும் மூட்டிவிடுகிற பிக் பாஸ், இப்படிப்பட்ட சென்டிகளையும் சேர்த்துக் கொள்வார். (எல்லாமே வணிகம்தானே?!)

அன்பின் மூலம் கிடைப்பதுதான் உண்மையான வெற்றி

விக்ரம், ரம்யா.. என்று இந்த டாஸ்க்கில் அதிகம் பேர் சொன்ன பெயர் கனி. பிக் பாஸ் ஆட்டத்தில் மேடையில் நின்று கோப்பையை பெற்றவர்கள் மட்டுமே உண்மையான வெற்றியாளர் அல்ல. 

இதில் உண்மையாக ஜெயிக்க கன்டென்ட்டோ.. தந்திரமோ, நெகட்டிவிட்டியோ, சண்டையோ, புறணியோ தேவையில்லை. உண்மையாக அன்பு செலுத்தத் தெரிந்தால் போதும். அந்த வகையில் இந்த சீசனின் வெற்றியாளர் கனி என்றே சொல்வேன். 

“எனக்கு எப்போதும் பிரெண்டு பாருதான்” என்று சொல்லி அமர்ந்தார் திவாகர். (இனம், இனத்தோடுதானே சேரும்?!), வினோத்தின் பெயரைச் சொன்னார் அமித்.

ஆனால் வினோத்தோ பதில் மொய் வைக்காமல், ‘அவன் கூட எத்தனையோ சண்டை போட்டிருக்கேன். அவன்தான் என் பெஸ்ட் பிரெண்ட்’ என்று சொன்னது நோ்மையைக் காட்டுகிறது. ஆதிரையின் பெயரை எஃப்ஜே அம்மணியின் முகத்தில் நெகிழ்வு. 

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

வியானாவின் பெயரை சுபிக்ஷா சொல்ல, ஓடி வந்து கட்டிக் கொண்டார் வியானா. திவ்யாவின் டர்ன் வரும் போது “இங்க இருக்கிற நட்பைப் பார்த்தா பொறாமையா இருக்கு. நானும்தான் இந்த வீட்ல நிறைய நட்பு பாராட்டியிருக்கேன். ஆனா எனக்குன்னு யாரும் அமையல. அப்படி அமைந்த நட்பும் தவறான தோ்வா போயிடுச்சு (காமிரா சான்ட்ராவைக் காட்டுகிறது). என் பெயரை யாருமே சொல்லல” என்று கலங்க ஆரம்பிக்க அனைவரும் வந்து கட்டிக் கொண்டார்கள். 

‘இப்பவும் சான்ட்ரா டிராமாதான் ஆடறா’ - திவ்யா சோகம்

பிரஜின் ஓடி வந்து “அது எப்படி உன் பெயரை யாரும் சொல்ல மாட்டாங்கன்னு நீயா முடிவு பண்ண.. நீதான் எனக்கு முக்கியமான பிரெண்ட். சான்ட்ரா கூட அதுக்கு அப்புறம்தான்” என்று ஆறுதல் சொன்னது சிறப்பு. (ஆனா வீட்ல போய் என்ன வாங்கி கட்டிக்கப் போறாரோ?!) இதைப் பார்த்து வேறு வழியில்லாமல் சான்ட்ராவும் ஓடி வந்து திவ்யாவை கட்டிக் கொண்டார். 

எலியும் பூனையுமாக இருந்த விக்ரமும் திவ்யாவும் இப்போது உரையாட ஆரம்பித்திருப்பது சிறப்பு. “நட்புல்லாம் தன்னால அமையணும். சான்ட்ரா வந்து கட்டிப்பிடிச்சது டிராமாவா எனக்குத் தோணுது.

BB TAMIL 9 DAY 101
BB TAMIL 9 DAY 101

வெளில இருந்து வீடியோ பார்த்து மனம் மாறியிருந்தா, வீட்டுக்குள்ள வந்தவுடனே கட்டியணைச்சிருக்கணும். பேசியிருக்கணும். அதையெல்லாம் பண்ணலை. டாஸ்க்ல பண்ணது போலியா தெரியுது” என்று திவ்யா புலம்ப “நீங்க ரொம்ப நேர்மையான ஆளு” என்று பாராட்டினார் விக்ரம். 

வீடு நிறைந்திருக்கும் போது ஆரம்ப நாளைப் பார்க்கிற மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பாரு, கம்ருதீனின் இடம் காலியாக இருப்பதைப் பார்க்கும் போது சற்று சோகமாத்தான் இருக்கிறது.

Finale நிகழ்ச்சிக்கு அவர்கள் அழைக்கப்பட்டால் நன்று. என்ன இருந்தாலும் மன்னிக்கறவன்தானே பெரிய மனுஷன். என்ன சொல்றீங்க பிக் பாஸ்?!

திருமண வாழ்க்கையில் நுழைந்தார் பிக்பாஸ் ஜூலி! - இன்று நிக்காஹ், நாளை சர்ச்சில் வரவேற்பு!

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. நீண்ட நாள்களாக காதலித்து வந்த முகமது என்பவரைக் கரம் பிடித்தார்.சில தினங்களுக... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க" - வினோத்திடம் அழும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.டாப்... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 100: கண்ணில் காதலுடன் அரோ, GVM பட ரொமான்ஸ்; கலங்கவைத்த கனி - 100வது நாள் ஹைலைட்ஸ்

கிளைமேக்ஸில் வில்லன் திருந்துவது போல, கட்டக் கடேசியில் பிக் பாஸ் வீடு பாசிட்டிவிட்டிக்கு திசை திரும்பியிருப்பது மகிழ்ச்சி.துஷார் - அரோ ரொமான்ஸ் ஒரு பக்கம், விக்ரம் -கனி சென்ட்டிமென்ட் இன்னொரு பக்கம் எ... மேலும் பார்க்க

BB Tamil 9: "ரம்யா நீ பார்த்தது தப்பு; நான் உன்னை அப்படி சொல்லவே இல்ல" - சாண்ட்ரா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.டாப்... மேலும் பார்க்க