திருமண வாழ்க்கையில் நுழைந்தார் பிக்பாஸ் ஜூலி! - இன்று நிக்காஹ், நாளை சர்ச்சில் வ...
பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்!
மும்பை தாராவியில் ஒவ்வோர் ஆண்டும் 90 அடி சாலையில் 2000 பெண்கள் கூடி ஒரே இடத்தில் பொங்கலிடுவது வழக்கம். இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம். இந்த விழாவை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்கூட வருவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழ் அமைப்புகள் பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தேர்தல் ஜனவரி 15ம் தேதி தேர்தல் என்று அறிவித்தவுடன் பொங்கல் கொண்டாட்ட வேலைகளை தமிழ் அமைப்புகள் அப்படியே கைவிட்டுவிட்டனர்.
தேர்தல் நேரத்தில் போலீஸார் சாலையில் பொங்கல் வைக்க அனுமதி கொடுப்பது சந்தேகம் என்பதால் தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த ஆண்டு பொங்கல் விழாவை 90 அடி சாலையில் கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். இந்த பொங்கல் விழாவை வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

ஆனால் பொங்கல் நாளில் அதனை வைத்தால்தான் சரியாக இருக்கும் என்று சில அமைப்புகள் தெரிவித்தன. இதையடுத்து அடுத்த ஆண்டு விமரிசையாக இவ்விழாவை கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யும் பா.ஜ.க பிரமுகர் விவேகானந்த ராஜாவிடம் பேசியபோது, ``தேர்தல் தினத்தன்று பொங்கல் வைப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் அன்றைய தினத்தில் பொங்கல் வைப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்தனர். பொங்கல் வைக்கும்போது காலை நேரத்தில் 9 மணி வரை 90 அடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கம். தேர்தல் நேரத்தில் அவ்வாறு போக்குவரத்தை நிறுத்த முடியாது என்று தெரிவித்தனர். இதனால் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்'' என்றார்.




















