'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
முதுகுளத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழைமையான நாணயம்... மாணவனுக்குப் பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது செல்வநாயகபுரம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பிரசித் பாலன். இவர் தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நாணயம் போன்ற ஒன்று கீழே கிடப்பதைக் கண்டுள்ளார். அதனை எடுத்துப் பார்த்தபோது அது பழைய காலத்து நாணயம் போன்ற தோற்றத்தில் இருந்திருக்கிறது. அதனை தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். இதனை வாங்கிப் பார்த்த அவர், இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுருவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தப் பழங்கால நாணயத்தை அவர் ஆய்வு செய்தபோது அந்த நாணயம் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமையான ஈழக்காசு என தெரியவந்தது. மேலும் அந்த நாணயத்தில் முதலாம் ராஜராஜ சோழனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த பழைமையான நாணயம் குறித்து விளக்கிய ராஜகுரு, ''மாணவன் கண்டெடுத்தது முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த செம்பால் ஆன ஈழக்காசு ஆகும். வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் பின்னணியில் சிறப்பு வெளியீடாக இத்தகைய ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையின் கீழிருந்த நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது.
இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசில் பாசிபடர்ந்திருப்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லை. ஓரங்கள் தேய்ந்துள்ளன.
ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டிணம், தொண்டி, களிமண்குண்டு, அழகன்குளம், கோரைக்குட்டம், திருப்புல்லாணி போன்ற பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ள நிலையில் தற்போது உள்பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல ஊர்களில் இக்காசுகளைக் கண்டெடுத்த நிலையில் தற்போது செல்வநாயகபுரத்திலும் இத்தகைய நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ஆயிரம் ஆண்டு பழைமையான இந்த நாணயத்தை கண்டெடுத்த மாணவன் பிரசித் பாலனை, பள்ளி தலைமை ஆசிரியர் அகமது பைசல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
















