`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?
`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?
மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் தாராவி மற்றும் மலாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்படி பிரசாரம் செய்தபோது மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றும், எனவே மும்பையில் பா.ஜ.க மேயர் வரவேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ''மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது. அது ஒரு சர்வதேச நகரம். மும்பை பட்ஜெட் 75 ஆயிரம் கோடியாக இருக்கிறது.

பெங்களூரு பட்ஜெட் 18 ஆயிரம் கோடியாகவும், சென்னை பட்ஜெட் 8 ஆயிரம் கோடியாகவும் இருக்கிறது. எனவே மும்பை நிர்வாகத்தில் நல்லவர்களை அமர்த்துங்கள்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அண்ணாமலையில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று எப்படி அண்ணாமலை கூறலாம் என்று சிவசேனா(உத்தவ்) கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,''அண்ணாமலை மும்பைக்காக போராடி உயிர்தியாகம் செய்த 106 தியாகிகளை அவமதித்துவிட்டார். சூரியன், சந்திரன், நட்சத்திரம் இருக்கும் வரை மும்பை மகாராஷ்டிராவோடுதான் இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.
ஆனால் பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்கள் மும்பை மகாராஷ்டிரா நகரம் கிடையாது என்று சொல்கிறார்கள். இது போன்று கருத்து தெரிவித்த அண்ணாமலை மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். அண்ணாமலையில் கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. மும்பை மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது கிடையாது என்றால் வேறு யாருக்கு சொந்தம்'' என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அதே கட்சியை சேர்ந்த அகில் சித்ரே கூறுகையில், ''மும்பையின் பெயரும் அடையாளமும் மராத்தி மக்களின் போராட்டங்களிலும் தியாகங்களிலும் வேரூன்றியுள்ளன. வேண்டுமென்றே அதை 'பம்பாய்' என்று அழைப்பதும், மகாராஷ்டிராவில் அதன் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும் அந்த மரபுக்கு நேரடியாக விடுக்கப்படும் சவாலாகும். இது தேர்தல்களின் போது பதட்டங்களைத் தூண்டும்'' என்று அவர் கூறினார்.
















