"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்...
`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியில் ஆழி செந்தில்நாதன்
சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சியில், மொழியுரிமை செயல்பாட்டாளரும், ஆழி பதிப்பகத்தின் நிறுவனருமான செந்தில்நாதன் பேசினார்.
ஏன் ஆழி ?
``ஆழி என்பது ஆழமானது. அது போன்று நல்ல ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். இதுவரை 400 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
ஆழி பதிப்பகத்தை பொறுத்தவரை அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து எழுத்தாளர்கள் நேரடியாக எழுதுவதும், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களாகவும், தொகுப்புகள் ஆகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
கடல், கடல்வழி பயணம் பற்றி படிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியோடு இணைந்து பிற நாடுகளில் உள்ள புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறோம்.
ஆழி பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் சிறப்பு என்னவென்றால், நூற்றாண்டை தொட்டிருக்கும் சுயமரியாதை இயக்கத்தை நினைவூட்டும் வகையில், 100 புத்தகங்களை சுயமரியாதை இயக்கம் சார்ந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 புத்தகங்களை தொகுத்து இந்த ஆண்டு இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

நீதிக்கட்சி,பெரியார், அண்ணா , கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் என இந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளது.
ஜென் சி களின் எழுத்துலகம்
இந்தத் தலைமுறை 1952 இல் வெளிவந்த பராசக்திக்கும் 2026 இல் வெளிவர இருக்கும் பராசக்திக்கும் இடையிலான அரசியல் விஷயங்கள் நிறைய மாணவர்களிடையே சென்றடைந்து இருக்கிறது.
இளம் தலைமுறைக்கு ஏன் புத்தகங்கள் முக்கியம் என்றால், சமூக வலைதள பக்கத்தில் வெறும் பதிவுகள் போடுவதால் மட்டும் பயன் அல்ல. அது புத்தகமாக மாறும்போது பிரிண்ட் ஆக இருக்கலாம் இ புக்காக இருக்கலாம்.

நீங்கள் பதிவிடுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆகும் போது, அதிகாரம் பெற்ற நிபுணராக மாறுகிறீர்கள். பல துறைகளைப் பற்றிய விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும். அது நீண்ட நாள் நீடிக்க வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து ஜென் சி மாணவர்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
இந்த நாளின் உலக சூழலை எடுத்துக் கொண்டால் நான் விரும்பக்கூடிய புத்தக பரிந்துரைகள் இதுதான்..!
1. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் காக்கப்பட வேண்டியது ஜனநாயகம் தான். ஜனநாயகத்தைப் பற்றி உலக அளவில் பல அறிஞர்கள் பல கண்ணோட்டத்தில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் கேட்பதால் உடனே என்னால் சொல்ல முடியவில்லை. செயற்கை நுண்ணறிவிடமே முதல் 10 புத்தகங்கள் கேளுங்கள். அதுவே உங்களுக்கு பதில் அளிக்கும்.
2. இந்தியாவில் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் எதுவென்றால் குறிப்பாக ஆண்கள் படிக்க வேண்டும் இந்த புத்தகத்தை. பெரியாரின் " பெண் ஏன் அடிமையானால்?" இது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்கள் படிக்க வேண்டிய கட்டாயமான புத்தகம்.
3. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்து இருக்கிறது. இவை அனைத்திற்கும் திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு நன் மதிப்பு கொடுத்தாலும் இதன் வேர் தொடங்கியது அறிஞர் அண்ணாவின் "பணத்தோட்டம்" என்ற புத்தகம் தான். இதை அனைவரும் படிக்க வேண்டும். 1947லிருந்து தமிழ்நாடு பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த புத்தகத்திலிருந்து தான் தொடங்குகிறது.

4. உலக அளவில் தற்போது வளர்ந்து வரக்கூடியது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதைப் பற்றி அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை பற்றி அறிய செயற்கை நுண்ணறிவிடமே கேளுங்கள், உன்னை பற்றி படிப்பதற்கு எந்த புத்தகங்கள் நன்றாக இருக்கும் என்று..! நான் படித்தது, ஆங்கிலத்தில் Super Intelligence என்ற புத்தகம் இருக்கிறது. அதை நாங்கள் ஆழி பதிப்பகத்தில் "மெய்யறிவு" என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம்.
5. காலநிலை மாற்றம் மனிதன் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால். Greta Thunberg என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரின் சுற்றுச்சூழல் தொகுப்பான "The collection of best article on Climate change"
இது அமேசானில் கிடைக்கும். இன்றைய உலக சூழலியல் பற்றி விளக்கும் புத்தகமாக இது அமைகிறது.





















