`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?
`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' - கவிஞர் மனுஷ்யபுத்திரன்
உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனை, சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாற்றினோம்.
நம்மிடம் பேசிய அவர், ``இன்றைய இளைஞர்கள் ஜென்சி கிட்ஸ் என்ற கருத்தாக்கத்தையே நான் ஏற்க மறுக்கிறேன். ஏனென்றால், இந்த தலைமுறையைச் சேர்ந்த 100 இளைஞர்களை எடுத்துக் கொண்டால் 100 பேரும் ஒரே விதத்தில் இருப்பதில்லை.
10 பேர் அரசியலை பின்பற்றுவார்கள்,10 பேர் விளையாட்டை பின்பற்றுவார்கள், 10 பேர் சினிமாவை பின்பற்றுவார்கள், 10 பேர் மது மற்றும் போதையின் பிடியில் சிக்கி இருப்பார்கள். ஆக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். பொதுவாக ஜென்சி கிட்ஸ்கள் என்றாலே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது.

இன்று சமூக வலைதள பக்கத்தில் துண்டு (Shorts) காணொளிகளில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ரீல்ஸ்களை போடுபவர்களை ஜென்சி கிட்ஸ்களின் பிரதிநிதிகளாக பார்க்கிறோம். இது தவறான கண்ணோட்டம். இன்றைய இளைஞர்கள் பலவிதமாக இருக்கிறார்கள்.
படிக்கும் பழக்கம் ஒருவர் சொல்லிக் கொடுப்பதால் மட்டும் வருவது கிடையாது. எனக்கு ஒரு புத்தகம் முக்கியமானதாக தோன்றும். ஆனால் அது மற்றவர்களுக்கு முக்கியமானதாக இல்லாமல் இருக்கும். ஆக நமக்குத் தேவையான, நாம் எந்தத் துறைக்கு போகிறோம் என்பதை பார்த்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

கதை பிடிக்கும் என்றால் கதை படியுங்கள், கவிதை பிடிக்கும் என்றால் கவிதை புத்தகங்கள் வாசியுங்கள். சிறுகதை என்றால் ஜெயகாந்தன், அழகிரிசாமி, அசோக மித்ரன் இருக்கிறார்கள். கவிதை என்றால் கலாப்பிரியா, ஞானக்கூத்தன் ஆத்மாநாம், விக்ரமாதித்தன் என பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.
வாசிப்பை சுருக்க முடியாது. எழுத்துலகம் என்பது ஒரு பெரிய கடல். இங்கு என்ன இருக்கிறது, என்ன கிடைக்கும் என்றாவது வந்து கால்களையாவது நனைக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களுக்கு புத்தகப் பரிந்துரையை விட நான் சொல்வது என்னவென்றால், இணையத்திலும், களத்திலும் அரசியல் பெயரில் அரசியலற்று சுற்றுகிறார்கள்.
அரசியல் களத்தில் வருகிறீர்கள் என்றால் உங்களின் வாழ்வையும் இந்த சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய தலைவரின் பின்னால் செல்லுங்கள். உங்களை அரசியல் அடியாட்களாக வெறும் சாதி மத பிற முட்டாளாக்கும் கவர்ச்சி அரசியலுக்கு பின்னால் செல்வது தவறான போக்கு.

புத்தகப் பரிந்துரை என்பதையே நான் விரும்புவதில்லை. நான் இளைஞனாக இருந்த போது படித்தது என்றால் லியோ டால்ஸ்டாய் எழுதிய War and Peace 3000 பக்கங்களை கொண்டது. Dostoevsky எழுதிய Crime and Punishment படித்தேன்.
இது எல்லாம் நான் 18 வயதாகும் போது படித்தது. இப்போதுல்ல ஜென்சி கிட்ஸ்கள் இதையெல்லாம் படிப்பார்களா..? நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பயணிக்க விரும்பும் துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கி படியுங்கள். ஒவ்வொருவருக்கும் புத்தக ரசனை மாறுபட்டது" என்றார்.





















