ஆபாசக் குறுஞ்செய்தி? ``ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" - தமிழிசை சௌந...
`அதற்கு முன் அப்படி செய்யவில்லை என யார் சொன்னது?' - மௌனம் கலைத்த கவாஜா; மீண்டும் வெடிக்கும் சர்ச்சை
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய 'சாண்ட்பேப்பர்' பந்து சேதப்படுத்தல் சர்ச்சை குறித்து, பல வருடங்களாக நிலவி வந்த மௌனத்தை உடைத்திருக்கிறார் அந்த அணியின் மூத்த வீரர் உஸ்மான் கவாஜா. 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட்டில் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், அதற்கு முந்தைய போட்டியிலேயே சாண்ட்பேப்பரை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாகவும், இது ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து செய்த தவறு என்றும் தனது சுயசரிதையில் வெளிப்படையாகக் கூறியுள்ளார் கவாஜா.
'சபர்' (Sabr) என்ற பெயரில் வெளியாகியுள்ள தனது சுயசரிதை புத்தகத்தில், 2018 தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் அதிர்ச்சிகரமான பக்கங்களை கவாஜா விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
கெபர்கா (அப்போதைய போர்ட் எலிசபெத்) நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, தென் ஆப்பிரிக்க அணி வலுவான நிலையில் இருந்தது. அப்போது, இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன், கேமரூன் பேன்கிராஃப்ட் பந்தை சாண்ட்பேப்பர் கொண்டு தேய்த்ததாக கவாஜா குறிப்பிட்டுள்ளார்.

"அந்த செஷனில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை நாங்கள் முற்றிலும் நிலைகுலைய வைத்தோம். இடைவேளைக்குப் பிறகு களத்திற்கு வந்த பேன்கிராஃப்ட், பந்தை எடுத்து சில முறை தேய்த்தார். அதன் பிறகு பந்து அற்புதமாக ஸ்விங் ஆனது. பந்தின் ஒரு பக்கம் பளபளப்பாகவும், மறுபக்கம் சாண்ட்பேப்பரால் கடினமாகவும் உலர்ந்தும் இருந்தது. பந்து நம்ப முடியாத அளவுக்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. நானே அந்தப் பந்தை வீசினால் கூட ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் என்று நினைத்தேன்," என்று அந்த சம்பவத்தை விவரிக்கிறார் கவாஜா. அதன் விளைவாக, தென் ஆப்பிரிக்கா 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சரிவைச் சந்தித்தது.
பந்து அதிகமாக ஸ்விங் ஆனதைக் கண்டு, பந்துவீச்சாளர்களில் ஒருவர், "ஃப்ரண்ட்ஸ், பந்து இப்போது பயங்கரமாக ஸ்விங் ஆகிறது. இனிமேல் எதுவும் செய்யாதீர்கள். இது முட்டாள்தனமாக இருக்கிறது," என்று கூறியதாகவும், அதைக் கேட்டு அணியில் பெரும்பாலானோர் சிரித்ததாகவும் கவாஜா எழுதியுள்ளார். "நாங்கள் கேப் டவுனில்தானே பிடிபட்டோம், அதற்கு முந்தைய போட்டியில் இதைச் செய்யவில்லை என்று யார் சொன்னது?" என்ற கேள்வியுடன் அந்த அத்தியாயத்தில் அவர் மேலும் அதிர்ச்சி அளிக்கிறார்.
இந்த விவகாரத்தில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். ஆனால், இது ஒட்டுமொத்த அணியின் தவறு என்கிறார் கவாஜா. "இது நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்த தவறு. ஒரு அணியாக நாங்கள் தவறுகளைச் செய்தோம். பல ஆண்டுகளாக இதுகுறித்து நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம்," என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், இந்த சர்ச்சை குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்திய விசாரணையில், தன்னிடம் ஒருபோதும் விசாரணை நடத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சர்ச்சை வெடித்தபோது, அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பந்து சேதப்படுத்தப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்திருக்கிறார். இதைக் கண்டு டேவிட் வார்னர் கடும் கோபமடைந்ததாகக் கூறும் கவாஜா, தானும் உண்மையைப் பொதுவெளியில் சொல்ல விரும்பியதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அப்போதைய பயிற்சியாளர் டேரன் லீமனிடம் பேசியபோது, "உஸ்மான், துரதிர்ஷ்டவசமாக இது அனைவரையும் பாதிக்கும். நீ இப்போது வெளியே வந்து இதையெல்லாம் சொன்னால் எந்தப் பயனும் இல்லை. தண்டனைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்," என்று லீமன் அறிவுறுத்தியதாகவும் கவாஜா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பு நடந்த 2017-18 ஆஷஸ் தொடரில்கூட பந்தின் தன்மையை மாற்றியதாக கவாஜா குறிப்பிடுகிறார். குறிப்பாக, பிங்க் பந்து டெஸ்ட்டில், பந்தின் 'குவாட்டர் சீம்' பகுதியை சுரண்டி, அது ரிவர்ஸ் ஸ்விங் ஆக உதவியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். "அந்தக் காலகட்டத்தில், பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய உலகில் உள்ள அனைத்து அணிகளும் தங்களால் முடிந்த சிறிய விஷயங்களைச் செய்து கொண்டிருந்தன," என்றும் அவர் தனது செயலுக்கு ஒரு விளக்கத்தையும் சேர்த்துள்ளார். கவாஜாவின் இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கறுப்பு அத்தியாயத்தை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


















