7 நாள் கெடு: காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகளுக்கு கட்டுப்பாடு விதித்த மெட்டா அலுவல...
"அதில் எங்கிருந்து எங்க அப்பா வந்தார்?" - 'நெப்போடிசம்' பேச்சுகள் குறித்து லியோ சிவக்குமார்
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார், பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டெலிவரி பாய்' திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லியோ சிவகுமார் திண்டுக்கல் லியோனியின் மகன் என்கிற தகவல் பலரும் அறிந்ததே.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெப்போட்டிசம் தொடர்பாக லியோ சிவகுமார் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "நான் திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பு வரைக்கும் வெறும் சிவகுமாராகத்தான் இருந்தேன். ஆனால், சினிமாவில் கால் வைத்த பிறகு 'லியோனி பையனாக' மாறிவிட்டேன். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
நெப்போ கிட், நெப்போட்டிசம் என்றெல்லாம் சொல்கிறார்கள். 'மீசைய முறுக்கு 2' படம் பார்க்கும்போதுதான் எனக்கு நெப்போட்டிசம் என்பதன் அர்த்தமே புரிந்தது. நான் எங்க அப்பாவுக்குப் பிறந்தவன். என் பெயர் லியோ சிவகுமார். சினிமாவில் ஆரம்பத்தில் எத்தனையோ படிகள் ஏறி இறங்கியிருக்கிறேன்.
ஒரு சாதாரண மனிதன் என்னவெல்லாம் கஷ்டப்படுவானோ, அதையெல்லாம் நானும் கடந்துதான் வந்தேன். ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு நிறையப் போராட வேண்டும். அதற்கு என் இயக்குநரும் சாட்சியாக இருக்கிறார்.
இதையெல்லாம் கடந்துதான் இங்கே வந்து நின்றிருக்கிறோம். இதில் எங்கிருந்து எங்க அப்பா வந்தார்? அவரால் நான் எப்படி உள்ளே வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.

எங்கள் ஒட்டுமொத்தப் படக்குழுவும் சேர்ந்து கடுமையாக உழைத்திருக்கிறோம். அந்தப் படத்தை நீங்கள் திரையில் பாருங்கள். என் நடிப்பிலோ அல்லது கதைத் தேர்விலோ நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், என்னைக் கழுவிக் கழுவி ஊத்துங்கள்.
அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. அதேபோல, நான் ஏதாவது நல்லது செய்திருந்தால், அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பும் உங்கள் கையில்தான் இருக்கிறது. எனவே, என்னை ஒரு தனிப்பட்ட கலைஞனாகப் பாருங்கள் என்று உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.




















