சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! - அதிமு...
அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?
மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் நேரில் சென்று இக்கடிதத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த எம்.பி.க்கள் பணத்திற்கு விலைபோய்விட்டதாக உத்தவ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2022ம் ஆண்டு சிவசேனாவில் பிளவு ஏற்பட்ட போது ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கு தலா ரூ.50 கோடி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அதேபோன்று இப்போதும் எம்.பி.க்களுக்கு தலா 50 கோடி கொடுக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இரண்டு பேர் கையெழுத்திடவில்லை என்று உத்தவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு எம்.பி.க்களும் இதுவரை தெளிவான முடிவு எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. தாராஷிவ் தொகுதி உறுப்பினர் ஓம்ராஜே நிம்பல்கர் ஜூன் 20-க்குப் பிறகு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தப்போவதாகக் கூறினார்.
அதேசமயம் மும்பை வடகிழக்கு தொகுதி உறுப்பினர் சஞ்சய் தினா பாட்டீல் தான் மும்பையிலேயே இருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,''இதுபோன்ற யூகங்களால் நான் சோர்வடைந்துவிட்டேன்.

ஏதேனும் நடக்கவிருந்தால் அது நடக்கும். இதைப் பற்றிப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. அதிருப்தி எம்.பி.க்களின் பட்டியல் தொடர்பான எந்தவொரு விஷயத்திற்காகவும் நான் எங்கும் செல்லப்போவதில்லை. ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அப்படியிருக்க நான் ஏன் அவர்களிடம் செல்ல வேண்டும்? மற்ற எம்.பி.க்களுடன் நான் தொடர்பில் இல்லை," என்று தினா பாட்டீல் கூறினார்.
அமைதி புரட்சி?
2022 சேனா பிளவுடன் ஒப்பிடுகையில், சமீபத்திய முன்னேற்றங்கள் வித்தியாசமாக இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இப்போது பிரிந்து செல்லும் பட்டியலில் உள்ள 6 சேனா (உத்தவ்) எம்.பி.க்களில் மூன்று பேர் 2024 மக்களவை தேர்தலில் ஷிண்டே சேனா வேட்பாளர்களுக்கு எதிராக ‘சேனா vs சேனா’ போட்டியில் வெற்றி பெற்றனர். 2022ம் ஆண்டு பிளவு ஏற்பட்டபோது பா.ஜ.க மற்றும் இந்துத்துவாவை கைவிட்டு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்ததற்காக கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான வெளிப்படையான அதிருப்தி என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போதைய பிளவு ஒரு அமைதியான சதி என்று பார்க்கப்படுகிறது. மேலும், 6 எம்.பி.க்களில் யாரும் இதுவரை சேனா (உத்தவ்) தலைமைக்கு எதிராக பகிரங்கமாக எந்த அறிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. சஞ்சய் தினா பாட்டீல் போன்ற பல எம்.பி.க்கள் சிறுபான்மை வாக்குகள் மற்றும் மும்பை வடகிழக்கில் உள்ள மான்கூர்டு மற்றும் சிவாஜிநகர் போன்ற பகுதிகளில் இருந்து மற்ற காங்கிரஸ் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற எம்.பி.க்களும் காங்கிரஸின் வாக்குகளால் பயனடைந்துள்ளனர்" என்று ஒரு பார்வையாளர் கூறியுள்ளார்.
இன்று அனைத்து எம்.பி-க்கள் கூட்டத்துக்கு உத்தவ் அணி கொறடா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.















