ஒரு வாசல் திருச்செந்தூர்; அடுத்தது மதுரை - பாளையங்கோட்டை வரலாற்றில் எஞ்சிய 'மேடை...
Vijay: ``இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது" - தமிமுன் அன்சாரி
மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத்தில் ஆற்றப்பட்ட ஆளுநர் உரை என்பது ஒரு சடங்குபூர்வமான மற்றும் பாரம்பரிய ஜனநாயகக் கடமையாகும். அரசின் கருத்துக்களை ஆளுநர் வாசிப்பது மரபு. இன்றைய ஆளுநர் உரையின் பெரும்பாலான அம்சங்கள் முந்தைய திராவிட மாடல் அரசின் கொள்கைகளை அப்படியே வழிமொழியும் வகையிலேயே அமைந்துள்ளது.
இதன் மூலம், திராவிட இயக்க அரசியல் தத்துவத்தைத் தாண்டி இவர்களால் வேறு எந்தத் திசையிலும் செல்ல முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது.

இது திராவிட இயக்க அரசியலுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் ஆளுநர் உரையில் ஒன்றிய அரசின் பக்கம் தள்ளப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும் என உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு தனியாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்பதும், ஒன்றிய அரசின் முடிவுக்குப் பிறகே தனது நிலையைத் தெளிவுபடுத்தும் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்ட கனிம வளங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டிருந்தாலும், மக்களைப் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்து இந்த உரை மௌனமாகவே இருக்கிறது. குறிப்பாக, சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, கில்லை ஆகிய கடலோரப் பகுதிகளில் 'இந்துஸ்தான்' நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக நான்கு கிணறுகளைத் தோண்ட இந்த அரசிடம் அனுமதி பெற விண்ணப்பித்திருக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் விவகாரம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்தக் கோரி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிச்சயமாக குரல் எழுப்புவோம்.
ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் அடுத்தடுத்து இசைக்கப்பட்ட புதிய நடைமுறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று அவர்களின் தரப்பிலிருந்து வெளியான சுற்றறிக்கையின்படி வழக்கமான நடைமுறையையே எதிர்பார்த்தேன். ஆனால் இறுதிப் பகுதியில் பாடப்பட வேண்டிய தேசிய கீதம் ஏன் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பது குறித்துப் புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














