அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த ந...
ஒரு வாசல் திருச்செந்தூர்; அடுத்தது மதுரை - பாளையங்கோட்டை வரலாற்றில் எஞ்சிய 'மேடை காவல் நிலையம்!'
'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது பாளையங்கோட்டை.
நூற்றாண்டு பழைமையான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் அடையாளப்படுத்தப்படும் பாளையங்கோட்டை, சுமார் 200 வருடங்களுக்கு முன் பீரங்கிப் படைகளால் சூழப்பட்டுக் கிடந்ததை நீங்கள் அறிவீர்களா?
10-16ஆம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டியர் மற்றும் நாயக்கர் கைவசம் இருந்த பாளையங்கோட்டை, பின்னர் பாளையக்காரர்களின் கைக்குச் செல்கையில் பிரமாண்டமான ஒரு கோட்டை எழுப்பப்பட்டது.
பாளையக்காரர்களால் எழுப்பப்பட்ட கோட்டை கி.பி.1752-ல் கும்பினிப் படைகள் நுழையும்போதே அக்கோட்டை அழிபாடுகிற நிலையில்தான் இருந்தது.

முந்தைய கோட்டையின் தெற்குச் சுவர் கட்டபொம்மன் சிலையிலிருந்து மனக்காவிலம்பிள்ளை பூங்கா வரையும் இருந்ததாம்.
கோட்டையின் வெளிப்புறம் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் பரந்த திடல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அக்கோட்டையானது நான்கு வாசல்களைக் கொண்டிருந்திருக்கிறது. ஒரு கோட்டை வாசல் திருச்செந்தூர் செல்லும். மற்றொரு வாசல் கன்னியாகுமரி செல்லும்.
மற்றொரு வாசல் தென்காசி என்றும் மற்றுமொரு வாசல் மதுரை என்று நான்கு பக்கமும் செல்வதால் இது பாளையங்கோட்டை என்றானது.
பாளையங்கோட்டை ஒரு காலத்தில் வல்லவமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது.
பீரங்கிப் படைகள்
பதினெட்டாம் நூற்றாண்டில், பாளையங்கோட்டையை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாளையங்கோட்டை ஆங்கிலேயர் கைவசம் சென்றது.
அப்போது பாளையங்கோட்டையின் நீளம் 2700 அடியும், சுற்றுச்சுவர் 15 அடியும் ஆகும்.
தற்போதுள்ள பாளையங்கோட்டையின் சுவடு முருகன்குறிச்சி, வாய்க்கால்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாளையங்கோட்டையின் முந்திய கோட்டை மட்டுமே.
பின்னர் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் பாளையங்கோட்டை மிகப்பெரும் கல்வி நிலையமாக மாற்றப்பட்டு, இன்று தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது.

கோட்டைக்குள் காவல் சாவடிகள்:
1856-ல் கோட்டைக்குள் காவல் சாவடிகள் நிறுவப்பட்டு அவ்விடங்களில் எண்ணுடன்கூடிய கற்களும் நடப்பட்டிருந்தன. இவ்வகையான கண்டோன்மென்ட் என்ற ஆங்கில எழுத்துடனும், எண்ணுடனும் கூடிய கற்களை இன்றும் 10 இடங்களிலாவது காண முடிகிறது.
இவ்வாறு உயர்ந்து வளர்ந்திருந்த பாளையங்கோட்டையின் சுவடாய் எழுந்து நிற்பது மேடை காவல் நிலையம் மட்டுமே. சமீபத்தில் இந்த மேடை காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் இதன் சிறப்பு மக்களின் பார்வைக்குத் தெரியாமல் உள்ளது.
இது குறித்து ஆய்வாளரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசியபோது,
"16ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை கட்டப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகையின்போது ஸ்ரீவைகுண்டம் அணை கட்டுவதோடு, சுலோச்சுன முதலியார் பாலத்தையும் கட்டும்போது இக்கோட்டையை உடைத்து கட்டுகிறார்கள்.
மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் போன்ற தமிழறிஞர்களின் முயற்சியால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இருந்தபோது இக்கோட்டையை ஒரு நினைவுச் சின்னமாக மாற்றுவதற்காக புனரமைப்பு செய்தார்.






















நிறைய இலக்கியவாதிகளின் கூட்டம் இக்கோட்டையில் வைத்து நிகழ்ந்தது. இலக்கியவாதிகள் அடிக்கடி அவ்விடத்திற்கு வரும்பொழுது மேடை காவல் நிலையம் நன்றாக இருந்தது.
தற்போதுள்ள நிலை என்னவெனில் பராமரிப்பின்றி, கவனிப்பாரின்றி கோட்டை உள்ளது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாரந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
ஒவ்வொரு பள்ளிகளும் வந்து தங்களுடைய இலக்கிய கூட்டங்களை இங்கு நிகழ்த்தலாம். இரவு நேரம் இங்கு கூட்டம் நிகழ்த்தினால் மிகவும் பிரமாண்டமாக நன்றாக இருக்கும். அப்போது பாளையங்கோட்டையின் முந்தைய கோட்டையின் முக்கியத்துவமும் நமக்குத் தெரியவரும்." என்று கூறினார்.













