பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள...
'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்
"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்."
- ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாகசமாகவும், அதே சமயம் ஒரு பெரும் அபாயமாகவும் இருந்த பயணத்தின் முடிவில், அவர் பகிர்ந்துகொண்டுள்ள அனுபவங்கள், போரின் நிழலில் வாழும் ஒரு தேசத்தின் இருவேறு முகங்களை நெஞ்சை உலுக்கும் வகையில் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அங்கிதா குமார், இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடரும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரசிகர்களுக்கு 'மங்கி இன்க்' (Monkey Inc) என்ற பெயரிலேயே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய முன்னணி பயணக் கிரியேட்டர்களில் (Travel Creators) ஒருவர் ஆவார்.

ஆப்கானிஸ்தான் என்றதும் உலகின் பொதுப்புத்தியில் தோன்றுவது என்ன? முடிவில்லாப் போர்கள், சிதைந்த கட்டிடங்கள், அடக்குமுறையின் கீழ் வாழும் மக்கள் என ஒருவிதமான இருண்ட சித்திரம் அல்லவா? ஆனால், அந்த சாம்பல் பூத்த நிலத்திற்குள் கற்பனை செய்ய முடியாத பேரழகும், மனிதநேயத்தின் உச்சபட்ச வடிவமும் ஒருசேர வாழ்ந்துகொண்டிருப்பதை தனது பயணத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார் அங்கிதா குமார்.
"இரண்டு முற்றிலும் மாறுபட்ட உண்மைகள் ஒரே நேரத்தில் இருக்க முடியும் என்பதை ஆப்கானிஸ்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஒருபுறம், இதுவரை கண்டிராத மலைகளின் பிரம்மாண்டம், தேநீர் கோப்பைகளில் வற்றாத விருந்தோம்பல், முன்பின் தெரியாத அந்நியர்களிடம் காணக்கிடைத்த தாராள மனப்பான்மை என அந்த தேசம் அவரை அன்பால் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. அந்த வெப்பம், நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் நெஞ்சில் தங்கியிருப்பதாக அவர் நெகிழ்கிறார்.
ஆனால், அதன் மறுபக்கம்?
பல தசாப்தகால மோதல்களின் ஆறாத வடுக்கள் சுமந்த ஒரு தேசத்தின் அவலநிலை. "அந்த வலியை நீங்கள் கட்டிடங்களில் காணலாம். மக்கள் சொல்லும் கதைகளில் கேட்கலாம். வயதிற்கு மீறி முதிர்ச்சியடைந்த முகங்களில் படிக்கலாம்," என்கிறார் அவர்.

இந்த இருவேறு யதார்த்தங்களுக்கு இடையில் பயணிப்பதுதான் அவரை நிலைகுலையச் செய்திருக்கிறது. "நீங்கள் ஒரு நாட்டை முழுமனதாக நேசிக்க முடியும்; அதே நேரத்தில் அதன் மக்கள் அனுபவித்த துயரங்களுக்காக வருந்தவும் முடியும்," என்று அவர் தனது 13 நாள் ஆப்கான் பயணத்தை விவரிக்கிறார்.
குறிப்பாக, அங்குள்ள பெண்களின் நிலை அவரைப் பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் அளவற்ற அன்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், நம்மில் பலரால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கட்டுப்பாடுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையில் வாழும் பெண்களின் நிலையை எண்ணி மனம் வருந்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயணம் அவரை ஏன் இவ்வளவு ஆழமாகப் பாதித்தது? ஆப்கானிஸ்தான் அவர் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்ததாலா? இல்லை. "ஏனென்றால் அது ஒரே ஒரு அடையாளத்திற்குள் தன்னை சுருக்கிக்கொள்ள மறுத்தது," என்பதே அவரது பதிலாக இருக்கிறது. அது ஒரே நேரத்தில் அழகாகவும், இதயத்தை நொறுக்குவதாகவும் இருந்தது. நம்பிக்கையூட்டுவதாகவும், பாரம் சுமப்பதாகவும் இருந்தது. வரவேற்கும் குணத்துடனும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த முரண்பாடுகளுக்கு இடையில், அது அவரது வாழ்நாள் சாகசமாக மாறியது இந்த பயணம்.

தினமும் தனது பெற்றோருக்கு அவர் மீண்டும் ஒரு செய்தியைச் சொல்கிறார்: "அம்மா, அப்பா - நான் உண்மையிலேயே நலமாகத்தான் இருந்தேன்." ஆனால், அந்தப் பயணத்திற்குப் பிறகு, "நான் மீண்டும் பழையபடி இருப்பேன் என்று நினைக்கவில்லை" என்ற வார்த்தைகளுடன் தனது அனுபவத்தை விவரித்திருக்கிறார்.
தலிபான்களின் ஆட்சி, பொருளாதார சரிவு, உலக நாடுகளின் புறக்கணிப்பு என போர் மேகங்கள் சூழ்ந்து, சிதைந்து கிடக்கும் ஆப்கானிஸ்தானின் தெருக்களில், ஒரு இந்தியப் பெண் இன்ஃபுளூயன்ஸர் எதைத் தேடி அலைந்திருப்பார்? ஆயுதங்களையா? இல்லை, கண்ணீர்க் கதைகளையா? இரண்டுமில்லை. அங்கிதா தேடியது, காலத்தால் மறக்கப்பட்ட ஒரு மரப்பெட்டியை; ஆப்கானிஸ்தானின் ஆன்மாவைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் ஒரு அதிசய கேமராவை.
ஸ்மார்ட்போன்களும், டிஜிட்டல் கேமராக்களும் வருவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் உடனடிப் புகைப்படக் கலையாக இருந்தது இந்த ‘கம்ரா-இ-ஃபௌரி’ (KAMRA-E-FAOREE) என்று அழைக்கப்படும் கையால் செய்யப்பட்ட மரப்பெட்டி கேமராக்கள்தான். இது வெறும் கேமரா மட்டுமல்ல; அதுவே ஒரு டார்க்ரூம், அதுவே ஒரு பிரிண்டர். மின்சாரமோ, அதிநவீன உபகரணங்களோ தேவையில்லை. திறமை, வேதியியல் அறிவு, மற்றும் அளவற்ற பொறுமை இருந்தால் போதும். ஒரு புகைப்படத்தை அதே பெட்டிக்குள் எடுத்து, நெகட்டிவ்வை டெவலப் செய்து, பிரின்ட் எடுத்துக் கையில் கொடுத்துவிடுவார்கள்.

இந்த மரப்பெட்டி கேமராக்களைப் பற்றி சிறுவயதிலிருந்தே ஒருவித ஈர்ப்பு இருந்ததாக அங்கிதா குறிப்பிடுகிறார். "பல வருடங்களுக்கு முன்பு இவற்றின் புகைப்படங்களைப் பார்த்தபோது, ஒரு முழு புகைப்பட ஸ்டுடியோவையே ஒரு மரப்பெட்டிக்குள் அடக்கிவிட முடியும் என்ற எண்ணம் என்னை முற்றிலும் கவர்ந்தது.
அன்றிலிருந்து, அதன் செயல்பாட்டை நேரில் பார்ப்பது எனது ரகசிய கனவாகவே இருந்தது," என்கிறார் அவர். ஆப்கானிஸ்தானில் நேருக்கு நேர் நின்று, ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டு, அதே பெட்டிக்குள் அது உயிர்பெற்று வருவதைப் பார்த்த தருணம், ஒரு கனவுலக அனுபவமாக இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். "இது பயணங்களில் அமையும் சில சிறிய தருணங்களில் ஒன்றுதான். ஆனால், எனக்கு அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரிய அர்த்தத்தைக் கொடுத்தது," என்று அவர் விவரிக்கிறார்.
'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதை விட சாவதே மேல்'
“ஆப்கானிஸ்தானில் ஒரு பெண்ணாகப் பிறப்பதற்குப் பதிலாக, நான் இறந்துவிடுவதே மேல்.”
இது ஏதோ திரைப்பட வசனமல்ல. தாலிபன்களின் இருண்ட ஆட்சிக்குள் சிக்கித் தவிக்கும் ஆப்கன் பெண்களின் இதயத்திலிருந்து வெடித்துச் சிதறும் ஒரு விரக்தியின் குரல். அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, கனவுகள் கருகி, ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தில், பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி.

ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்கத் தடை! ஒரு காலத்தில் வகித்த பதவிகளிலிருந்தும், பொது வாழ்க்கையிலிருந்தும் பெண்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்! வறுமை மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பங்கள், தங்கள் பெண் குழந்தைகளை குழந்தை திருமணத்தில் தள்ளும் அவலம்! குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கிட்டத்தட்ட செயலிழந்து போன கொடுமை!
இப்படி, மனிதகுலத்தின் சரிபாதியான பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு அடக்குமுறை அமைப்பின் கீழ், ஒவ்வொரு நாளும் வாழ்விற்காகப் போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விரக்தியின் உச்சத்திலும் நம்மை உலுக்குவது அவர்களின் நம்பிக்கையின்மை அல்ல; அது அவர்களின் தைரியம்.
ஆம், அந்த அமைதியான தைரியம். பொதுவெளியில் போராடினால் அச்சுறுத்தலும், சிறைவாசமும், வன்முறையும்தான் பதிலடி என்னும்போது, எதிர்ப்பு என்பது வேறு வடிவம் எடுக்கிறது. கல்வி மறுக்கப்பட்டாலும், அறிவைத் தேடி ஓடும் முடிவில் அது வெளிப்படுகிறது. உலகம் சுருங்கினாலும், தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் உறுதியில் அது பிறக்கிறது.
இதற்கு வாழும் உதாரணங்களாகச் சில பெண்களை நாம் பார்க்க முடிகிறது என்று தனது பதிவில் குறிப்பிடுக்கிறார் அங்கிதா. 23 வயதான ஃபைகா (FAIQAH.TM), தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் கொண்ட ஒரு பெண் வழிகாட்டியாகச் செயல்படுகிறார். ‘காடின்ஸார் கேலரி’ (KHATINZAR.GALLERY) மற்றும் ‘நாய்கோ ஆர்ட்ஸ்’ (NAIKO.ARTS) போன்ற தளங்கள், பெண்களின் கலைத்திறனை ஆதரித்து, அவர்களுக்கான ஒரு அழகிய வெளியை உருவாக்குகின்றன. இந்த வரிசையில், வெறும் 21 வயது பெண் ஒருவரால் நடத்தப்படும் ‘விஷன் பல்கலைக்கழகம்’ (VISION UNIVERSITY), ஒரு மாபெரும் டிஜிட்டல் புரட்சியாகவே உருவெடுத்துள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க வழியின்றி முடக்கப்பட்ட 12,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் பெண்களுக்கு, இணையம் வழியாகப் பல்கலைக்கழகக் கல்வி வரை வழங்கி, அவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த ஆன்லைன் பல்கலைக்கழகம்.

நிச்சயமாக, அவர்களின் போராட்டத்தை நாம் மிகைப்படுத்திக் கொண்டாட விரும்பவில்லை. இந்த நிலைமை ஒருபோதும் இயல்பானதல்ல; இது தேவையற்றது. ஆனால், இந்த ஆப்கன் பெண்களின் வீரம், மாபெரும் போராட்ட முழக்கங்களில் அளவிடப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் தங்களின் இருப்புக்காகவும், கண்ணியத்திற்காகவும், லட்சியத்திற்காகவும் அவர்கள் நடத்தும் அந்த விடாமுயற்சியில்தான் அடங்கியிருக்கிறது. இதுவே ஆப்கானிஸ்தானில் இருந்து நாம் கற்கும் மிகப்பெரிய பாடம்.
சில நேரங்களில் தைரியம் என்பது, ஆயிரக்கணக்கானோர் முன்னால் நின்று முழங்குவது மட்டும் அல்ல. சில நேரங்களில் தைரியம் என்பது, ‘நான் காணாமல் போக மாட்டேன்’ என்று அடிபணிய மறுப்பதுமே.!.














