`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுக...
திருச்சி: மோதிக்கொண்ட இருச்சக்கர வாகனங்கள்; பலியான காவல்துறை உதவி ஆய்வாளர்; என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது: 55).
இவர், 1995-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர். பிறகு, படிப்படியாக உயர்ந்து தற்பொழுது துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தட்சிணாமூர்த்தி தற்போது மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றபோது இந்திரா நகரில் இருந்து பூலாங்குடி நோக்கி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதில், துவாக்குடி எம்.டி சாலையைச் சேர்ந்த துரை மகன் அன்பரசன் (வயது 22), ரவி மகன் மூர்த்தி (வயது 21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெல் காவல் நிலைய போலீஸார் தட்சிணாமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்த இரண்டு பேரையும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




















