"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" - மம்மூட்டியைச்...
''அய்யய்யோ, 1000 கிலோ வெள்ளி போச்சே...!'' கதறிய மனிதர்; என்னாச்சு அவருக்கு?
கொங்கு மண்டலத்தைச் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர்ராஜன். பரம்பரை பிசினஸ் குடும்பம். தன் அப்பா ராமமூர்த்தியைவிட சுந்தர்ராஜன் பிசினஸைச் சிறப்பாகச் செய்துவந்தார். விளைவு, அவர் செய்துவந்த பிசினஸ் பெரிதாக வளர்ந்தது.
ஆரம்பத்தில் இரும்பு உற்பத்தித் தொழிலில் இருந்தவர், பிற்பாடு வேறு வேறு தொழில்களைத் தொடங்கினார். நூறு கோடிகளில் நடந்துவந்த பிசினஸை ஆயிரம் கோடிகளைத் தாண்டி நடத்தும் அளவுக்கு பிசினஸைச் செய்துவந்தார். இரும்பு உற்பத்தி, லாஜிஸ்ட்டிக், மரக்கிழங்கு மாவு உற்பத்தி எனப் பல பிசினஸ்களைத் செய்து வந்தார்.
ஒவ்வொரு தொழில் நிறுவனத்தையும் அவர் நடத்திவந்த விதத்தைப் பார்த்த சிலர், அவர் நடத்தும் நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்துகூட சிலர் அவர் நடத்தும் நிறுவனங்களின் வளர்ச்சியைப் பார்த்து, ஏதாவது ஒரு நிறுவனத்தையாவது விலைக்குத் தரமுடியுமா என்று கேட்டுவந்தனர்.

இப்படிப் பலரும் கேட்கவே, மாவு உற்பத்தி தொடர்பான தனது நிறுவனத்தை ஆந்திராவைச் சேர்ந்த தொழிலபதிபர் 80 கோடி ரூபாய்க்குக் கேட்க, சுந்தர்ராஜன் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டார். அந்த நிறுவனத்தை விற்க அவருக்கு சிறிதும் விருப்பம் இல்லை. காரணம், அவருக்கு மிகவும் விஷயம் விவசாயம்.
தனது இரும்பு உற்பத்தித் தொழிலில் அவர் எப்போதும் பிஸியாக இருந்தாலும் சனிக்கிழமை முழுக்க கொல்லி மலை அடிவாரத்தில் இருக்கும் தனது 100 ஏக்கர் விவசாயப் பண்ணைக்கு வந்துவிடுவார். அன்று முழுவதும் அங்கு இருந்து, அடுத்தடுத்து அந்த இடத்தில் செய்ய வேண்டிய விஷயங்களைச் சொல்லிவிட்டுப் போவார். அந்த இடத்தில் வளர்க்கப்பட்ட மரவள்ளிக் கிழங்குகளைக் கொண்டுதான், அவர் மாவு மில்லைத் தொடங்கினார்.
என்றாலும், அவர் அந்த மில்லை விற்பதற்கு முக்கியமான காரணம், தனது முக்கியமான தொழிலில் இருந்து அவர் கொஞ்சம் விலகி இருந்ததுதான். இதனால் இரும்பு உற்பத்தித் தொழிலில் முழுக் கவனத்தையும் அவரால் செலுத்த முடியவில்லை. எனவே, மனதுக்குப் பிடித்த தொழிலாக இருந்தாலும், அதைத் தந்துவிடுவது என்கிற முடிவை மனவருத்தத்துடன் எடுத்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன் ஆந்திரா தொழிலதிபருக்கு மாவு மில்லை விற்றதன் மூலம் 80 கோடி ரூபாய் சுந்தர்ராஜனின் கைக்கு வந்து சேர்ந்தது. திடீரென்று வந்தசேர்ந்த 80 கோடி ரூபாயை வைத்து என்ன செய்வதென்று சுந்தர்ராஜனுக்குத் தெரியவில்லை. காரணம், இரும்புத் தொழிலை உடனடியாகப் பெரிதாக விஸ்தரிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.
சில ஆண்டுகள் பொறுத்திருந்து தொழில் விஸ்தரிப்பில் இறங்கலாம் என்று அவர் நினைத்திருந்தார். எனவே, இந்த 80 கோடி ரூபாயை இப்போதைக்கு வங்கிக் கணக்கில் கரண்ட் அக்கவுண்ட்டில் போட்டு வைத்திருப்பதைத் தவிர சுந்தர்ராஜனுக்கு வேறு வழி தெரியவில்லை.
ஆனால், கரண்ட் அக்கவுண்ட்டில் இத்தனை கோடி ரூபாய் கிடப்பதை சுந்தர்ராஜனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. காரணம், வங்கியில் கரண்ட அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்துக்கு வட்டி எதுவும் இல்லை. என்ன செய்யலாம் என்று ஆடிட்டரிடம் கேட்டபோது, இப்போது பாதிப் பணத்தை (40 கோடி ரூபாய்) வங்கி எஃப்.டி.யில் போட்டு விடும்படி அவர் சொல்ல, அதன்படியே செய்தார் சுந்தர்ராஜன்.
என்றாலும், இன்னும் 40 கோடி ரூபாய் கரண்ட் அக்கவுண்ட்டில் சும்மா கிடக்கவே, அதை வைத்து ஏதாவது செய்து, நல்ல லாபம் அடைய முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்க, அவரது பால்ய கால நண்பர் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தார். கோபாலகிருஷ்ணன் தன் மகளின் திருமணத்திற்காக அழைப்பதழைத் தர மனைவியுடன் வந்திருந்தார்.
திருமண அழைப்பு தொடர்பான பேச்சுகள் எல்லாம் முடிந்தபின், கோபாலகிருஷ்ணனின் தொழில் தொடர்பாகப் பேச்சு வந்தது. வெள்ளிப் பொருள்கள் தயாரிப்பு தொடர்பான பிசினஸைச் செய்துவந்தார் கோபாலகிருஷ்ணன். வெள்ளியின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. அதன் விலை இனிமேல் உயரவே செய்யும். பெரிய அளவில் இறங்காது என்றால் கோபாலகிருஷ்ணன்.
இந்தச் சந்திப்பு முடிந்துபோனபிறகும் வெள்ளி விலை உயர்வு பற்றி கோபாலகிருஷ்ணன் சொன்னதை சுந்தர்ராஜனால் மறக்க முடியவில்லை. வெள்ளி விலை இனிவரும் நாட்களில் உயரும் என்றால், அதைக் கணிசமாக வாங்கி வைப்பதன் மூலம் லாபம் பார்க்கலாமே என்கிற யோசனை சுந்தர்ராஜனுக்கு வந்தது.
ஒரு கிலோ வெள்ளி விலை அப்போது 40 ஆயிரம் ரூபாய்க்குள் விற்பனை ஆகிவந்தது. ஒரு டன் வெள்ளியை (1000 கிலோ வெள்ளி) வாங்கினால்கூட 4 கோடி ரூபாய் ஆகும். ஏற்கெனவே 40 கோடி ரூபாய் வங்கி கரண்ட் அக்கவுண்ட்டில் இருக்கும்போது, 4 கோடி ரூபாய் செலவு செய்து வெள்ளி வாங்கினால் என்ன என்கிற யோசனை சுந்தர்ராஜனுக்குச் சரியாகவே பட்டது.
ஆனால், ஆயிரம் கிலோ வெள்ளியைப் பத்திரமாக எங்கே வைப்பது என்கிற பிரச்னை எழவே, முதலில் பிசிக்கலாக வெள்ளியை வாங்காமல், கமாட்டிட்டி சந்தையில் கான்ட்ராக்ட் அடிப்படையில் வாங்க முடிவு செய்தார் சுந்தர்ராஜன். கமாடிட்டி சந்தையில் உடனே ஒரு கணக்கை ஆரம்பித்து, 1000 கிலோ வெள்ளிக்கான கான்ட்ராக்ட்டை வாங்கினார். 4 கோடி ரூபாய் சரியாக முதலீடு செய்துவிட்டோம் என நிம்மதி அடைந்தார் அவர்.

அடுத்த சில நாள்களில் பிசினஸில் பிஸியாகிப் போனார் சுந்தர்ராஜன். வாங்கிய வெள்ளி பற்றி அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
அந்த வாரத்தின் இறுதியில்தான் அவர் வாங்கிய வெள்ளி விலையைப் பார்த்தார். பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு கிலோ 40 ஆயிரம் ரூபாய் என வாங்கிய வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்திருந்தது. என்ன, இப்படி ஆகிவிட்டதே என்று கொஞ்சம் வருத்தமானார் சுந்தர்ராஜன். ஆனால், மீண்டும் மறந்துபோனார். அடுத்த வார இறுதியில் மீண்டும் வெள்ளி விலைப் பார்க்க, கிலோவுக்கு 2000 குறைந்திருந்தது.
அதற்கு மேல் அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இப்படியே போய்க்கொண்டு இருந்தால், பல லட்சங்களை இழக்க வேண்டியிருக்கும் போல இருக்கே என்று பதற்றமானார். மறுநாள் காலை அலுவலகத்துக்கு வந்ததும் தனது கமாட்டிட்டி புரோக்கரை அழைத்து 1000 கிலோ வெள்ளி கான்ட்ராக்ட்டுகளையும் குளோஸ் செய்யும்படி சொன்னார். இதனால் சிலபல லட்சங்கள் இழப்பு என்றாலும், மேலும் நஷ்டம் அடைவதற்குப் பதில் இந்த அளவில் முதலீட்டை விற்றுவிட்டு வெளியே வந்துவிடுவோம் என்பதே சுந்தர்ராஜனின் எண்ணமாக இருந்தது.
வெள்ளி கான்ட்ராக்ட்டை குளோஸ் செய்தவர் பிசினஸில் மீண்டும் பிஸியாகிவிடவே, அதைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டார். மீண்டும் வெள்ளி விலை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
ஆனால், 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பால்ய கால நண்பர் கோபாலகிருஷ்ணனை மீண்டும் சந்தித்தார். வழக்கம் போல பல்வேறு விஷயங்களைப் பேசியவர், தனது வெள்ளி பிசினஸில் மிகப் பிரமாதமான லாபம் கிடைத்திருப்பதைச் சொன்னார். அப்போதுதான் ஒரு கிலோ வெள்ளி சுமார் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதைக் கேட்டு அதிர்ந்து போனார் சுந்தர்ராஜன்.
40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி வாங்கி வைத்திருந்தால், இப்போது 4 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்க முடியும். இது கிட்டத்தட்ட 10 மடங்கு லாபம். 4 கோடி ரூபாய் 1000 வெள்ளி வாங்கி வைத்திருந்தால், இன்றைக்கு அது 10 மடங்கு லாபத்தைத் தந்திருக்கும். இதனால் தனக்கு 40 கோடி கிடைத்திருக்குமே! என்று கணக்கு போட்டு பார்த்த சுந்தர்ராஜனுக்கு மனம் ஆறவில்லை. மிகப் பெரிய தவறு செய்திருப்பதை உணர்ந்தார் அவர்.
அவர் செய்த தவறுகள் என்ன, அந்தத் தவறுகளை எப்படித் தவிர்த்திருக்க முடியும்?

1. பங்குச் சந்தை முதலீடோ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடோ, கமாடிட்டி சந்தை முதலீடோ எதுவாக இருந்தாலும், அது தொடர்பாக ஒரு நிபுணரைக் கலந்தாலோசித்து, தனது முதலீட்டுத் திட்டம் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.
சுந்தர்ராஜனைப் பொறுத்தவரை, அவர் எந்த நிபுணருடன் கலந்து ஆலோசிக்காமல், தனது விருப்பப்படி நடந்துகொண்டதால், எதை வாங்க வேண்டும், எந்த அளவுக்கு, எந்த விலையில் வாங்க வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. நீண்ட நாள் முதலீடு என்கிற தெளிவான முடிவு சுந்தர்ராஜனுக்கு இருந்திருந்தால், அவர் கமாடிட்டி சந்தையில் வாங்காமல், பிசிக்கலாகவே வாங்கி இருக்கலாம்.
2. பங்கோ அல்லது கமாடிட்டியோ எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அந்த முதலீட்டை எத்தனை ஆண்டுகளுக்கு வைத்திருக்கப் போகிறோம் என்கிற தெளிவான திட்டம் வேண்டும். 10 ஆண்டுகள் அந்த முதலீட்டை வைத்திருக்கப் போகிறோம் எனில், இடைப்பட்ட காலத்தில் அந்த முதலீட்டில் இருந்து ஏன் வெளியேற வேண்டும் என்கிற தெளிவான முடிவு வேண்டும்.
3. பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட், கமாடிட்டி என எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், ஒரே நேரத்தில் கணிசமாக வாங்குவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது அவசியம். அதே போல, விற்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக விற்பது அவசியம். உதாரணமாக,சுந்தர்ராஜன் ஒரே நேரத்தில் 1000 கிலோ வெள்ளியை வாங்க நினைக்காமல், 100 கிலோ என்கிற கணக்கில் 10 முறை வாங்கி இருக்கலாம்.
அதே போல, விற்கும்போது 100 கிலோ என 10 முறை விற்று இருக்கலாம். இதனால் வாங்கும்போது விலை சராசரி ஆகியிருக்கும். விற்கும்போதும் விலை சராசரி ஆகியிருக்கும்.
ஆக, எந்த முதலீடாக இருந்தாலும், அதை ஒரு நிபுணருடன் கலந்தாலோசித்து, எத்தனை ஆண்டுகள் வாங்கி வைத்திருக்கப் போகிறோம், நஷ்டம் வந்தால் என்ன செய்வது என்கிற விஷயங்களை எல்லாம் நன்கு தெரிந்துகொண்டு முதலீடு செய்தால், பிற்பாடு நல்ல லாபம் நமக்குக் கிடைக்கும்.
எந்த வகையிலும் பிற்பாடு நாம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இருக்காது என்பதுதான் இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்!

இதுபோன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.




















