டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது"...
அறை எண் 13-ல் சவக் கலை | உளவன் 09
13
மேற்குலகம் அஞ்சி நடுங்கும் எண் (Triskaidekaphobia). வீட்டுக்கு, தளத்துக்கு, வாகனத்துக்கு என எதிலுமே 13 என்ற எண் வராமல் பார்த்துக் கொள்வர். 12-க்குப் பிறகு 14 வந்துவிடும். சிக்கல் என்றால் 12A என வைத்து சமாளிப்பார்கள். எந்த சுப நிகழ்வுகளையும் 13-ம் தேதியில் வைக்க மாட்டர்கள்.
13 மிக மிக மோசமான எண் என்பது அவர்களின் நம்பிக்கை. வேறு வழியே இல்லை என்றால் 13-ஐ பயந்து பயந்து கடப்பார்கள். ஆமாம். 13-வது வயதை கடந்துதானே ஆக வேண்டும். 12-க்குப் பிறகு 14 வயது என கணக்கிட முடியாதே.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவு விருந்தில், அவருடைய 12 சீடர்கள் கலந்து கொண்டனர். இயேசுவோடு சேர்த்து 13 பேர். அப்போது, “உங்களில் ஒருவன் எனக்கு துரோகம் செய்யப் போகிறான் (மத்தேயு 26:20-21)” என்கிறார் இயேசு.
“நான் யாரிடம் அப்பத் துண்டைக் கொடுக்கிறேனோ அவனே அந்த மனிதன் (யோவான் 13:26).” இயேசு அப்பத்தை யூதாவிடம் கொடுக்கிறார். யூதாவால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, அடுத்த நாள் சிலுவையில் அறையப்பட்டார்.
யூதாவை 13வது நபராக கருதுவதால், அந்த எண் சாபத்துக்குரிய எண்ணாக கருதப்படுகிறது. இந்த மூடநம்பிக்கை கிறிஸ்தவ மத நம்பிக்கை கிடையாது. 13-ம் எண் குறித்த எந்தக் குறிப்பும் பைபிளில் கிடையாது. பண்டைய காலத்திலேயே 13 மீது மக்களுக்கு பயம் இருந்தது. அந்த எண் யூதாவோடு இணைய, மத அடிப்படையிலும் அந்த எண்ணுக்கு அவப்பெயர் வந்துவிட்டது.

லண்டன், ஒயிட்ஹால் சாலையில் உள்ள கட்டடத்தில் ஓர் அதிசய அறை உள்ளது.
அந்த அறையின் எண் 13.
அந்தக் கட்டடத்தில் பிரிட்டன் கடற்படை உளவுத்துறை இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கே 13-ம் நம்பர் அறை இருப்பது தெரியாது.
“மொத்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டியது உங்க பொறுப்பு மாண்டேகு…” சொல்லி விட்டு கிளம்பினார் விமானப் படை உளவு தலைமை அதிகாரி சார்லஸ் சாம்லீ (Charles Cholmondeley). Section 17M-ன் தலைவர் லெஃப்டினண்ட் கமாண்டர் ஈவன் மாண்டேகு (Ewen Montagu), வழக்கம்போல அதிகம் பேசாமல் தலையசைத்தார்.
பிரிட்டன் கடற்படை உளவுத்துறை கட்டடத்தின் பின் பகுதியில், உயரம் குறைந்த சிறிய அறை அது. 20 சதுர அடிதான். ஜன்னல் கிடையாது. குகை போன்ற வாசல். நான்கு புலனாய்வு அதிகாரிகள். ஏழு உதவியாளர்கள். இவர்களுக்கு உதவ இரண்டு தொலைபேசிகள், ஆறு தட்டச்சு எந்திரங்கள். ஆவணக் காப்பகங்களாக தகரப் பெட்டிகள். அந்தப் பெட்டிகளில் அதி உயர் ரகசிய தகவல்கள். குறிப்பாக ஜெர்மனி குறித்த உளவு தகவல்கள். Section 17M செயல்பட்டு வந்த, அந்த 13-ம் நம்பர் அறையின் பாஸ்-தான் ஈவன் மாண்டேகு.
மூடநம்பிக்கையை தகர்க்கும் விதமாக மூளை பலம் கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் இந்த அறைக்கு அந்த எண்ணை வழங்கினார்களா? ஒருவேளை எதிரியை உளவறிய கொஞ்சம் மூடநம்பிக்கையும் அவசியம் என்பதால் 13-ம் எண்ணைச் சேர்த்துக் கொண்டார்களா? கொஞ்சம் உண்மையும் நிறைய பொய்யும் கலந்த தகவலே எதிரியை திசை திருப்பும். அந்த வேலைக்குப் பொருத்தமான எண் 13 என கருதினார்களோ என்னவோ…
எனிக்மா எந்திரங்களை ஒட்டுக் கேட்டு தகவல்களை சேகரிப்பது, பிரிட்டன் உளவுத்துறை குறியீட்டு உடைப்பு அணியின் வேலை. அந்தத் தகவல்களை ஒருங்கிணைத்து குறிப்புகளாக்கி அரசு தலைமைக்கு அனுப்புவது Section 17M-ன் வேலை. எனிக்மா எந்திர தகவல்களில் நிபுணத்துவம் பெற்றவர் ஈவன் மாண்டேகு. தினந்தோறும் இருநூறுக்கும் மேற்பட்ட தகவல்களை அவர் கையாண்டார். அதாவது, ஜெர்மன் உளவுத்துறை வலைப் பின்னல்களின் முடிச்சுகளை அவர் எளிதாக அவிழ்த்துவிடுவார்.
“காதல் கடிதம் எழுதிய அனுபவம் இருக்கா…?” அங்கிருந்த பெண் செயலாளர்களிடம் கேட்டார் மாண்டேகு. திடீரென பாஸ் கேட்கவும் அவர்கள் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றனர்.
“ஓகே… எனக்கு ஒரு கடிதம் எழுதித் தர வேண்டும்.” 40 வயதானாலும் இளமை ததும்பும் உடல்கட்டு அவருக்கு. அதனால் பெண் பணியாளர்களில் சிலர் அதிர்ந்தனர். சிலரோ கூச்சத்தில் நெளிந்தனர்.

“எனக்கில்லை. நண்பருக்கு. ஆனால், நண்பர் விரைவில் செத்து விடுவார்…” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டார் மாண்டேகு.
அந்தப் பெண்களுக்கு ஆச்சரியம். இறக்கப் போகிறவருக்கு காதல் கடிதமா? எழுதித் தொலைவோம், உயரதிகாரி கேட்கிறார். சாவை எதிர்நோக்கி இருப்பவரின் அங்க அடையாளங்களைக் கேட்டனர். தெரியாது என உதட்டைப் பிதுக்கியவர், “அவர் மிலிட்டரி மேன் என்ற தகவல் மட்டும்தான் தெரியும். நானே அவரை இதுவரை பார்த்ததில்லை” என்றார்.
இரண்டு பெண்கள் எழுதிய காதல் கடிதங்களில், கவித்துவமாகவும் காதல் ரசம் சொட்டுவதாகவும் இருந்த ஒரு கடிதத்தை மாண்டேகு எடுத்துக் கொண்டார்.
“ஓர் அழகான பெண்ணின் புகைப்படம் வேண்டுமே… லெஸ்லி உங்களோட நல்ல ஃபோட்டோ ஏதாவது இருக்கா?”
அங்கிருந்த அனைத்து ஊழியர்களும் குழப்பத்தில் உறைந்தனர். காதல் கடிதம், அழகான பெண்ணின் புகைப்படம். பாஸ் என்ன செய்யப் போகிறார்? எல்லோரும் இப்படி சிந்திக்க, இளம்பெண் லெஸ்லி பயந்தே போய்விட்டார்.
“பயப்படாதே லெஸ்லி. வெறுமனே கடிதம் மட்டும் போதாதுல்ல. காதல் கடிதத்தோட காதலியின் ஃபோட்டோவும் இருந்தால் எப்படி இருக்கும்? செத்தவன் ஓர் உணர்வுப் பூர்வமான மனிதன் என நம்பிக்கை வரும்ல…” மாண்டேகு புதிர் மேல் புதிர் போட அந்த அறையில் இருந்தவர்கள் முழித்தனர்.
“உன்னோட ஃபோட்டோவ யாரும் தவறா பயன்படுத்த மாட்டாங்க… அதுவும் ஃபோட்டோ இங்க இல்ல, ஸ்பெயின்ல உள்ளவங்கதான் பார்ப்பாங்க. அவங்களுக்கு நீ யாருன்னே தெரியாது…” நம்பிக்கையளித்தார்.
கைப்பையில் வைத்திருந்த சில படங்களை லெஸ்லி கொடுத்தார். ஃபோட்டோ தேர்வின் விபரீதத்தை புரிந்து கொள்ள முடியாததால், முகம் மட்டும் தெரியும் வழக்கமான பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையே அனைவரும் பரிந்துரைத்தனர். நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் அதில் இருந்தது. காற்றில் பறக்க தலைமுடியை ஸ்டைலாக விட்டிருந்தார் லெஸ்லி. அந்தப் புகைப்படத்தை எடுத்தார் மாண்டேகு.
“காதலியோட இந்தப் புகைப்படம்தானே ரொம்ப அழகா கவர்ச்சியா இருக்கு. அந்தக் கடிதத்தோட இந்த ஃபோட்டோ இருந்தால் இன்னும் உணர்வுப்பூர்வமா இருக்கும்ல…” லெஸ்லி மட்டும் வெட்கத்தில் தலைகுனிந்தார். இந்த முறை மற்ற அனைவரும் உதட்டைப் பிதுக்கினர். அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

“ஒரு கருப்பு கலர் சின்ன பெட்டி. நான்கைந்து சர்டிஃபிகேட்ஸ் வைக்கிற அளவுக்குத்தான் இருக்கணும். அந்தப் பெட்டியை தோளில் மாட்டிக் கொள்ள வசதியா பெல்ட் இருக்கணும்…” வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார்.
எதற்கு இவ்வளவு சஸ்பென்ஸ்? அதி உயர் ரகசிய அலுவலகத்தில் பணிபுரியும் அவர்களுக்கு எத்தனையோ ரகசியங்கள் தெரியும். இதுவரை எத்தனையோ ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். முதன்முறையாக அறை எண் 13-ல் இருந்தவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. சாகப் போகிறவருக்கு ஏன் காதல் கடிதம், காதலி ஃபோட்டோ?
புலனாய்வு அதிகாரிகள் பெட்டியை வாங்கி வந்தனர். மதிய உணவுக்குப் பின் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
“சார், இந்தப் பெட்டி புது மாடலாக இருந்திச்சி… தோளில் போட்டுக் கொள்வதற்குப் பதிலாக பேண்ட்டில் மாட்டிக் கொள்ளலாம். பாருங்க. உங்க பிளானுக்கு செட்டாகலைன்னா திருப்பிக் கொடுத்திட்டு வேற பெட்டி வாங்கிக்கலாம்…”
பெட்டியை திறந்து பார்த்த மாண்டேகு, வலது கை கட்டை விரலை உயர்த்தினார். அடுத்ததாக, ராணுவ வீரருக்கு அவருடைய தந்தை எழுதுவது போல ஒரு கடிதமும் எழுதப்பட்டது.
“லெஸ்லி… உன் காதலர் வெளியூரில் இருக்கும்போது, நீ எழுதிய கடிதத்தையும் உன் ஃபோட்டோவையும் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறார். உன் நினைப்பாகவே இருக்கிறார். இது போதுமா? அந்த மனிதர் இன்னும் இன்னும் உயிர்ப்புள்ளவராக காட்டணும்னா என்ன பண்ணனும்?”
உயிரை விடப் போகும் ஒருவரை உயிர்ப்பிக்க அந்த அறை, நாடக ஒப்பனை அறையைப் போல மாறி இருந்தது. மகாராணி வேடத்துக்கோ, மணமகள் வேடத்துக்கோ தேவையான அலங்காரங்களைப் பார்த்து பார்த்து செய்வது போல, சாகப் போகிறவருக்கான உடைமைகளை கலை நுணுக்கத்துடன் நேர்த்தியாக செய்தனர். ஆனால் வேடம் கட்டும் நபர்தான் அங்கு இல்லை. யார் வேடம் கட்டப் போகிறார் என்பதும், என்ன வேடம் என்பதும் அங்கிருந்த ஒப்பனைக் கலைஞர்களுக்கு தெரியவில்லை.

“காதல் கடிதம், ஃபோட்டோவோடு என்கேஜ்மெண்ட் ரிங்கும் இருந்தால் எப்படி இருக்கும்?” மாண்டேகு கேட்கவும் அனைவரும் உற்சாகப் புன்முறுவலோடு தலையசைத்தனர். 22 கேரட்டில் நிச்சயதார்த்த மோதிரம் ஒன்றை வாங்கி வரவும் மாண்டேகு உத்தரவிட்டார். மோதிரம், காதல் கடிதம், தந்தையின் கடிதம், கவர்ச்சி ஃபோட்டோ ஆகியவற்றை பெட்டியில் வைத்து பேண்ட்டோடு அதை இணைத்துப் பார்த்தார்.
“இந்தப் பெட்டியை பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி ஒருவர் கொண்டு செல்லப் போகிறார். லண்டனிலிருந்து அல்ஜீரியாவுக்கு சிறிய ரக விமானத்தில் அவர் பயணம் மேற்கொள்கிறார். அந்த விமானம் ஸ்பெயினின் தென்மேற்கு கடல் பகுதி மேல பறந்து கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகிறது. விமானம் கடலில் விழுந்து அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழக்கின்றனர்.
பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி உடல் மட்டும் ஸ்பெயின் கடற்கரையில் ஒதுங்குகிறது. அந்த உடலோடு இணைந்திருக்கும் பெட்டியையும் அந்நாட்டு காவலர்கள் மீட்கின்றனர். அந்தப் பெட்டியில் காதலி, அப்பாவின் கடிதம் தவிர, இன்னொரு கடிதமும் இருக்கிறது. அந்தக் கடிதத்தில் போரின் அடுத்த கட்ட தாக்குதல் தொடர்பான தகவல் இருக்கிறது…”
சொல்லிவிட்டு நிறுத்தியவர் சிகரெட்டை வாயில் வைத்து நெருப்பு மூட்டினார். ஆழமாக மூச்சை இழுத்து நீளமாக புகையை விட்டார். “அந்தத் தகவல் எதிரியை திசை திருப்பும் தகவல்தான். அதனால நாம பயப்படத் தேவையில்லை. ஆனால் அந்த ரகசிய தகவல் எதிரி கையில் கட்டாயம் கிடைக்க வேண்டும். இதுதான் அடுத்த ஆபரேஷன். என்ன நம்மாளு கடற்படை அதிகாரி கடல்ல விழுந்து செத்திடுவாரு… என்ன செய்ய முடியும்? தாய் நாட்டுக்காக உயிரிழந்துதானே ஆக வேண்டும்…”
சோகமான தொனியில் சொல்லி முடித்துவிட்டு, எகத்தாளமாக சிரித்த அவர், அறை முழுவதையும் சிகரெட் புகையால் நிரப்பி மூச்சு திணற வைத்தார்.
(தொடரும்)

















