செய்திகள் :

ஆங்காரிகளின் கதை 01: முண்டம்புள்ளி... பாவச்சோறு... நடுவீட்டுகாரங்க! - 'கன்னியம்மை' தெய்வமான கதை

post image

நம் மக்களிடையே, உலாவும் வாய்மொழிக்கதைகள் பெரும்பாலும் கடந்த கால மனிதர்களின் வாழ்வை, வரலாற்றை சுமந்து திரிபவையாக இருக்கின்றன. நாட்டார் சமயத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஏராளமான கதைகள் வழிபாட்டுச் சடங்கின் தொடர்ச்சியாகவும், நாட்டார் கலைவடிவங்களாலும் ஒவ்வொரு காலத்திலும் கடத்தப்படுகிறது. நம் மண்ணின் மக்கள், மக்களோடு வாழ்ந்து மடிந்த மனிதர்களையே தெய்வங்களாக வழிபடக்கூடியவர்கள்.

இவர்கள், நம்பிக்கையைக் கடந்து அச்சத்தின் காரணமாகவும், குற்றவுணர்வின் காரணமாகவுமே வழிபடுகின்றனர்.

நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது.

அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை அறிவோம்!

கன்னியம்மை கோவில்

சிதம்பர வடிவு கன்னியம்மை

வாழையடி வாழையா வானடி பொன்னடி நீங்க விளங்கவே மாட்டீங்க” ன்னு சாபம் விட்டுட்டு செத்துட்டா கன்னியம்மை.

அன்னைய காலத்துல நடுவீட்டுக்குடும்பம் மாடசாமி தேவருக்கு உடன்பிறந்த நாலு தம்பியும், ஒத்தைக்கு ஒத்தையா தங்கச்சி ஒருத்தியும் இருந்திருக்கா. சிதம்பர வடிவுன்னு சாமி பேரு வுட்டு அழகுபோல செல்லப்பிள்ளையா வளத்துருக்காவ

அந்த வடிவு வீட்டு மச்சில நின்னு சித்தூருக்கு போன அண்ணங்க வராங்களான்னு குளிச்சிட்டு, தலைய சிக்கெடுத்துக்கிட்டே பாத்துக்கிட்டு நின்னுருக்கா.

போத்தி அந்த வழியா தன் குதிரையில மேற்க இருந்து கிழக்கமார போயிக்கிட்டு இருந்திருக்காரு. இவ சிக்கெடுத்த முடி, அவரு குதிரக்காலுல சிக்கிருக்கு.

போத்தி யாருனா?

ஒருகாலத்துல இந்தச் சுத்து வட்டாரம் முழுக்க கொடிகட்டி வாழ்ந்த மனுசன். அவரு சொந்த ஊரு சடையங்குளம் பக்கத்துல வைத்தியங்குளம். அந்தப் போத்தி மேத்தா பிள்ளைக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு பெண் பிள்ளைவ இருந்திருக்கு.

திருநெல்வேலி, தூத்துக்குடின்னு எல்லா பக்கமும் அவருக்கு கடை இருந்திருக்கு. அங்க உள்ள கடைகளுக்கு தன் குதிரையில போவுறதுக்காகவே தனிப்பாதையே போட்டு வச்சிருந்திருக்காரு. தெக்கு ஊர்ல இருக்க எல்லா ஆளுங்களும் அவர்கிட்ட தான் வேலை பாத்திருக்காங்க அந்த அளவுக்கு பெரிய கிராமக்காரன்.

ஆனா இங்க இருந்த சில ஆளுங்களுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது.

எதுக்கு பிடிக்காதுன்னா?

மேத்தா பிள்ள ஒரு முஸ்லீம் ஆளா இருந்திட்டு நம்மள வேல வாங்குதான! நம்ம ஊருக்குள்ள குதிரையில வாரான! எல்லாத்தையும் அதிகாரம் பண்ணுதானன்னு ஒரு எண்ணம் இருந்திருக்கு.

இந்த நேரத்துல முடி சிக்கவும் குதிரய ஓட்டிட்டு வந்த ஆள்ட்ட போத்தி

'இது குதிரமுடி மானிக்கி இல்லயே, ஏதோ பொண்ணு முடிமானிக்கில இருக்கு. முடியே இவ்ளோ நீளமா இருக்குன்னா அந்த பொண்ணு எவ்ளோ அழகா இருப்பா’ ன்னு சொல்லிருக்காரு.

வலது மேத்தாப்பிள்ளை

இதை அந்த பிள்ளயோட அண்ணமாருங்க கிட்ட அந்த ஆளு ஒண்ணுக்கு ரெண்டா சொல்ல, இதைக்கேட்ட மாடசாமி தேவர் நம்ம உடன்பிறந்தாள இப்படி பேசிட்டான! போத்திய சும்மாவுடக் கூடாதுன்னு நினைக்காரு.

பச்ச வெட்டா வெட்டி கொல்ல முடியாது [ நேருக்கு நேராக கொல்ல முடியாது]. அதனால ஒரு யோசனை செஞ்சி, போத்தி மேத்தாபிள்ளைக்கு முயல் வேட்டைனா கொஞ்சம் கிறுக்கு உண்டு. அதனால மேத்தாபிள்ளைய முண்டம்புள்ளி காட்டுக்குள்ள முயல் இருக்குன்னு கூட்டிட்டு போயி பின்னாடி இருந்து அவர் தலைய மட்டும் தறிச்சிடுதாங்க.

மேத்தா பிள்ளைய முண்டமா வெட்டுனதுனால தான் அந்தக்காட்டுக்கே முண்டம்புள்ளின்னு பேரு வந்திச்சி. மாடசாமி தேவரு மேத்தா பிள்ளயோட தலைய நடு ஊருல கொண்டு வந்து வச்சிட்டாரு.

மேத்தா பிள்ளையோட வேட்டைக்கு போன குதிரையும் நாயும் வீட்டுக்கு வந்துட்டு. ஆனா இன்னும் மேத்தா பிள்ள வரலியேன்னு அவரு பொண்டாட்டி நினைச்சிருந்திருக்காங்க. அன்னைக்கு இராவே அவரோட பொண்டாட்டி கனவுல வந்து ' என்ன தப்பான முறையில சொல்லப்போய் தான் இந்தக்கொலை நடந்து போச்சு, இதை நீ யார்ட்டையும் சொல்லக்கூடாது. என்ன கொன்னவங்க கிட்ட எந்த வம்பும் பண்ணக்கூடாது. என்ன கொன்னுப்போட்ட இடத்துல இருந்து சித்தெறும்பு வரிசையா வரும் அதைப்பிடிச்சு அப்படியே வா' ன்னு சொல்லிருக்காரு.

இந்தக்கனவ கண்டு பயந்து எந்திரிச்சி அந்த வரிசைய பிடிச்சி நடந்திருக்கா. போய் பாக்கயில கனவுல கண்ட மாதிரியே கொன்னு மூடி வச்சிருக்காங்க. மேத்தா பிள்ளை பொணத்தை வைத்தியங்குளத்துக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க. அவங்க மச்சினமாரு மாப்பிள்ளய கொன்னவங்கள சும்மா விடக்கூடாதுன்னு நடுவீட்டுக்காரங்கள கொல்லவாராங்க.

' ஏல நீங்க யாரையும் எதையும் பண்ணக்கூடாது' போத்தி சத்தம் போட்டு சொல்லிருக்காரு. போத்தி வார்த்தைய மீறி வந்தாங்களா வர்ற வழியில விஜயநாரயண குளத்தாங்கரைக்கு மேக்க மருகால் பக்கத்துல வரும் போது பாம்பு கடிச்சி பட்டாணி சாகிப்பை கொன்னுப்போட்டுட்டு, இவரையும் போத்தி கூடவே சேர்த்து புதைச்சிட்டாங்க.

மேத்தாப்பிள்ளை வாழ்ந்த இடம்

இந்தச் செய்தி எல்லாம் நடுவீட்டுகாரங்களுக்கு தெரிஞ்சிட்டு. அந்தால அவங்க, `நம்ம மேல கொலைப்பழியும் வந்திட்டு. நம்ம வீட்டு பிள்ளயும் மானப்பட்டும் போச்சி. இனி இந்தப்பிள்ளைய விட்டுவைக்க கூடாதுன்னு' குழியைத்தோண்டி அதுல ஒண்ணுகிடக்கு அத எடுன்னு சொல்லிருக்காங்க.

அப்போ அந்த வடிவு ‘ நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு எனக்கு தெரியுதுன்னு சொல்லி அழுதுருக்கா. அப்போ, `நீ என்னமும் சொல்லனுமா'ன்னு கேட்டுருக்காங்க, அதுக்கு தான், “வாழையடி வாழையா வானடி பொன்னடி நீங்க விளங்கவே மாட்டீங்க” ன்னு சாபம் விட்டுட்டு செத்துட்டா கன்னியம்மை.

அப்பறம் கொஞ்சகாலத்துக்கு அப்பறந்தான் மாடசாமி தேவருக்கு தான் செஞ்சதது தப்புன்னு தெரியவருது. அவரு உடனே போத்தி தன்னையும் குடும்பத்தையும் எதுஞ் செஞ்சிடக்கூடாதுன்னு அந்த தர்காவ கட்டி நடுவீட்டுக்காரங்க கும்பிட ஆரம்பிச்சாங்க. அப்போ போத்தி என்னால செத்த அந்த பிள்ளைக்கும் கோவில் கட்டச் சொல்லிருக்காரு. அந்த சிதம்பர வடிவை தள்ளிவிட்ட இடத்துல ஒரு நடுகல்லை வச்சி கும்பிட ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ அதான் கன்னியம்மை.

அந்தப்பிள்ளை சிதம்பர வடிவு விட்ட சாபத்துனால தான் நடுவீட்டுக் குடும்பத்துல பொறந்த பொண்ணுன கல்யாணம் முடிஞ்சதும் தாலி அறுத்துருவாங்க, ஆணும் கல்யாணம் முடிஞ்சதும் செத்துருவான். ஆண்குலமே தழைக்காது. அந்தச்சாபம் இன்னுமே முடியல.

ஊருல யாருக்கு பிள்ளை பிறந்தாலும் மேத்தா பாண்டியன், மேத்தான்னு தான் பேர் உடுதோம்.

எங்களுக்கு என்ன வேணுனாலும் மேத்தா பிள்ள அப்பாட்டா தான் கேப்போம். ஆடி 16ந்தேதி தான் அவரைக் கொன்ன நாள். அதுனால எல்லா ஊர்ல இருந்தும் மக்கள் அன்னைக்கு கந்தூரிக்கு வந்துடுவாங்க.

அவரைக்கொன்ன முத வருசத்துல முஸ்லீம் ஆளுங்க பெட்டிச்சோறு பொங்கி நடுவீட்டுக்குடும்பத்துக்கு குடுத்திருக்காங்க. அவங்க வீறாப்பெடுத்து வாங்காம இருக்கயில அந்த ஆளுங்க குழியைத்தோண்டு சோத்தைப் பொதைச்சிட்டு போயிருக்காங்க.

அடுத்தவருசம் கந்தூரி வரையில அந்தக்குழியைத் தோண்டி பாக்கயில அந்தச் சோறு அப்படியே சூடா இருந்திருக்கு.

அப்போ தான் போத்தி ‘ எனக்கு படைக்க நேர்ச்சை சோற்றை அந்த குடும்பத்துக்காரங்க தான் முத சாப்படணும் அது பாவச்சோறு. எனக்கு செஞ்ச பாவத்துக்காக முத அவங்கதான் முத சாப்படணும்ன்னு சொல்லிருக்காரு. அன்னையில இருந்து கந்தூரிக்கு செய்த கட்ட [ சடங்கு ] முஸ்லீமும் தேவரும் ஒண்ணு சேர்ந்து தான் செய்தாங்க. அன்னைய காலத்துல தெக்கு ஊர்ல பாதிக்கும் மேல முஸ்லீம் ஆளுங்க தான் இருந்தாங்க. இன்னைக்கு யாருமே இல்ல. ஆனா கந்தூரி அன்னைக்கு கேரளா, தமிழ்நாடுன்னு எல்லா ஊர்ல இருந்தும் முஸ்லீம் மக்கள் வந்திடுவாங்க. இங்க இருக்க எல்லா மக்கள் வீட்டுலயும் தான் தங்குவாங்க. சேர்ந்து தான் வழிபடுவாங்க. காலங்காலமா ஒண்ணும் மண்ணுமா தான் இருக்கோம்.”

மேத்தா பிள்ளை - சிதம்பர வடிவு தர்ஹா :

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாரயணத்தில் மேத்தா பிள்ளை- அப்பா தர்ஹா இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 16 ஆம் தேதி இந்து - முஸ்லீம் இருவரும் ஒன்றிணைந்து கந்தூரியை வழிபடுகின்றனர்.

சடங்கியல் வழிபாட்டு முறையும் - தோற்றக்கதைச் சார்பும் :

மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தூரி விழாவில் இந்து - இஸ்லாமியர் இருவரும் ஒன்றிணைந்தே வழிபடுகின்றனர். முதல்நாளில் மேத்தா பிள்ளை வாழ்ந்த வீடு என்று கருதப்படக்கூடிய இடத்தில் இருக்கும் உரலில் உலக்கையைக்கொண்டு பச்சரிசி மாவு இடிக்கின்றனர். மேத்தா பிள்ளைக்கு புட்டுமாவு இடித்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

அதன்பின் அந்த மாவை வறுத்து தர்காவிற்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செய்யும் போது தங்களது காலணிகளை அகற்றிவிடுகின்றனர். வறுத்த மாவினை சூடுதண்ணீரில் புட்டுமாதிரி அவித்து அதை மேத்தா பிள்ளை உடலுக்கு அருகில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வைக்கின்றனர். இது முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது.

மேத்தாப்பிள்ளை உடலை அவருடைய மனைவிக்கு அடையாளம் காட்டியதற்காக எறும்புக்கு செய்யும் நன்றிக்கடனாக இச்சடங்கை செய்வதாக சொல்கின்றனர். அங்கு சிறிது தூரத்தில் இருக்கக்கூடிய கன்னியம்மன் என்று சொல்லக்கூடிய சிதம்பர வடிவு கோவிலுக்கு சென்று புடவை, வளையல், கண்ணாடி, உதட்டுச்சாயம் போன்றவற்றை படைக்கின்றனர். நேர்ச்சை சோறாக சொல்லப்படும் பெட்டிச்சோற்றினை மேத்தாப்பிள்ளையை கொன்ற பாவத்திற்காக நடுவீட்டுக்கு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே முதலில் சாப்பிடுகின்றனர். அதன்பின்னரே அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

மேத்தாபிள்ளை தர்காவில் குழந்தைவரம் வேண்டியும், காணாமல் பொருள் வேண்டியும் நேர்ச்சைகள் செய்யப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஊரில் இஸ்லாமிய குடும்ப மக்கள் எவரும் இல்லாத பொழுதிலும் கந்தூரிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகின்றனர்.

இங்கு வாழும் தேவர் சமூக மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மேத்தா பாண்டியன், மேத்தா என்றே பெயர் வைக்கின்றனர். கொலை செய்யப்பட்ட மனிதர் தங்களை எதாவது செய்துவிடுவார் என பயத்தின் காரணமாகவும், குற்றவுணர்வின் காரணமாகவுமே இவ்வழிபாட்டு முறைகளை தொடர்ந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்கிறார்கள்.

இந்த தெய்வம் குறித்து பல்வேறு திரிபு வடிவங்கள் இருந்தாலும் இவ்வழிபாட்டுச் சடங்கியல் முறை இக்கதையின் நிகழ்வை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது.

ஒரு இஸ்லாமியர் தம்மை [அ] சமூகத்தை விட பொருளாதாரத்தில் உயர்ந்து நம்மை அதிகாரம் செய்கிறார் என்ற காரணத்தை மையமாக வைத்து அந்த பெண்ணை ஒரு காரணமாக முன்வைத்து கொல்லப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இன்னொரு மறைமுக காரணமாக அந்த சிதம்பர வடிவு பெண்ணிற்கும் அந்த மேத்தா என்ற நபரும் காதலித்திருக்கலாம். அதனால் குடும்பம் சமூக காரணங்கள் கருதி இருவரையும் ஆணவக் கொலை செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதில் முக்கியமாக அந்த பெண்ணின் பெயரை சொல்வதற்கே தயங்கி கன்னியம்மை என்றே சொல்கிறார்கள். மேத்தா பிள்ளை என்று வீட்டில் ஒருவருக்கு பெயர் வைப்பவர்கள் கன்னியம்மை என்று வைப்பதில்லை. ஒரு சிலரே வைக்கிறார்கள். மேத்தாப்பிள்ளைக்கு தர்ஹா கட்டி வழிபடுவர்கள் அந்தப் பெண்ணிற்கு நடுகல் வைத்தே வழிபடுகின்றனர். சிலை வைத்து வழிபடுவதில்லை. மேத்தா பிள்ளை ஊரை மன்னித்தாலும் அந்த கன்னியம்மை என்ற பெண் தன்னை கொன்ற குடும்பத்தை மன்னிக்க வில்லை என்றே சொல்கிறார்கள்.

அந்த பெண் ஊரில் வேறு யாரையும் எதுவும் செய்வதில்லை என்றே சொல்கிறார்கள். ஒரு சமூகத்தின் மீது, சிறுபான்மையினரைச் சேர்ந்தவர் பொருளாதாரத்தாலும் அதிகாரத்தாலும் உயர்ந்திருக்கிறார் என்பதற்காக இக்கொலை நிகழ்ந்துள்ளது. ஒரு பெண்ணை மையமாக வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதாக கருதி அந்தப் பெண்ணையும் சேர்த்து பலியாக்கி இருப்பது காலத்தின் கொடூரம்.

அந்த அநீதி இன்றைக்கும் வெவ்வேறு நிலைகளில் தொடரவே செய்கிறது

படங்கள் : ப. கதிரவன்

(ஆங்காரிகள் வருவார்கள்)