`மறப்பேன்... மன்னிக்க மாட்டேன்!' - விவாகரத்து குறித்து மேரிகோம் முன்னாள் கணவர் ப...
`பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலிக்கும்' - பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா
பாண்டிச்சேரி ( pondichery ) யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று `நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' தலைவர் ( NMMK ) ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாண்டிச்சேரி மாநில மாநாடு அங்குள்ள கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு, கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில அமைப்பாளர் தட்சிணா மூர்த்தி, பாண்டிச்சேரி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் விழுப்புரம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டு தீர்மானங்களை கட்சியின் முதன்மைச் செயலாளர் சுறா வாசித்தார், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செல்வேந்திரன், தமிழக இளைஞர் அணி பொதுச் செயலாளர் எம்.எஸ்.மணி. கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ், மாநில ஊடக பிரிவு செயலாளர் அபுதாஹிர் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

மாநாட்டில், பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ( PLA Jeganath Mishra ) பேசியதாவது, ``அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற லட்சியத்திற்காக அரசியல் கட்சி தொடங்கி மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கட்சியின் பிரதான கொள்கையாக தூய நீர், தூய காற்று, தூய மண்வளம் என்ற கொள்கை முழக்கத்தோடு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கட்சியின் கட்டமைப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
தமிழ்நாட்டில் 50 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் இருப்போம். இதேபோல் பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் எங்களின் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும். எங்களின் ஆதரவு இல்லாமல் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். பாண்டிச்சேரியில் முதல் மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைந்துள்ளது. பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலித்துக் கொண்டிருக்கும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை பிப்ரவரி மாதம் நடைபெறுகின்ற கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம். குறிப்பாக எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சியோடு கண்டிப்பாக நாங்கள் கூட்டணி அமைப்போம் நாங்கள் அமைக்கும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். " இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
பாண்டிச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாண்டிச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுக்கு மக்களாட்சி தத்துவப்படி முழு அதிகார வழங்க வேண்டும்.
கோடை காலங்களில் ஏற்படுகின்ற தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பாண்டிச்சேரியில் உள்ள 4 - மாவட்டங்களிலும் நில உரிமை பட்டா பிரச்னை இருக்கிறது. அதனை ஆய்வு செய்து விரைவாக பட்டா வழங்க வேண்டும்.
பாண்டிச்சேரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. போக்குவரத்தை சீரமைக்க மேம்பாலங்கள்அமைக்க வேண்டும்" என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தேனி ஆனந்தன், பாண்டிச்சேரி மாநாட்டு ஒருங்கிணைப்பு துணை செயலாளர் பாலாஜி உள்பட பாண்டிச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

















