எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார...
ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!
மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. இப்போது துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா புதிய சின்னத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா படுதோல்வியை சந்தித்தாலும் அதற்கு முன்பாக நடந்த மக்களவை தேர்தலில் 9 தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. இப்போது இந்த எம்.பி.க்களுக்கு பா.ஜ.க குறிவைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மராத்வாடாவைச் சேர்ந்த பிரபலமான உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.யாக கருதப்படும் சஞ்சய் ஜாதவ் சமீப காலமாக உத்தவ் தாக்கரே கூட்டும் எந்த கூட்டத்திலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

மும்பையில் உள்ள சேனா பவனில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்கூட சஞ்சய் ஜாதவ் பங்கேற்கவில்லை. அதோடு அவரை உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் இதனை உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,'' சஞ்சய் ஜாதவ் குடும்ப விழாவில் கலந்துகொண்டேன். அவரிடம் போனிலும் பேசினேன். அவர் குடும்ப விழாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அனைத்து மாவட்டங்களின் வழக்கமான கலந்தாய்வுக் கூட்டமாக கட்சி கூட்டம் நடந்தது. இதில் மற்ற அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கட்சி அப்படியே உள்ளது," என்று அவர் கூறினார்.
சஞ்சய் ஜாதவ் மட்டுமல்லாமல் உத்தவ் தாக்கரே கட்சியில் உள்ள மேலும் சில எம்.பி.க்களும் கட்சி செயல்படும் விதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். அர்விந்த் சாவந்த் மற்றும் அனில் தேசாய் போன்ற ஒரு சில எம்.பி.க்களை தவிர மற்ற அனைத்து எம்.பி.க்களும் வேறு கட்சியில் சேருவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
இதற்கான நகர்வுகள் டெல்லியில் வேகமாக நடந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், புதுடெல்லியில் மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கொடுத்த ஒரு விருந்தில் ஹிங்கோலியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் நாகேஷ் பாட்டீல் அஷ்திகர் மற்றும் யவத்மால்-வாஷிம், சஞ்சய் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, சஞ்சய் ஜாதவ் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புகள் அரசியல் சார்பற்றவை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினாலும், "ஆபரேஷன் டைகர்" என்ற திட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே இதற்கான வேலையில் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த செய்தியை ஏக்நாத் ஷிண்டே மறுத்து வருகிறார். ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த தலைவர்கள் சமீப காலமாக சிவசேனா (உத்தவ்) எம்.பி.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளியாகும் செய்திகளை பகிரங்கமாக மறுத்து, அவை ஆதாரமற்றவை என்று கூறி வருகின்றனர்.
அதே சமயம் , இந்த எம்.பி.க்களில் சிலரை ஷிண்டே கோஷ்டி மூலம் அணுகாமல், பாஜக தலைமை நேரடியாக அணுகியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

டெல்லியில் எம்.பி.க்கள் தனியாக சந்தித்து பேசி இருப்பது உத்தவ் தாக்கரேவுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சி தலைமை சரியாக தேர்தல் பிரசாரத்தில் பங்களிப்பு வழங்கவில்லை என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் அதிருப்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேர் பா.ஜ.கவிற்கு தாவினர். அவர்களைத் தொடர்ந்து இப்போது உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்களுக்கு பா.ஜ.க வலை விரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.


















