இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவல...
இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவலம்!
கேரள மாநிலத்தின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்தான இடுக்கி மாவட்டம் இடமலக்குடி பஞ்சாயத்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி முற்றிலும் முடங்கியுள்ளது. ஒருபுறம் 6 மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளமில்லை; மறுபுறம் பஞ்சாயத்து உருவாகி 16 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளுக்காகப் பரிதவிக்கிறார்கள் பழங்குடியின மக்கள்.
மூணார் வனப் பிரிவின் கீழ், முதுவன் பழங்குடியின மக்களுக்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து இடமலக்குடி. கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்தப் பஞ்சாயத்து உருவாக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள 26 பழங்குடியினர் குடியிருப்புகளைச் சேர்ந்த 2,236 மக்களின் நிர்வாக மையமாக இது செயல்பட்டு வருகிறது.
ஆனால், பஞ்சாயத்து பிறந்து ஒன்றரை தசாப்தங்கள் ஓடிவிட்ட பிறகும், அடிப்படை வசதிகளுக்கு இவர்கள் படும் பாடு சொல்லி மாளாதது. இங்குள்ள 26 குடியிருப்புகளில் வெறும் 4 குடியிருப்புகளுக்கு மட்டுமே மின்சார வசதி எட்டியுள்ளது. சோசியுகுடியைத் தவிர, மற்ற எந்தக் குடியிருப்பிற்கும் முறையான சாலை வசதியே இல்லை. ஆறுகளைக் கடக்க இன்றும் தற்காலிக மூங்கில் பாலங்களையே உயிரைப் பணயம் வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர் மக்கள்.
நின்றுபோன நிர்வாகம்... முடங்கிய சம்பளம்!
இப்படி அடிப்படை வசதிகளுக்கே போராடி வரும் நிலையில், கடும் நிதிப் பற்றாக்குறையால் பஞ்சாயத்தின் அன்றாடச் செயல்பாடுகளே முடங்கிப் போயுள்ளன. இங்கு பணியாற்றும் 8 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 6 தற்காலிக ஊழியர்கள் என மொத்தம் 14 ஊழியர்களுக்குக் கடந்த 6 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் நிலுவையில் உள்ளது.

நிதி எங்கே போனது?
இந்த நெருக்கடி குறித்து இடமலக்குடி பஞ்சாயத்துத் தலைவர் பினு எம். விரக்தியுடன் பேசுகையில், "நிதி இல்லாமல் பஞ்சாயத்தை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். எத்தனையோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நிதியும் வரவில்லை" என்கிறார்.
மற்ற உள்ளாட்சி அமைப்புகளைப் போல இங்கு வரி வருவாய் கிடையாது; பழங்குடியினரின் வீடுகளுக்கு வரியும் விதிக்கப்படுவதில்லை. மாநில அரசின் பொது நோக்க நிதி (GPG) மட்டுமே இந்தப் பஞ்சாயத்தின் ஒரே ஆதாரம். கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2020 வரை மாதந்தோறும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கிடைத்து வந்த நிதி, இப்போது வெறும் ரூ.87,500-ஆகச் சுருங்கிவிட்டது. ஆனால், சம்பளம் மற்றும் மதிப்பூதியத்திற்கே மாதம் சுமார் ரூ.6.29 லட்சம் தேவைப்படும் நிலையில், பஞ்சாயத்து எப்படி இயங்கும் என்பதுதான் அதிகாரிகளின் கேள்வியாக உள்ளது.
அரசியல் களம் சூடுபிடிப்பு!
மாநிலத்தின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து நிதி நெருக்கடியால் மூடப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான விவகாரம் என எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் காட்டமாக விமர்சித்துள்ளார். மறுபுறம், இடமலக்குடி பஞ்சாயத்தின் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறை சார்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடும், அடிப்படை வசதிகளும் எப்போதுதான் முழுமையாகக் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் இடமலக்குடி மக்கள்.












