செய்திகள் :

காவிரி: "வாடும் சம்பா பயிர்கள்; ஏக்கருக்கு ரூ 40000 வழங்க வேண்டும்"- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

post image

"டெல்டா மாவட்டங்களில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி
அன்புமணி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையிலிருந்து ஒரு மாதத்திற்கு மேலாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் போதிலும், சாகுபடிக் காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாது என்பதை உணர்ந்ததால், வழக்கமாக அளவை விட பாதிக்கும் குறைவாக சுமார் 7 லட்சம் ஏக்கரில் தான் சம்பா மற்றும் தாளடி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், அந்த பயிர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததைக் காரணம் காட்டி, கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வினாடிக்கு 10,920 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு, படிப்படியாக குறைக்கப்பட்டு, அக்டோபர் 25 ஆம் தேதி 1003 கன அடியாக குறைக்கப்பட்டது. இப்போது வரை அதே அளவில் தான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அது குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றும். இன்னொருபுறம் விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழையும் இதுவரை குறிப்பிடக்கத்தக்க அளவில் பெய்யாதது தான் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா - தாளடி பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதற்கு காரணமாகும்.

`மேட்டூர்' அணை

சம்பா நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காக சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெளியிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, வயல்களில் பாய்ச்சுகின்றனர். வசதி இல்லாத உழவர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து பானைகளில் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றுகின்றனர். ஆனால், சம்பா-தாளடி பயிர்களின் சராசரி வாழ்நாள் 120 முதல் 125 நாள் ஆகும். ஆனால், பெரும்பாலான பயிர்கள் இப்போது 40 முதல் 50 நாள்களை மட்டுமே கடந்துள்ள நிலையில், இன்னும் 70 முதல் 80 நாள்களுக்கு இதே முறையில் தண்ணீர் வழங்குவது சாத்தியமல்ல. அடுத்த சில நாள்களில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டும் தான் சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை (21.11.2026) நிலவரப்படி 61.53 அடியாகவும், நீர் இருப்பு 25.84 டி.எம்.சி-யாகவும் குறைந்து விட்டது. இந்த நீரைக் கொண்டு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். வடகிழக்கு பருவமழையும் குறிப்பிடத்தக்க அளவில் பெய்யாவிட்டால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாததால், நடப்பாண்டில் குறுவை சாகுபடி பெரிய அளவில் செய்யப்படவில்லை. இப்போது சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்காக உழவர்கள் ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர். இத்தகைய சூழலில் சம்பா-தாளடி பயிர்களும் வறட்சியால் வாடி கருகிவிட்டால், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது. வட்டிக்கு கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ள காவிரி பாசன மாவட்ட உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.

உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக அரசு, இப்போது அனைத்து உழவர்களுக்கும் ரூ 75,000 கடனை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பதால், மீதமுள்ள கடன்தொகையை உடனடியாக செலுத்தும்படி கூட்டுறவு வங்கிகளில் இருந்து அழுத்தம் தரப்படுகிறது. சம்பா சாகுபடியில் ஏற்பட்ட இழப்பும் இத்துடன் சேர்ந்து கொண்டால் உழவர்கள் நிலை மோசமாகிவிடும்.

இந்த மோசமான நிலையிலிருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி காவிரி பாசன மாவட்டங்களுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் வாடிய சம்பா-தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முழுமையாக ரத்து செய்வதுடன், உழவர்கள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அளிக்கப்பட வேண்டிய காவல்துறை அணிவகுப்பு மரியாதையை, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி... மேலும் பார்க்க

செக்கானூரணி காவல் நிலைய மரணம்: "முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்?"- கனிமொழி

மதுரை வாலாந்தூரில் லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), நவம்பர் 14-ம் தேதி அதிகாலை காவல் நி... மேலும் பார்க்க

'தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல’ – எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி பதிலடி!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி என என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியாவை முடக்க திட்டமிடும் சீனா" - அமெரிக்க ஆணையம் சொல்வது என்ன?

அமெரிக்க நாடாளுமன்றத்தால் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம்' (USCC). இந்த ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனது வருடாந்திர அறிக்கையை சமர்பிக்கும். அந்த... மேலும் பார்க்க

"கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் துயரில் நிற்கிறார்கள்"- உதயநிதி ஸ்டாலின்

"விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்" என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை வலியுறுத்திய... மேலும் பார்க்க