கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்...
`இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது' - மதுரை உயர் நீதிமன்றம்
சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் மற்றும் ராஜராஜேஸ்வரி கிராஃப்ட்ஸ் தனியார் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கழிவுக் காகிதங்களை இறக்குமதி செய்து வருகிறோம். சுங்கத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அந்த சரக்குகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி துண்டுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சரக்குகளை சுங்கத்துறை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது. மேலும், அவற்றை ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. எனவே, துபாய்க்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது இந்தியாவிலேயே மறுசுழற்சி மற்றும் கழிவுகள் அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கூறியிருந்தன. இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி தெரிவித்தாவது, “மறு ஏற்றுமதி என்பது சரக்குகளை வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவதை குறிக்கும். மூன்றாவது நாட்டுக்கு அனுப்புவது சட்டத்திற்கும், பாசல் (Basel) சர்வதேச உடன்படிக்கையின் நோக்கத்திற்கும் முரணானது. மேலும், வளர்ந்த நாடுகள் தங்களின் கழிவுகளை மற்ற நாடுகளில் கொட்டும் நடைமுறை “கழிவு காலனித்துவம்” (Waste Colonialism) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது.
ஒரு சட்டவிரோதத்தை மற்றொரு சட்டவிரோதத்தின் மூலம் சரிசெய்ய முடியாது. இந்தியாவிலேயே அந்தக் கழிவுகளை அழிக்க அனுமதிப்பது பொதுக் கொள்கைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கத்திற்கும் எதிரானது. துபாய்க்கு மீள்ஏற்றுமதி செய்யவோ அல்லது இந்தியாவிலேயே அழிக்கவோ அனுமதிக்க முடியாது. அந்தக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே மீண்டும் அனுப்பப்பட வேண்டும்.
வழக்குகளில் மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல. கழிவுப் பொருட்களை மறு ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மனுதாரர்கள் மேற்கொண்டு, உத்தரவின் இணைய நகலைப் பெற்ற நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அவை மீண்டும் மூலத் துறைமுகங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கொள்கலன் சரக்கு நிலையங்களுக்கு (Container Freight Stations) தடுத்துவைப்பு மற்றும் தாமதக் கட்டணங்களுக்கான விலைப்பட்டியலை மனுதாரர்களிடம் வசூலிக்கும் உரிமை உண்டு. அதற்கான கட்டணத் தகராறுகள் இருந்தாலும், மறு ஏற்றுமதி பணிகள் தடைபடக் கூடாது. மனுதாரர்கள் கட்டணங்களைச் செலுத்தத் தவறினால், நிலுவைத் தொகையை வசூலிக்க உரிய மன்றங்களை அணுக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.

60 நாட்களுக்குள் கழிவுகள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படாவிட்டால், 61-வது நாளிலிருந்து மறு ஏற்றுமதி செய்யப்படும் நாள் வரை, "மாசுபடுத்தியவரே செலுத்த வேண்டும்" (Polluter Pays Principle) என்ற கொள்கையின்படி, ஒவ்வொரு மனுதாரரும் தினமும் ரூ.50,000 வீதம் சுற்றுச்சூழல் இழப்பீடு செலுத்த வேண்டும். இந்தத் தொகையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும், மனுதாரர்கள் அனைவரும் கூட்டாக JEB CORS நிறுவனத்திற்கு ரூ.4 கோடி மற்றும் கப்பல் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கூடுதல் சரக்குக் கட்டணங்களையும் வழங்க வேண்டும். இதர தகராறுகள் ஏதும் இல்லாத நிலையில், கழிவுப் பொருட்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். பணம் செலுத்துதல் தொடர்பான எந்தத் தகராறும் மறு ஏற்றுமதி நடவடிக்கையை தாமதப்படுத்தக் கூடாது “ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைத்தார்.



















