சென்னை: `நம்ம வீடியோக்களை காட்டிவிடுவேன்' - தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 850 கிராம...
``இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது" - நடிகர் மன்சூர் அலிகான்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகரும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி மறைந்துவிட்டார், தனக்கென ஒரு சிறு சில்லறையைக் கூடச் சேர்க்கத் தெரியாத செங்கொடி வேந்தன் மறைந்துவிட்டார் என்று உலகம் சொல்லாது. மாறாக எளிய வாழ்க்கைக்குச் சிறந்த உதாரணமாக விளங்கியவர் மறைந்துவிட்டார் என்றே சொல்லும். இந்தியாவில் கம்யூனிசம் தோன்றிய காலத்திலேயே நம்மிடையே உதித்து, ஒரு தமிழனாக இந்தச் சமூகத்திற்காக அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு எளிய தலைவரை இப்போது நம்மால் பார்க்க முடிவதில்லை. ஐயா மறைந்துவிடவில்லை. நல்லகண்ணு அவர்கள் எரிக்கப்படப் போவதுமில்லை, புதைக்கப்படப் போவதுமில்லை. அவர் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையுமே இந்த மக்களுக்காக அர்ப்பணித்துவிட்டார். அவர் விதைத்த விதைகள் இப்போது மாணவ, மாணவிகளாக, ஆயிரக்கணக்கான 'இளம் நல்லகண்ணுகளாக' தமிழகமெங்கும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய அரசியல் சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனிடம் இந்த நாடு அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவன் சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம் (இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்). ஜனநாயகம் என்பது பிணநாயகமாக மாறிப்போன இக்காலகட்டம் இப்படியே தொடர்ந்துவிடாது.

இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கி, நாளைய தமிழகத்தில் ஒரு புரட்சியை அவர் மறைவு நிச்சயம் வெடிக்கச் செய்யும். உண்மையான ஜனநாயகம் மலரும்.
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்' என்பதற்கு இணங்க, இந்த மண்ணுலகில் ஒப்பற்ற வாழ்க்கை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். செம்மாந்த இளைஞர்கள் மூலம் உண்மையான ஜனநாயகத்தைப் படைப்பதற்காகவே இந்த மாத்தமிழன் மறைந்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்." என்றார்.













