'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா & க...
'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா & கோவின் ஜாலி சம்பவம்!
சேப்பாக்கத்தில் நடந்த உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது இந்திய அணி.

இந்திய அணி கடந்த போட்டியில் மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. இந்தியாவின் வீக்னஸ் மீது அட்டாக்கை தொடுக்கும் வகையில் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா. இந்திய அணியின் லெவனில் வாஷிங்டன் சுந்தர் வெளியே அமர சாம்சன் உள்ளே வந்திருந்தார். சாம்சனும் அபிஷேக்கும் ஓப்பனர்கள். சாம்சன் இருந்ததால் ஆரம்பத்திலேயே ஸ்பின்னை கொண்டு வராமல் தவிர்த்தது ஜிம்பாப்வே. எந்த பலனும் இல்லை.
இந்திய அணி அட்டாக் மோடில் வெளுத்தெடுத்தது. சாம்சன் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 24 ரன்களை எடுத்து முசரபாணியின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். நம்பர் 3 இல் இஷன் கிஷன் வந்தார். அபிஷேக் சர்மா அதிரடியை விடவில்லை. எவன்ஸ், நகரவா பந்துகளில் தொடர்ந்து சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு சேப்பாக்க ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்ப்ளேயில் மட்டும் இந்திய அணி 80 ரன்களை சேர்த்திருந்தது. பவர்ப்ளே முடிந்ததும் ராசாவும் பென்னட்டும் பந்தை கையிலெடுத்தனர். ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் பார்த்து ஆடும் முடிவை எடுத்தது இந்திய இணை. அடுத்த நான்கு ஓவர்களுக்கு ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்தனர்.

இதற்கு மேலும் பொறுமை காட்டினால் ஜிம்பாப்வேயின் கை ஓங்கும் எனும் சமயத்தில் இருவரும் ஸ்பின்னர்களையும் அட்டாக் செய்தனர். ஆப் சைடில் பீல்டை டைட்டாக வைத்து பேட்டருக்கு வெளியே பந்து திரும்பும்படி சமயோஜிதமாக வீசிக்கொண்டிருந்தார் ராசா. Against the Spin ஆக அடிக்க கொஞ்சம் சிரமம் இருந்தாலும் இஷான் கிஷன் கடுமையாக முயன்று பவுண்டரிகளை விரட்டினார். 24 பந்துகளில் 38 ரன்களை எடுத்த இஷான் ராசாவின் பந்திலேயே அவுட்டும் ஆனார். அபிஷேக் அரைசதத்தை கடந்து மபோசாவின் பந்தில் அவுட் ஆனார்.
டச்சில் இருந்த பேட்டர்கள் அவுட் ஆனதால் இந்திய அணியின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களை திலக் வர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் கையிலெடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேர்த்தது இந்திய அணி. ஹர்திக்கும் திலக்கும் யார்க்கிங் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஜிம்பாப்வே வேகங்கள் வீசினர். எதுவும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. சிக்சர்கள் சரளமாக பறந்தன. திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களையும் ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை எடுத்தது.

ஜிம்பாப்வேவுக்கு 257 என்கிற இமாலய டார்கெட். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடந்த போட்டியிலும் ஜிம்பாப்வேவுக்கு இப்படியொரு டார்கெட்தான். ஆனால், அவசரப்பட்டு ஆடி 18 வது ஓவரில் 147 ரன்களிலேயே ஆல் அவுட் ஆகியிருப்பர். வெல்ல வேண்டும் என்பதை விட கடந்த போட்டியில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே ஜிம்பாப்வே கவனமாக இருந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை விடவே இல்லை. ஆனால், 44 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர். ஓப்பனர்கள் மருமனியும் பென்னட்டும் நின்று ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு வேகமெடுக்க நினைத்தனர். ஆனால், அப்போதே ரன்ரேட் 15 க்கு மேல் சென்றுவிட்டது. மருமனி அக்சர் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். ராசாவும் பென்னட்டும் முடிந்தளவுக்கு அதிரடியாக ஆடி தோல்வி வித்தியாசத்தை குறைக்க நினைத்தனர். சிவம் துபேவின் ஒரே ஓவரில் 26 ரன்களெல்லாம் வந்தது. ஆனால், எட்ட வேண்டிய ஸ்கோர் இமாலயம் என்பதால் இதெல்லாம் போதவில்லை. ராசா அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பென்னட் கடைசி வரை நின்று 97 ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு இது போதவில்லை. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான அடுத்த போட்டியும் இந்தியாவுக்கு Do or Die போட்டிதான்.


















