"இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!"; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்...
T 20 WC: பிரகாசமாகும் இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பு; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணி!
அகமதாபாத்தில் இன்று (பிப். 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் அவர்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
இந்தப் போட்டி இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பையும் தீர்மானிக்கும் வகையில் இருந்ததால், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இது பார்க்கப்பட்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கிங் மற்றும் ஹோப் களமிறங்கி, ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்களில் 29 ரன்களை எடுத்துக் கொண்டு அதிரடியாக தொடங்கினர்.
ஆனால் அந்த வேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்திற்கு சிக்கி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர்.
11 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் ரொமாரியோ ஷெபார்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணைந்து பொறுப்பான கூட்டணியை அமைத்தனர்.
தேவையான நேரத்தில் ரன்களை சேர்த்த இந்த ஜோடி, 89 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 140 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 176/8 என்ற ஸ்கோருக்கு உயர்த்தினர். இதில் அதிகபட்சமாக ஹோல்டர் – 49 ரன்கள், ஷெபார்ட் – 52 ரன்கள் எடுத்திருந்தனர்.

177 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டும் நோக்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, கேப்டன் ஏய்டன் மார்க்ரத்தின் 82 (46) என்ற அதிரடி ஆட்டத்தின் உதவியுடன், ஒரே ஒரு விக்கெட் இழப்பிற்கு 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, முதல் அணியாக செமி ஃபைனலில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தது.
82 ரன்கள் குவித்த மார்க்ரம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது. ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்ததன் காரணமாக இந்தியாவின் நெட் ரன் ரேட் மைனஸில் இருந்த நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஜிம்பாப்வே அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற அபார வெற்றியால் பிளஸில் இருந்த ரன் ரேட், தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் சரிந்துள்ளது.

இப்போது இந்தியா தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்றால், ரன் ரேட் கணக்குகளைப் பொருட்படுத்தாமல் நேரடியாக செமி ஃபைனலுக்கு முன்னேற முடியும். தற்போது இந்தியா தனது இரண்டாவது சூப்பர் 8 போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது.



















