Saidapet-ல் விஜய்யின் நண்பர்; அண்ணா நகரில் கோகுல இந்திரா! | சென்னை மாவட்ட தொகுதி...
T20 WC : ``ஜிம்பாப்வே அணியை பாராட்ட வேண்டும்; ஆனால், ஏமாற்றம் எங்களுக்குத்தான்!" - மிட்சல் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் கடைசி லீக் போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 105 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து எட்டிப் பிடித்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்தத் தொடரை ஒரு ஆறுதல் வெற்றியுடன் ஆஸ்திரேலியா நிறைவு செய்தது.
போட்டிக்கு பின்னர் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ், ``இப்போது எங்கள் மனதில் இருப்பது ஒன்றுதான் — நாங்கள் தவறவிட்ட அந்த வாய்ப்பு. மற்ற அணிகளைப் போலவே நாங்களும் இந்தத் தொடருக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தயாராகி வந்தோம். ஆனால், எங்களால் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

ஒன்றில் தோற்றுவிட்டால்..!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்தப் போட்டியைப் போன்ற ஒன்றில் தோற்றுவிட்டால், தானாகவே அழுத்தம் அதிகரித்துவிடும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள், அதை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். ஆனால், ஏமாற்றம் என்னவோ எங்களுக்குத்தான்.
ஆடுகளத்தின் தன்மைதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. கொழும்பு மைதானத்தில் ஆட்டம் மெதுவாகத்தான் (Slow track) இருந்தது, அதற்குத் தயாராகவே வந்திருந்தோம். இருந்தும், கிடைத்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை. வீரர்களாகவும், ஓர் அணியாகவும் எங்கு முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் ஆராய்வோம்.

தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எப்போதும் உண்டு. இந்த அனுபவத்திலிருந்து இன்னும் வலுவான அணியாக மீண்டு வருவதே எங்கள் நோக்கம்.." எனப் பேசினார்.



















