'டைம்' கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள...
இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? - தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை, திருச்சி தொடங்கி விஜய் போட்டியிடும் தொகுதி என பல ஊர்களின் பெயர்கள் அவ்வப்போது வெளியான நிலையில் தற்போது இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், 2024 பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தவெக.

அந்தக் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் கட்சியில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக சேவகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவிருப்பதாக்ச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அறுபது வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் தயாராகியிருப்பதாகவும் மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும், அதேபோல திருச்சி கிழக்கிலும் போட்டியிடப் போவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே 'வி' சென்டிமென்டில் விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, வேளச்சேரி போன்ற தொகுதிகளில் போட்டியிடப்போவதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது, இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்,
`` ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு முடிவுகள் வேறு மாதிரியாக வந்தால், முதல் கோணலே முற்றும் கோணலாக மாறிவிடும். அதைவைத்தே எங்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதனால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
பெரம்பூர் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் தொகுதியில், பட்டியலினத்தவரும் வன்னியர் சமூகத்தினருமே வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கிறார்கள். அடுத்தபடியாக சிறுபான்மையினர் வாக்குகளும் இருக்கின்றன. இந்த மூன்று சமூக வாக்குகளும் தவெகவுக்கு சாதகமான வாக்குகள். அ.தி.மு.கவிலும் இந்தத் தொகுதியை கூட்டணிக்குத்தான் பெரும்பாலும் ஒதுக்குவார்கள். அதனால் எளிதாக வெல்ல முடியும். தவிர, தொகுதியில் எடுத்த சில சர்வேக்கள் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
அடுத்ததாக திருச்சி கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. தவிர, கிறிஸ்தவ வெள்ளாளர் வாக்குகள் அதிகம். திருச்சியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே சிறுபான்மையின மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனால், திருச்சியும் கைகொடுக்கும் என நம்பி இரண்டு தொகுதிகளில் களமிறங்குகிறோம்.
அடுத்ததாக, எங்கள் பொதுச் செயலாளர் ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் அதிமுகவிலிருந்து எங்கள் கட்சியில் இணைந்த வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியிலும் ஜே.சி.டி.பிரபாகர் அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிடவிருக்கிறார்கள்.

எங்கள் தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகர் திட்டக்குடி தொகுதிலும் அதேபோல, கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும், துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் பெரம்பலூர் தொகுதியிலும், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் சம்பத்குமார் கோவில்பட்டியிலும், லயோலா மணி எழும்பூர் தொகுதியிலும், வீர விக்னேஸ்வரன் மணப்பாறை தொகுதியிலும், டாக்டர் பிரபு காரைக்குடி தொகுதியிலும், நம் எல்லோருக்குமே தெரிந்த செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிட இருக்கிறார்கள்.
அதேபோல, அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ ஶ்ரீதர் வால்பாறை தொகுதியில் போட்டியிட உள்ளார். தவிர, சிறிய கட்சிகள் சிலவும் கூட்டணிக்கு வர இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீட்டு உண்டு'' என்கிறார்கள்.
















