KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜின...
நிலச்சரிவைத் தடுக்க மலைப்பகுதிகளில் பின்பற்றப்படும் `நெய்லிங்க் முறை' - எப்படி பயன் தரும்?!
பொதுவாக நிலச்சரிவானது மலைப்பகுதிகளில் அதிக மழைப்பொழிவு மற்றும் மண் அரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் நீலகிரி, கொல்லிமலை, ஏற்காடு போன்ற பகுதிகளிலேயே நிலச்சரிவு அதிகம் ஏற்பட்டு வருகிறது.
பாறைகள் உருள்வது, மரங்கள் சாய்வது, குடியிருப்புகள் சேதப்படுதல், வனவிலங்குகள் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு பாதிப்புகளை இப்பேரிடர் ஏற்படுத்துகிறது.
இனி இந்தப் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு, "நெய்லிங்" என்ற முறையை நாடு முழுவதிலும் உள்ள மலைப்பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலைப்பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது பற்றி தெரிந்துகொள்ள நெய்லிங் செய்யும் சைட்டுக்குச் சென்றோம்.
அங்கிருந்த சைட் இன்ஜினீயர் நம்மிடம் பேசும்போது,
"நெய்லிங் முறை என்பது மலைப்பகுதிகளில் குறிப்பாக அதிக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் மண்ணை சாய்வாக வெட்டி எடுத்து அதில் 3 மீட்டர் ஆழமும் 2 மீட்டர் அகலத்திலும் ஓட்டையிட வேண்டும். அந்த ஓட்டையின் உள் இருக்கும் தளர்வான மண்ணை மிஷின் மூலம் வெளியே எடுத்த பின்னர் 3 முதல் 5 மீட்டர் நீளமுள்ள அயன்ராடு ஒன்றை உள்ள செலுத்தி அதற்கு மேல் 5 மில்லி மீட்டர் அளவில் சதுர வடிவில் இருக்கும் தகரத்தைப் பொருத்துவதுதான் நெய்லிங் முறை.
அயன்ராடு மற்றும் சதுர தகடு மட்டுமல்லாமல் அதற்கும் மேல் கீரின் நெட் விரித்து அதற்குள் வெட்டி வேர் செடியை வைப்போம். காரணம், வெட்டி வேர் இயற்கையிலேயே மண் அரிப்பைத் தடுக்கக் கூடியது. அதேபோல மண் வளத்தை அதிகரித்து, மண்ணை இன்னும் இறுக்கிப் பிடிக்கும்.
ஆரம்பத்தில் வெட்டி வேர் வைக்கும்போது செடி காய்ந்திடும். தொடர்ந்து வேர் பிடிக்கும் வரை நாங்கள் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருப்போம். தேங்காய் நாருக்கு மேல் வெட்டி வேரை வைத்து மண் போட்டு மூடிவிடுவோம். அது வேர் பிடித்துவிட்டால், வாரத்துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் விட்டால் போதும்.






தளர்ந்த மண்ணை எடுத்து அயன் ராடை போட்டு அதைச் சுற்றி நெட் போட்டு அதற்குள் வெட்டி வேர் செடியை வைப்பதால, நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவுதான். இந்த நெய்லிங் முறையை எல்லா வகை மண்ணிலும் நம்மால் செய்ய முடியாது. மண்ணுடைய தன்மையைப் பொறுத்து அரசிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் இந்த நெய்லிங் முறையைச் செய்ய ஆரம்பிப்போம்.
இதே போன்று ஹைட்ரோ சீடிங் என்ற முறையும் இருக்கிறது. சில இயற்கை மற்றும் ரசாயனப் பொருள்களைக் கொண்டு மண் மீது தெளிக்கிற முறைதான். மழை பெய்யும் போது நாம் ஹைட்ரோ சீடிங் முறை செய்யக் கூடாது. ஹைட்ரோ சீடிங் முறை நிலச்சரிவை தடுப்பதில் குறைவான அளவே பயன் அளிக்கும். எனவே, நெய்லிங் தான் சிறந்த முறையாக இருக்கும்.

நெய்லிங் செய்வதால் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நமக்கு ஏற்படலாம். இந்த முறையினால் இயற்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நாங்கள் இதுவரை செய்த எல்லா பகுதிகளிலுமே நிலச்சரிவு ஏற்படவில்லை. இந்த முறை வெற்றிபெற தொடங்கிவிட்டால் எல்லா மலைப்பகுதிகளிலும் இந்த நெய்லிங் முறையை தொடங்கி விடுவோம்" என்றார்.


















