சென்னை: வாக்குகள் எண்ணும் மையத்தில் `ஜன நாயகன்' படம்; Facebookல் பதிவு செய்த நபர...
"இறுதி ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை; முறைப்படுத்த புதிய சட்டம் தேவை" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது அவர்களை மறித்து சென்ற கல்லுரி பேருந்து மீது மதுபோதையில் இருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் மதுபோதையில் பேருந்தைத் தடுத்து நிறுத்தி, மாணவிகளைத் தவறான வார்த்தைகளால் திட்டி, ஓட்டுநரைத் தாக்கியதோடு பேருந்தையும் சேதப்படுத்தினர். இந்தப் பிரச்னை தொடர்புடைய சங்கர், அஜித் குமார், சந்திரபோஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த மூவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது. இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்பது ஒரு சமூக நடைமுறை என்றாலும், அதில் பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் உரிமையை வழங்க இயலாது.
எனவே, இந்த வழக்கில் விசாரணை அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இதுபோன்ற இறுதிச்சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கற்றதன்மை அதிகரித்து வருவது நீதிமன்றத்திற்குக் கவலை அளிக்கிறது. ஏற்கெனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில், இறுதி ஊர்வலத்திற்கு முன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சாலையில் மலர்கள் அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், இறுதி ஊர்வலங்களின்போது ஒழுங்கற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்களைச் சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றனர். ஆகவே இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் போதுமான கட்டுப்பாடு மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கிய சரியான சட்டங்களைக் கொண்டு வர வேண்டிய தேவை குறித்து தமிழக முதன்மை செயலாளர் ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை ஜூலை 31 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேசமயம் இறுதிச் சடங்குகளை நடத்தும் அடிப்படை உரிமை தேவையற்ற வகையில் குறைக்கப்படவில்லை என்பதையும் அது உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்















