செய்திகள் :

'49 யை தாண்டிட்டாங்களே ஆத்தா.!' - ஆர்.சி.பியின் வெற்றியும் சிறு நெருடலும்!

post image

டெஸ்ட் களத்தின் எல்லாக் காட்சிகளையும் கண்களின் முன் விரிய வைத்து விட்டது ஆர்சிபி வெர்ஸஸ் டெல்லி கேப்பில்ஸ் போட்டி.

இப்போட்டிக்கு முன்பாக ஆடிய நான்கு போட்டிகளில் டெல்லி வென்றது ஆர்சிபியை மட்டுமே என்றால் ஆடிய கடைசி நான்கு போட்டிகளில் ஆர்சிபி தோற்றதும் டெல்லியிடம் மட்டுமே. அதற்கான பழி வாங்கும் படலமாகவே இப்போட்டி அமைந்து விட்டது.

DC vs RCB
DC vs RCB

450+ ரன்களை இரு அணிகளும் இணைந்து அடிக்கும் போட்டிகளை விட டி20-ன் அரிய நிகழ்வுகளான சூப்பர் ஓவர் சூழ் போட்டிகளும் பௌலர்கள் கோலோச்சும் போட்டிகளும் தான் மிக சுவாரஸ்யமானவை. இவை இரண்டையுமே கடந்து இரு நாட்களாக ஐபிஎல் களம் காட்சிப்படுத்தி இருக்கிறது.

3.8° என்ற அளவீட்டில் ஸ்விங் ஆகும் பந்துகள், அடுத்தடுத்து ஸ்லிப் பொஷிசன்களுக்கு வேலை வைத்து அவுட்சைட் எட்ஜை முத்தமிடும் அவுட் ஸ்விங்கர்கள், ஸ்டம்புகளுக்கு குறிவைக்கும் இன்ஸ்விங்கர்கள், பந்துகள் என்ற போர்வையில் `ஹிட் தி டெக்' ரீதியில் அச்சுறுத்தலிலும் அத்துமீறலிலும் ஈடுபடும் அதிவேக புல்லட்கள், 9/6 என ஃபுட் பால் போட்டிகளை நினைவூட்டும் ஸ்கோர் கார்டு என டெஸ்ட் போட்டிக்கான இலக்கணக் குறிப்பிலிருந்து இன்ச் அளவில்கூட மாற்றமின்றி எழுதப்பட்ட மரபுக் கவிதை தான் டெல்லி கேப்பிடல்ஸ் சந்தித்த பவர்பிளே ஓவர்கள்.

பெர்த்தில் நிற்கிறோமா அல்லது லார்ட்ஸில் ஆண்டர்சனை எதிர்கொள்கிறோமா?" , "இது டி20 தானா அல்லது டெஸ்ட் போட்டியின் முதல் நாளா?", என பந்துகளைச் சந்திக்கும் பேட்ஸ்மேன்களையும் பார்க்கும் ரசிகர்களையும் நேரம், இடம் என எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளும்படியான சூழல்தான் டெல்லியின் பவர்பிளே ஓவர்களில் நிலவியது.

"12பி திரைப்படத்தின் முதல் 12 நிமிடங்களைத் தவறவிட்டு விடாதீர்கள்!" என்ற வரிகள் படத்தின் வெளியீட்டின் போதே விளம்பரப்படுத்தப்பட்டது. ஏனென்றால் படத்தில் மொத்த கதை ஓட்டத்தின் ஜீவனும் அதற்குள் தான் பொதிந்திருக்கும். இந்தப் போட்டியில் கூட மொத்த போட்டியுமே அந்த மூன்று ஓவர்களது கால அளவிற்குள் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.

`The Most Underrated Bowler' என்ற பட்டியலில் வைக்கப்பட வேண்டிய பௌலர்களில் புவனேஸ்வர் குமாரும் ஒருவர், எத்தனை பாராட்டினாலும் தகும் எனும்படியான ஸ்பெல்லை இப்போட்டியில் வீசியிருந்தார். அவர் நடத்திய பந்துடனான `உள்ளே வெளியே' விளையாட்டு அதைத்தான் படம் பிடித்தது.

Bhuvi
Bhuvi

நூல்பிடித்தாற் போன்ற அந்த சீம் பொஷிசனும், பௌலர்களை அச்சுறுத்தும்படி அது ஸ்விங் ஆன விதமும் அவரை ஏன் சிறந்த ஸ்விங் பௌலர்களில் ஒருவராகக் கொண்டாட வேண்டுமென்று பறைசாற்றின. புதுப்பந்தில் புதுமுக வீரர் ஷாகீல் பாரக்கிற்கு அவர் வீசிய இன்ஸ்விங்கிங் யார்க்கர் புதுக்கவிதை.

ஹாசில்வுட்டின் பெயரினை ஹாசில்குட் என மாற்றுவதாக ஆர்சிபி நிர்வாகம் ஏகமனதாக முடிவெடுத்திருக்கிறதாம். நடப்பு சீசனில் ஆர்சிபிக்குக் கிடைத்துள்ள இன்னொரு போர் ஆயுதம்! ஸ்விங்கால் மினி ஆண்டர்சனாக புவ்னேஸ்வர் பயமுறுத்தினார் என்றால் அதிவேகத்தில் ஸ்டெய்னை நினைவூட்டி ஹாசில்வுட் டெல்லி கேப்பில்ஸ் அச்சமூட்டினார். கடினமான மற்றும் துல்லியமான டெஸ்ட் லெந்தில், சற்றே கூடுதல் பவுன்சில் வீசப்பட்ட எதிர்கொள்ளவே முடியாத பந்துகள் டெல்லி தரப்பை நிலைகுலைய வைத்தது.

பேட்ஸ்மேன்களின் பேட்டுகள் Disabled செய்யப்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டின் நிலையாமையை சுட்டிக் காட்டுவது போல் கடந்த போட்டியில் 152 ரன்களை அடித்த கேஎல் ராகுலை ஒரு ரன்னிலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ரிஸ்வியை ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஹாசில்வுட் வெளியேற்றி இருந்தார்.

பவர்பிளேயின் பாதி ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் முடிவுரையை புவ்னேஸ்வர் - ஹாசில்வுட் கூட்டணி எழுதி விட்டது. ராணா வெளியேறிய பிறகு மில்லர் - போரெல்லின் போராட்டத்திற்குக் கூட ஆயுள் அற்பம்தான். மூழ்கிய கப்பலுக்கு கடற்பாரை கொண்டு முட்டுக் கொடுக்க முயன்றது போல்தான் இருந்தது இந்தக் கூட்டணியின் ஆட்டம். 17 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சகலத்தையும் முடித்து வைத்து விட்டது ஆர்சிபி படை.

RCB
RCB

264 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட வேதனையிலிருந்தே மீள முடியாத டெல்லி கேப்பில்ஸுக்கு இந்த பவர்பிளே வலி பல போட்டிகளுக்கு நீடிக்கும். PTSD என்பதனை Powerplay Traumatic Stress Disorder என்பது டெல்லி கேப்பில்ஸ் அகராதியில் மட்டும் அர்த்தம் மாற்றம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. டெல்லி ஒரே ஒரு விஷயத்தில் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆர்சிபியின் 49 ரன்கள் எனும் மோசமான அவமானகரமான வரலாற்றையும் தங்கள் பேரில் மாற்றி எழுதிக் கொள்ளும் வேதனையை சுமக்கும் நிலை ஏற்படவில்லை என்பது வரை டெல்லிக்கு ஆறுதல் தான். அதற்குரிய சாத்தியக்கூறுகளை துணிந்து பின்பற்ற ஆர்சிபி தவறி விட்டது.

ஐந்தாவது ஆறாவது ஓவர்களில் தலா இரு ரன்களை மட்டுமே புவ்னேஷ்வரும் ஹாசில்வுட்டும் கொடுத்திருந்தனர். அந்த 12 பந்துகளில் 9 டாட் பால்கள் தான். அந்த மொமெண்டத்தை தவற விடாமல் புவ்னேஷ்வர் அல்லது ஹாசில்வுட் ஆகிய இருவரில் ஒருவரது ஓவரையாவது முடிக்க அனுமதித்து அழுத்தம் ஏற்றியிருந்தால் இன்னமும் ஓரிரு விக்கெட்டுகள் விழுவதற்கான சாளரம் திறந்திருக்கும்.

அப்படியே நடக்காமல் போயிருந்தாலும் ஆர்சிபிக்கு நஷ்டமில்லை. நடந்திருந்தால் 49 சோகக் கதைக்கு ஒரு ஹேப்பி எண்டிங் போடப்பட்டிருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பதிவாகியுள்ள டாப் 3 குறைவான ஸ்கோர்களில், மூன்று போட்டிகளிலுமே ஆர்சிபி ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பதுதான். எது எப்படியோ 9/6 என்ற நிலையிலிருந்து தப்பிப் பிழைத்து 75 ரன்களை எட்டியதே டெல்லி தரப்புக்கு சாதனை தான்.

பவர்பிளேவிலேயே டெல்லியின் கதையை முடித்த ஆர்சிபி தங்களது பவர்பிளே முடிந்த அடுத்த மூன்று பந்துகளுக்குள்ளேயே இலக்கை எட்டி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேபிளின் உச்சியைத் தொடா விட்டாலும் அற்புதமான ரன்ரேட்டை இந்த வெற்றியின் மூலமாக எட்டித் தொட்டிருக்கிறது ஆர்சிபி.

Virat Kohli
Virat Kohli

மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள அணி, பேக் அப் வீரர்களும் கூட சரியாக அமையப் பெற்றுள்ளது, குழு மனப்பான்மை என எல்லாமே ஆர்சிபிக்கு மிகச் சரியாக பொருந்தி வந்திருக்கிறது என்பதனை சுட்டிக் காட்டும் விதமாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆர்சிபி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். வெற்றிக்கான எல்லா சூத்திரங்களையும் அச்சுப் பிசகாமல் பின்பற்றும் அணி என்ற கணக்கில் இன்னொரு கோப்பை மீது கண் வைத்தே நகர்கின்றனர் இந்த டிஃபெண்டிங் சாம்பியன்‌ஸ்.!

8 ரன்களுக்கு 6 விக்கெட்; சீட்டுக்கட்டாய் வீழும் பேட்டர்கள்- சரியும் டெல்லி; மாஸ் காட்டும் ஆர்.சி.பி!

"ஈசாலா கப் நம்தே" கோஷம் பெங்களூரு சின்னசாமியில் மட்டுமல்ல, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும் காது கிழிய ஒலிக்கிறது. 8 ரன்னுக்கு 6 பேர் அவுட் என்றால், அதை 'பேட்டிங் வரிசை' என்பதா அல்லது கால்பந்து ஸ்கோர... மேலும் பார்க்க

'பழைய கோச்; எடுபடாத ஸ்டைல்; க்ளிக் ஆகாத ஓப்பனிங் கூட்டணி!' - CSKவின் சொதப்பலுக்கான அந்த 3 காரணங்கள்!

சென்னை அணி நடப்பு சீசனிலும் மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆடியிருக்கும் 8 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. சென்னை அணி ஆடும் விதத்தை பார்க்கையில் 7 அல்லது 8 போட்டிகளை வென்று ப... மேலும் பார்க்க

சபாஸ்டியன் சாவே: மாரத்தான் வரலாற்றை மாற்றி எழுதிய நாயகன்! 42 கி.மீ-ஐ 1:59:30 நேரத்தில் கடந்து சாதனை!

மனித உடலின் தாங்கும் திறனுக்கு ஓர் எல்லை உண்டா? 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடக்க முடியுமா? என்ற நீண்ட காலக் கேள்விக்கு, 2026, ... மேலும் பார்க்க

CSK vs GT: "சென்னையில் சிஎஸ்கே-வை வீழ்த்துவது எளிதல்ல" - வெற்றிக்குப் பின் சுப்மன் கில் பெருமிதம்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சனின்... மேலும் பார்க்க

நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! - கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், 'உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் ந... மேலும் பார்க்க

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' - குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

"என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?" - இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே "கெத்தா" டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய்... மேலும் பார்க்க