திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா?
தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; இடம் மாறி படுத்திருந்த தொழிலாளர் கொலை செய்யப்பட்ட கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன், சந்திரன், ஜோஸ், மெர்லின், சசி உள்ளிட்ட 10 பேர் தங்கி வீடு கட்டும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தினமும் காலை முதல் மாலை வரை அங்கு கட்டிட வேலை செய்துவிட்டு இரவில் இதே வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் தங்கி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சந்திரனுக்கும், மற்றொரு தொழிலாளரான மெர்லினுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சக தொழிலாளர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இருப்பினும், ஆத்திரம் குறையாத சந்திரன், நள்ளிரவில் திடீரென எழுந்து மெர்லினைத் தேடியுள்ளார். அப்போது அங்கு படுத்திருந்த மனோகரனை மெர்லின் என நினைத்து சென்ட்ரிங் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
கட்டையில் இருந்த ஆணி தலையில் பட்டு பலத்த காயம் அடைந்த மனோகரன் உயிரிழந்தார். இந்த நிலையில், காலையில் எழுந்த சக கட்டிடத் தொழிலாளர்கள் போர்வையால் மூடப்பட்டிருந்த மனோகரனை எழுப்பியுள்ளனர். ஆனால், மனோகரன் சத்தம் ஏதும் கொடுக்காததால் போர்வையை விலக்கிப் பார்த்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் மனோகரன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல் நிலைய போலீஸார், மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனைக் கைது செய்தனர்.

மெர்லினுகும், சந்திரனுக்கும் தகராறு நடந்த நிலையில், இரவில் வழக்கமாக தான் தூங்கும் இடத்தில் படுக்காமல் வேறு இடத்தில் தூங்கியுள்ளார். அத்துடன் போர்வையால் மூடப்பட்டிருந்ததால், தூங்கிக் கொண்டிருந்தது மெர்லின்தான் என நினைத்து மனோகரனைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

















