பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய ...
இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?
வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் மத்தியில் முதுகு வலி பிரச்னை குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்களுக்கு ஏற்படும் முதுகு வலி அதற்கான காரணங்கள் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன்.

"பொதுவாகவே முதுகுவலிப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். குறிப்பாக, 18 முதல் 38 வயது வரையிலானவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. 2020 முதல் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவிட்-19 தொற்றின் தாக்கம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பை பயன்படுத்துவது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது போன்றவையும் ஆகியவை இளைஞர்களுக்கும் முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். இளைஞர்களுக்கு ஏற்படும் தசை மற்றும் மூட்டுப் பிரச்னைகளில், 76 சதவிகிதம் முதுகு வலிதான் உள்ளது.

கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பின் கீழ் பகுதி வரையுள்ள முதுகெலும்பில் ஏற்படும் அசௌகரியம்தான் முதுகு வலி. தசை நார் சுளுக்கு, முதுகெலும்பு பிரச்னை, உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகவும் முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கு படுத்து ஓய்வெடுப்பது சிறந்த தீர்வாகும் என்று நம்பப்படுகிறது. நீண்ட நேரம் படுத்த நிலையில் இருப்பது தசைகளைப் பலவீனப்படுத்தும், மூட்டுகளை விரைப்பாக்கும். இதனால் வலி அதிகரித்து, குணமடைவதையும் தாமதப்படுத்தும்.
எடை தூக்கினால் முதுகு வலி வருமா?
அதேபோல உடற்பயிற்சி செய்தால் முதுகு வலி தீவிரமாகும் என்றும் நம்பப்படுகிறது. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சியை, நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி செய்தால், முதுகுவலி குணமாக வாய்ப்புள்ளது. ஆலோசனையின்றி சுயமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும். அதிக எடையைத் தூக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதில்லை. முறையற்ற முறையில் தூக்குவது முதுகுவலியை உண்டாக்கலாம். எடை அதிகமான பொருள்களை சரியான முறையில் தூக்குவதன் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நிற்க வேண்டும். ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை தசை இறுக்கத்தைப் போக்க ஸ்ட்ரெச்சஸ் செய்யலாம். சரிவிகித உணவு, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவையும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை செய்யும்போது, சரியான உயரத்தில் மேஜை, நாற்காலி இருக்க வேண்டும். செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது கழுத்தை நீண்டநேரம் முன்னோக்கி வளைப்பதையும், குனிந்த நிலையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையை கண் மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். உறங்குவதற்கு மிகவும் மென்மையான மற்றும் மிகவும் கடினமான மெத்தைகளைத் தவிர்க்க வேண்டும்.
தலையணை மீது தலை வைக்கும்போது, கழுத்தை அதிக உயரத்தில் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தசை இறுக்கத்துக்கு வழிவகுக்கும். முதுகு வலியையும் அதிகரிக்கும். எனவே, மன அழுத்தமின்றிப் பணிபுரிய வேண்டும்.

அதேபோல, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்யலாம். இவை உடல் திறனை மேம்படுத்துவதுடன், முகுதுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். நான்கு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான முதுகு வலி, வலி பரவும் உணர்வு, உணர்வே இல்லாமல் போவது, நிற்பது, நடப்பதற்கு கூட சிரமம் ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார் மருத்துவர் சசிதரன்.



















