தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்ன...
Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம். சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

மனித உடலுக்குத் தேவையான 9 முக்கியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) சோயாவில் இருப்பதால், அது ஒரு முழுமையான புரதச்சத்தாக (Complete Protein) கருதப்படுகிறது.
சாதாரண பருப்பு வகைகளில் 100 கிராமிற்கு 20 முதல் 25 கிராம் வரை மட்டுமே புரதம் இருக்கும். ஆனால், சோயாவில் 100 கிராமிற்கு 40% முதல் 43% வரை புரதச்சத்து நிறைந்துள்ளது.
சோயாவில் ஃபிளேவனாய்டு (Flavonoid) எனப்படும் ஒருவகை புரதச்சத்து உள்ளது. இதில் ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. சோயாவில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன.
இந்தக் காரணங்களால்தான் மற்ற பருப்பு வகைகளைவிட சோயா சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அசைவ உணவுகளான மட்டன் போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தைவிட, சோயாவில் மிக உயர்தரமான புரதம் (Good Quality Protein) அதிக அளவில் கிடைக்கிறது.
மெனோபாஸ் (Menopause) காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டைத் தணிப்பதுடன், இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான புரதச்சத்தை சோயா தாராளமாக வழங்குகிறது. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை (Sperm count) அதிகரிக்கவும், ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யவும் சோயா உதவுகிறது.

சோயா உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றாக வேகவைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் (Soya Chunks) வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், செரிமானம் ஆக சிறிது நேரம் எடுக்கும். எனவே, இரவில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சோயாவை ஊறவைத்து அரைத்து அதன் பாலைப் பயன்படுத்தலாம். தற்போது கடைகளில் டெட்ரா பேக்குகளில் (Tetra pack) சோயா மில்க் கிடைக்கிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சோயாவிலிருந்து பெறப்படும் பனீரான டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
டெம்பே (Tempeh) என்பது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் நொதிக்க வைக்கப்பட்ட (Fermented) உணவுப் பொருள். இது முதுமையைத் தடுக்கும் ஆன்டி-ஏஜிங் (Anti-aging) பண்புகளைக் கொண்டது. குறிப்பாக, பாடி பில்டர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சோயாவை எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஷாலோ ஃப்ரை (Shallow fry) செய்து சாப்பிடலாம். சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்து அடை செய்யலாம் அல்லது சுண்டல் போலவும் செய்து சாப்பிடலாம்.
சிலருக்கு சோயா சாப்பிடும்போது அரிப்பு, தடிப்புகள் அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இது மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே ஏற்படும். சோயாவில் நல்ல தரமான புரதம் இருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை விட இதில் கொழுப்புச்சத்து (சுமார் 9 கிராம்) சற்றே அதிகம்.
எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்துவிட்டு, சோயாவையும் நார்ச்சத்துள்ள (Fiber) உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
.jpg)
மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Highly processed) சோயா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், சாதாரணமாகச் சமைக்கப்படும் சோயா சுண்டல் போன்ற உணவுகளை உண்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு குறைவது போன்ற பாதிப்பு ஏதேனும் இருந்தால், அவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது.
மற்றபடி சோயா உணவுகளால் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி (Breast development) அதிகரிக்கும் என்று கூறப்படுவதில் அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. சோயாவுக்கும் மார்பக வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















